கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர்.

திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றத் தோழர்கள் மறைந்த தலைமைக்குழு உறுப்பினர் மோகன் அவர்களின் இயக்கப் பணிகள் குறித்தும் அவர் விட்டுச் சென்றப் பணியை தொடர்வோம் என்றும் கூறினர்.

பொள்ளாச்சி (ஆணைமலை) : மாலை 6 மணியளவில், கோவை மாவட்டம் ஆணைமலை ஜெ.எம் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர்கள் வெள்ளிங்கிரி, அரிதாஸ், ஆனந்த், உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டத் தோழர்கள் பங்கேற்றனர். வரும் வருடம் ஆணைமலை பகுதியில் 300 பெரியார் முழக்க சந்தாக்களை தருவதாக உறுதியளித்தனர். இரவு உணவு, இரவு தங்குவதற்கு, காலை உணவு அனைத்திற்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

கோவை மாநகரம் : 24.11.2021 அன்று காலை 11 மணியளவில் கோவையில் நிர்மல் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில், மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், நிர்மல்குமார், நேருதாஸ், வெங்கட் உள்ளிட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஈரோடு மண்டலத் திராவிடர் கழக மறைந்த பிரகலாதனுக்குத் தோழர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பின் கலந்துரையாடல் தொடங்கியது. பயண குழுவினர் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி பேசிய பின், நிர்மல் குமார் பேசும் போது, “கோவை மாவட்டத்தின் பல்வேறு இயக்க செயல்பாடுகளை நினைவு கூறியதுடன் நாங்கள் 300 க்கு மேல் பெரியார் முழக்கம் சந்தாக்களை சேர்த்து விட்டதாகவும் மீதம் உள்ள சந்தாக்களை சேர்த்து விரைவில் தருவதாக” உறுதியளித்தார். தோழர்களுக்கு மதிய உணவு நிர்மல் ஏற்பாடு செய்தார்.

திருப்பூர் :  இரவு 7 மணியளவில் திருப்பூர் மாவட்டம், அறிவியல் மன்றத் தலைவர் ஆசியரியர் சிவகாமி இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் முகில்இராசு, ஆசிரியர் சிவகாமி, சங்கீதா, முத்துக்குமார், தனபால், சந்தோஷ் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர். கலந்துரையாடலில் கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், அறிவியல் மன்றம், மாணவர் கழக செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. தோழர்களுக்கு இரவு உணவு முகில்இராசு ஏற்பாடு செய்தார்.

திருச்செங்கோடு : 25.11.2021 அன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் தம்பி தேநீர் விடுதி சோமசுந்தரம் இல்லத்தில் காலை 11 மணியளவில் கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில், முத்துப்பாண்டி, சரவணன், சோமசுந்தரம், பெரியண்ணன், பூபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது, அடுத்தகட்ட இயக்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மதிய உணவு தோழர் சோமசுந்தரம் ஏற்பாடு செய்தார். பயணக் குழு வழி செலவுக்கு ரூ .1000 மாவட்ட கழகம் சார்பாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் நாமக்கல் மாவட்டத் தலைவர் குமாரபாளையம் சாமிநாதனை சந்தித்து பயண நோக்கம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கோபி : மாலை 6 மணியளவில் ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் லா கள்ளிப்பட்டி தோழர் நிவாஸ் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. தோழர்கள் நாத்திகஜோதி, வேனுகோபால், மா.நிவாஸ், கோபி வேலுச்சாமி, உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு நிவாஸ் ஏற்பாடு செய்தார். பயண செலவிற்கு ரூ.1000 மாவட்ட கழகம் சார்பில் வழங்கப்பட்டது. இத்துடன் இரண்டாம் கட்ட பயணம் நிறைவுப் பெற்றது.

பயணத்தில் : 1) புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் ரூ – 10000 கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்களிடம் வழங்கினர். 2) புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு சந்தா சேர்ப்பதுடன் முழக்கத்திற்கான வாசகர் வட்டத்தை நடத்தவும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர். 3) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்ட வரலாறுகளைப் பற்றி அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய வெளியீடு கொண்டு வர வேண்டும் என்றும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 02122021 இதழ்

You may also like...