‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தின் வரலாறு
தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் அண்ணா பெயர் சூட்டிய நாள் 18.07.1967. அன்று சட்டமன்றத்தில் அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதுடன் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா மிகுந்த கவலையுடன் செயல்பட்டார். இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்குப் பிறகு, அரசியல் சட்டத்திலே மாற்றங்களை செய்ய முடியுமா என்பது குறித்து, இந்திய அரசியல் உயர் மட்டத் தலைவர்களிடம் அவர் கலந்து ஆலோசித்தார். அதில் எந்த தடையும் இருக்காது என்று உறுதியைப் பெற்று அவர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
குறிப்பாக அவர் ஒரு நிகழ்வையும் சுட்டிக்காட்டினார். “பத்து நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில், அங்குள்ள உள்த்துறை அமைச்சர் சவான் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று கூறியே பழக்கப்பட்டவர், பத்து நாட்களுக்கு முன்பு மிகுந்த அக்கறையோடு ‘தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டார் என்பதை அண்ணா தன்னுடைய உரையிலே எடுத்துக் காட்டுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் நேர்ந்த கருத்திருமன் இருந்தார். அவர் இதில் சில திருத்தங்களை நான் கொண்டு வந்திருக்கிறேன் என்று அவர் கூறினார். அவர் கூறியது சில திருத்தங்கள் தானே தவிர தீர்மானத்தை அவர் எதிர்க்கவில்லை இதற்கு நிச்சயமாக ஒத்துழைப்பார்” என்று கூறியதோடு கருத்திருமன் அவர்களிடம் ஒரு கருத்தையும் முன்வைத்தார்.
“என்னுடைய பாட்டனார் காலத்தில் தான் நம்முடைய நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரிடப்பட்டது. எதிர்க்கட்சியில் உட்காந்திருந்த என்னுடைய பாட்டனார் கருத்திருமான் இதை ஆதரித்தார் என்று கருத்திருமன் பேரப்பிள்ளைகளுக்கும், எங்களுடைய பேரப் பிள்ளைகளுக்கும் எதிர்காலத்திலே பேசக்கூடிய நல்ல நிலைமைகளையெல்லாம் இந்தத் தலைவர்களெல்லாம் எண்ணிப் பார்ப்பார்களேயானால், நிச்சயமாக அவர்கள் கூறுகிற சிறு சிறு ஆலோசனைகளை கூட திரும்பப் பெற்றுக் கொண்டு இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள்; ஆதரிக்க வேண்டும்” என்று ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு வேண்டுகோளை வைத்தார். அந்த உணர்வை அன்று அத்தனைத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால், முன்னாள் தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் சட்டமன்றத்தில், இப்படி ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தால் அதில் சிக்கல்கள் வரும், வெளிநாட்டு ஒப்பந்தங்களை திருத்தி எழுத வேண்டி வரும் , என்றெல்லாம் பேசிய போது அண்ணா அதற்கு அழகான பதிலைச் சொன்னார். “வெங்கட்ராமன் அவர்கள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார் என்பதைத்தான் அவரது பேச்சு வெளிப்படுத்துகிறதே தவிர, இதில் சிக்கல்கள் எழ வாய்ப்புகள் இல்லை” என்று மிக சாதுர்யமாக அதற்கு பதிலளித்தார். இறுதியில் அவைத் (சி.பி. ஆதித்தனார்) தலைவரிடம் ஒரு வேண்டுகோளை அண்ணா முன் வைத்தார். “நான் தமிழ்நாடு என்று சொல்வேன் உறுப்பினர்கள் வாழ்க என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அவரின் அனுமதியோடு முதலமைச்சர் அண்ணா ‘தமிழ்நாடு’ என்று கூற, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘வாழ்க’ என்று மூன்று முறை முழக்கமிட வரலாற்று சிறப்பு மிக்க அந்தத் தீர்மானம் நிறைவேறியது.
பெரியார் முழக்கம் 21072022 இதழ்