டெல்லிக்கு காவடி எடுத்தது யார்?
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட கூடியவர்கள் இரண்டு சதவீதத்திற்கும் குறைவுதான், என்று அமைச்சர் நேரு விளக்கம் அளித்திருக்கிறார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு தமிழகத்தில் சொத்து வரி எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதையும் அரசு விளக்கி இருக்கிறது. இதை எதிர்த்து பாஜக போராடப் போகிறதாம், அண்ணாமலை கூறியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் டீசல் விலையையும், பெட்ரோல் விலையையும் உயர்த்திக்கொண்டே போகின்றவர்கள், சமையல் எரிவாயு விலையை உயர்த்திக்கொண்டே போகிறவர்கள் இப்போது இரண்டு சதவீதம் பேர் கூட பாதிக்கப்படாத சொத்துவரி உயர்விற்கு களமிறங்கப் போவதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியும் சொத்து வரியை எதிர்த்து போர்க் குரல் கொடுக்கிறார். அவரும் சொத்து வரியை 300 மடங்கு உயர்த்தி வெளியிட்டவர் தான். பிறகு தேர்தலில் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக அந்த ஆணையை நிறுத்தி வைத்தவர் தான். எதையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிட வில்லை. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை ஏதோ பணம் போடுகின்ற பயணமாக, குடும்ப சுற்றுலா போவதாக கொச்சை படுத்தினார், அவையெல்லாம் எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய் என்பது அம்பலமாயின.
இப்போது முதலமைச்சர் டெல்லிக்குப் போய் அங்கே அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்று, ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு உரிமை கோரிக்கைகளை கொடுத்துள்ளார். “நாங்கள் போனபோது காவடி தூக்கிக்கொண்டு போனோம்” என்று சொன்ன மு.க.ஸ்டாலின், ‘அவர் மட்டும் இப்போது என்ன காவடி தூக்கிக் கொண்டு போனார்’ என்று கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிச்சாமி தூக்கிக்கொண்டு போனது உண்மையிலேயே அடிமைக் காவடி. பழனிச்சாமி மொழியிலேயே கூற வேண்டுமானால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு எடுத்த சென்ற காவடி உண்மையிலேயே போர்க் காவடி, உரிமைக் காவடி. தமிழ்நாட்டுத் திட்டங்கள், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் இவைகளைத்தான் அங்கு மனுவாக கொடுத்து திரும்பியிருக்கிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நிர்மலா சீதாராமன் அமைச்சரக வாயிலில் பல மணி நேரம் காத்திருந்து அவரை சந்திக்கக் கூட அனுமதிக்காமல் அவமானப் படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார் பன்னீர்செல்வம். அதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியிடமிருந்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற்றுத் தந்தோம் என்று கூறுகிறார். ‘நீட்’ ற்கு எதிராக தீர்மானத்தை சட்ட சபையில் கொண்டு வந்ததோடு சரி வேறு எந்த முயற்சியும் முன்னெடுக்கப்பட வில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டது, குழு அறிக்கை வழங்கியது, அறிக்கையின் அடிப்படையில் மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அதை ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் அதைத் திருப்பி அனுப்பினார், மீண்டும் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து, அதை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது, அதையும் ஆளுநர் இன்னும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இப்போது திமுக உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் போர்க்கொடி ஏந்தி போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்காக எடப்பாடி பழனிசாமி இதில் ஏதாவது ஒன்றை செய்ததுண்டா ? 7 பேர் விடுதலையில் கையெழுத்து போட்டு விட்டு கையைக் கட்டி உட்கார்ந்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. திமுக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்கும் முயற்சியை எடுத்துள்ளது. இவற்றில் ஏதாவது ஒன்றில் எடப்பாடி ஆட்சி ஈடுபட்டது உண்டா ? மத்திய ஆட்சிக்கு அடிமை சேவகம் புரிந்தவர்கள் தூக்கிய அடிமை காவடிக்கும்; தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போர்க்கொடி தூக்கி நிற்கின்ற போர்க்காவடிக்கும் வித்தியாசம் உண்டு. சிதறிக் கொண்டிருக்கும் அஇஅதிமுக கட்சியை ஒற்றுமை படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டு இருக்கிறார் பழனிச்சாமி. ஆனால் தமிழக முதலமைச்சர் டெல்லியில் பாஜகவிற்கு எதிராக பாஜக அல்லாத கட்சிகளின் ஒற்றுமைக்கு முன் முயற்சி எடுத்து வருகிறார். அவர் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார். அதிமுக எவ்வளவு பள்ளத்தில் கிடக்கிறது என்பதை இந்த ஒன்றை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும்.
பெரியார் முழக்கம் 14042022 இதழ்