கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர்.

16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர்.

பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின் வரலாறு”-பேராவூரணி பொங்கல் விழாவில் கல்லூரி மாணவி பேசினார்.

பேராவூரணியை அடுத்த பாங்கிராங் கொல்லை ஊரில் விழியழகன்கள் மக்கள் பொதுநல இயக்கத்தின் சார்பில் 25 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திலகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஒட்டு மொத்த ஊர்ப் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து நீட் தேர்வு முறையை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த அனிதா,  ஓங்கிப் புயலால் பாதிப்படைந்து இந்திய அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  பிறகு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நண்பகல் 2 மணிக்கு ஊர் கூடி உணவருந்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கருத்தரங்கில் கல்லூரி மாணவி மா.முத்தமிழ்ச்செல்வி பேசியது, “தமிழக மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்டம் மட்டுமே மனித வாழ்வின் அடையாளம். அந்த போராட்ட உணர்வுடன் வாழ்வதுதான் தமிழின வாழ்வு. தொன்றுதொட்டு இயற்கையோடு போராடிப் போராடித்தான் வேளாண்மைத் தொழில் பழகினோம். ஆனால் இன்று அரசாங்கத்தோடு போராடும் நிலை உள்ளது. எந்த மன்னனிடமும் இயற்கையை அழிக்கும் பண்பு இருக்கவில்லை. ஆனால் மக்களாட்சியில் பொறுப்பில் உள்ள ஆட்சியாளர்கள் இயற்கையை அழிக்கும் நிலையை எடுத்து வருகிறார்கள். அதனால் இப்போது ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி வாழ வேண்டியுள்ளது. இயற்கை யோடு போராடும்போது வெற்றி கிடைத்தது. ஆனால் ஆட்சியாளர்கள் போராட்டங்களை நசுக்கி வருகிறார்கள் இயற்கைக்கு மாறான மீத்தேன், ஐட்ரோகார்பன் போன்ற திட்டங் களால் நமது வாழ்வாதாரமான இயற்கையை அழிக்க நினைக்கிறார்கள். அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டாக வேண்டும். போராட்டமே நமது தமிழர்களின் வரலாறு” என்றார். கருத்தரங்கில் செய்தியாளர் வேத. குஞ்சருளன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், விதை நெல் இலக்கிய அமைப்பின் பொறுப் பாளர் புஷ்பராஜ், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் தா.கலைச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு. பேரூராட்சியின் மேனாள் தலைவர் நா.அசோக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் நடத்தும் 9ஆம் ஆண்டு பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகரில் பெரியார் திடலில் 28012018 நடைபெற்றது.

காலையில் பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கிய கழக தோழர்கள், சிறுவர் சிறுமிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தினர். ஓட்டப் பந்தயம், சைக்கிள் மெதுவாக செலுத்துதல், உறியடி, நீர் சேகரித்தல் உட்பட பல்வேறு போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன்  கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு விரட்டு கலைக் குழுவின் பறையிசையோடு கலைநிகழ்ச்சி தொடங்கியது. பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளின் இடையே திராவிடர் விடுதலைக்கழகத்தின் பணிகளை பண்பாட்டு மீட்டெடுப்பை நினைவு கூர்ந்தனர்.

ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம், கூத்து, படுகர் ஆட்டம், குறவர் ஆட்டம், போர் சிலம்பு, சிலம்பாட்டம் மற்றும் நெருப்பாட்டம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளோடு பகுத்தறிவு பாடல்களைப் பாடி மக்களுக்கு தமிழர் விழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பறைசாற்றினர்.

விரட்டு கலைக்குழுவின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தை 1 தமிழ் புத்தாண்டு 9வது ஆண்டு தமிழர் விழாவில் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி  புத்தாண்டின் சிறப்பை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து மாநில பொருளாளர் துரைசாமி சிறப்புரைக்குப் பின் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சி 11 மணி யளவில் முடிந்தது. மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் தலைவர் முகில்ராசு மாவட்ட அமைப்பாளர் அகிலன் மாநகர செயலாளர் மாதவன் பொங்கல் வழங்கி விழாவினைத் தொடங்கி வைத்து தொடர்ந்து 5 வாரமாக வீதி வசூலுக்கு வந்து மக்களிடம் நம் செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும் என்று எங்களுக்கு  உறுதுணையாக ஊக்கமாக இருந்து கழகப் பொருளாளர் துரைசாமி

மற்றும் மாவட்டத் தலைவர்  முகில்ராசு,

நீதிராசு, தனபால், கருணாநிதி, ராமசாமி, முத்து, நாகராஜ், மணி, கணபதி, ஜெயா ராமசாமி.

கா.க.புதூர்: பொள்ளாச்சி கா.க. புதூரில் தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள் ஜன.15, 2018 அன்று எழுச்சியுடன் நடந்தது. ஆனைமலை காவல் துறை நிகழ்ச்சிக்கு அனுமதி தர மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று நிகழ்ச்சி நடந்தது. வழக்கறிஞர் திருமூர்த்தி வழக்குத் தொடர்ந்து கழகத்துக்காக வாதாடினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி விழாவில் சிறப்புரையாற்றினார். விழாவையொட்டி கோலப் போட்டிகளும், ரோஜா குழுவினர் பறை யிசையும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்புடன் நடந்தன. கா.க.புதூரில் இந்த நிகழ்ச்சியை தடைப்படுத்துவதற்கு மதவெறி அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை செய்தனர். விழாவில் கலவரம் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். பெரும் திரளாக திரண்டிருந்த மக்கள் கூட்டம், மதவெறியர்களின் முயற்சியை முறியடித்தது. தமிழ்நாடு திராவிடர் கழகத் கா.சு.நாகராசன், கழகப் பொறுப்பாளர் வெள்ளியங்கிரி, வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் ஆனைமலைத் தோழர்கள் முயற்சியால் விழா எழுச்சியுடன் நடந்தது.

You may also like...