அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர்.

இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவை: இந்திய உணவுக் கிடங்கு கழகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். தோழர்கள் நேரு தாசு, ஜெயந்த், வெங்கட், இயல், மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல், கார்த்திக், ஸ்டாலின் ராஜா, சுரேஷ், அருண், மேட்டூர் பாலு கலந்து கொண்டனர்.  கோவை சிவானந்தா காலனியில்  மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அம்பேத்கர் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும் வீரவணக்க மும் செலுத்தப்பட்டது. காந்திபுரம் வாழைக் காய் மண்டி பகுதியில் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலையிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், நகர செயலாளர் பூபதி தலைமையில், நகர அமைப்பாளர் தனலட்சுமி முன்னிலையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்கப் பட்டது. இந்த நிகழ்வில் நகர மற்றும் ஒன்றிய கழகத் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சென்னை : திராவிடர் விடுதலைக் கழகத் தின் சென்னை மாவட்டம் சார்பாக 06.12.2018 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க முழக்கம் எழுப்பி ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்.

தொடர்ந்து மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இராயப்பேட்டை பகுதியில் பெரியார் படிப்பகத்தில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு இரண்யா மாலை அணிவித்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், கழகப் பொரு ளாளர் துரைசாமி தலைமையில், மாவட்ட தலைவர் முகில்ராசு, மாவட்ட அமைப்பாளர் கள் அகிலன், சங்கீதா முன்னிலையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்கப்பட்டது. நிகழ்வில் தோழர்கள் பரிமள ராசன், விஜய்குமார், மாதவன், முத்துலட்சுமி, சரஸ்வதி, முத்து, இராமசாமி, தேன்மொழி, அய்யப்பன், ஹரீஷ், நகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்வில் இந்துத்துவத்தை எதிர்த்து பௌத்த மதம் தழுவிய அம்பேத்கரை நினைவு கூர்ந்து தோழர் துரைசாமி  உரையாற்றினார். அகிலன் முழக்கங்களை எழுப்பிட கழக சார்பில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது. மாணவர் கழக அமைப்பாளர்  தேன்மொழி ஜாதியெதிர்ப்பு உறுதிமொழி படிக்க அனைவரும் உறுதியேற்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து சாதி மத மறுப்பு உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து பெரியார் சிலை அருகே எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு (பயங்கரவாத ஒழிப்பு ) ஆர்ப்பாட்டத்தில்  கழகப் பொருளாளர் துரைசாமி கண்டன உரையாற்றினார்.

காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, வேலூர் நகரங்களிலும் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்.

பெரியார் முழக்கம் 13122018 இதழ்

You may also like...