சூத்திரன்

“தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, மெள்ள மெள்ள வேட்டை நாய் ஆகிவிட்டது” என்பதாக தமிழ் நாட்டுப் பழமொழி ஒன்று உண்டு. அதுபோல் தற்காலத்திய நமது அரசாங்க நிருவாகம் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை விஷயத்தில் வேண்டுமென்றே கொடுமை செய்து கொண்டு வரத் துணிந்து விட்டதென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. அதிலும் இது சமயம் தமிழ் மக்கள் பெரும்பாலும் அரசியல் முதலியவைகளைக் கூட லக்ஷியம் செய்யாமல் தங்கள் சுயமரியாதையைப் பெருக்குவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு உயிரைக் கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் அரசாங்கம் இவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற தன்மையாய் நடக்க கூடியதாய் இருந்தால், சாதாரண காலங்களில் எப்படி நடக்க மாட்டாது என்பதைப் பொதுமக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தடவை கூட்டப்பட்ட சென்னை சட்டசபைக் கூட்டத்தில், ஸ்ரீமான் சல்டானா என்கிற ஒரு சட்டசபை அங்கத்தினர் ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் சென்ற ஆறு மாதங்களில் எத்தனை ஸ்தானங்கள் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட தென்றும், நியமனம் செய்யப்பட்டவர்கள் எந்த எந்த வகுப்பைச் சேர்ந்த வர்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் சொல்லும் முகத்தான் வகுப்புகளைப் பிரித்துக் காட்டியதில் சென்னை அரசாங்கம் ஒரு புது முறையைக் கையாண்டிருக்கிறது. அதாவது :

ஜாதி அல்லது வகுப்பு என்ற தலையங்கத்தில், ஐரோப்பியர், ஆங்கி லோ இந்தியர், இந்திய கிறிஸ்தவர், மகமதியர், ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர் என்று பிரித்துவிட்டுப் பார்ப்பனரல்லாதார் என்பதாக ஒரு உபதலையங்கம் கொடுத்து, விஸ்வ கர்மா, விஸ்வபிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்தி ரன், ஒடுக்கப்பட்ட வகுப்பார், பிற்பட்ட வகுப்பார் என்பதாக பிரித்துக் காட்டி அதற்கு நேராக எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவற்றுள் யார் யாரை எந்த எந்த வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் சூத்திரன் என்பதாக ஒரு வகுப்பு பிரித்துக் காண்பித்திருப்பதானது, சென்னை கவர்ன்மெண்டு, பார்ப்பன ஆதிக்கத்தில் மனுதர்ம சாஸ்திர முறைப்படி நடக்கின்றதென்றே கருத வேண்டி இருக்கிறது. இதை நாம் கண்டிக்காமலும் திருத்தாமலும் இருக்க முடியாது. சூத்திரன் என்றால் என்ன என்பதை அரசாங்கம் இன்னும் அறியவில்லை என்று சொல்லுமானால், அதற்கு நமது நாட்டில் ஒரு மாத்திரை நேரமும் இங்கு வேலையில்லை என்றே சொல்லுவோம். அன்றியும் அந்தக் கணக்குகளைப் பிரித்துக் காண்பித்த இலாக்காவாகிய ஸ்தல ஸ்தாபன நிருவாகம் ஒரு தமிழ் மகன் கையிலிருக்கும் போதே, இந்நாட்டு தமிழ் மக்களைச் “சூத்திரன்” எனப் பெயர் கொடுத்து அதில் சேர்ந்திருப்பதானது கொஞ்சங்கூட பொறுத்துக் கொள்ளக்கூடிய செய்கை அல்ல வென்று சொல்லுவதோடு, அவ்விலாக்காத் தலைவருக்கும், சுயமரியாதையில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் மான மரியாதையை விற்றானாலும் சம்பளம் பெற்றால் போதும் என்கிற கொள்கை உடையார் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

பார்ப்பனரல்லாதார் கட்சி ஆதிக்கத்தின் கீழ் இவ்வுத்தியோகங்கள் நடைபெற்று வந்த காலங்களில் இச்சூத்திரன் என்னும் பதம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து கிடந்தது. பார்ப்பனரல்லாதார் யோக்கியதையைக் கெடுக்கக் காத்திருக்கும் பார்ப்பனர்களின் கைக் குழந்தைகளாகிய சில அடிமைப் பார்ப்பனரல்லாதார் கைக்கு இவ் வுத்தியோகங்கள் போனவுடன் ‘சூத்திரன்’ என்கிற பெயர் சட்டசபை மேஜையின் பேரில் தைரியமாய் தாண்ட வமாட நேரிட்டதுடன் அப்பார்ப்பன அடிமைகளான பார்ப்பனரல்லாத உத்தி யோகஸ்தர்களாலேயே அத்தாண்டவம் ஏற்பட்டதென்றே சொல்ல வேண்டி யிருக்கின்றது. இதைப் பார்த்துக் கொண்டு சட்டசபையில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மற்ற சட்டசபை அங்கத்தினர் களுக்கும் அவர்களது சுயமரியாதை எங்கேபோய் ஒளிந்து கொண்டிருந்தது என்பது நமக்கு விளங்கவில்லை. எனவே தமிழ் மக்கள் மானமும் சுயமரியா தையும் எவ்வளவு அற்ப காரியத்திற்கு விற்கப்படுகின்றது என்பதும், அப்படி விற்ற பார்ப்பனரல்லாதார்களிலும் எப்படிப்பட்டவர்கள் எந்த நிலையிலிருப் பவர்கள் யாராயிருக்கின்றார்கள் என்பதும் இதிலிருந்தே அறிந்து கொள்ள லாம். இம்மாதிரி இழிவான பொருள் கொண்ட வார்த்தையால் ஒரு மகமதி யரையோ ஒரு ஐரோப்பியரையோ அழைத்திருந்தால் இதுவரை அந்த சட்டசபையின் கதி என்னவாயிருக்கும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. மகமதியரும் அய்ரோப்பியரும் மாத்திரம் ஏன் உலகத்தை ஆளுகிறார்கள் என்பதற்கும், தமிழ் மக்கள் ஏன் இவர்களுக்கெல்லாம் எங்கும் அடிமைகளாயிருக்கின்றார்கள் என்பதற்கும் காரணம் கண்டு பிடிக்க இதைவிட வேறு எங்காவது போக வேண்டுமா என்று கேட்கின்றோம். அதிலும் சூத்திரன் என்கிற பதம் மிக இழிவானதாக இருக்கின்றது என்றும் இது எங்கும் காணப்படாமல் இருக்க சத்தியாக்கிரகம் முதலியவைகள் கூட செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் காலத்தில், இச்சத்தியாக்கிரகத்திற்கே ஒரு வெடிகுண்டு புறப்பட்டது போல் “சூத்திரன்” என்று சர்க்காராலேயே அழைக்கப் படுவதாக ஒரு அறிக்கை சட்டசபை யிலிருந்தே வெளிவருவதானால் இச் சூழ்ச்சியின் தன்மையைப் பற்றி என்ன வென்று சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

“சூத்திரன்” என்றால் என்ன பொருள் என்பதைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் பாமர மக்களுக்காவது இப் பெரியார்களின் யோக்கியதை விளங்கட்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சில குறிப்பிடு கின்றோம். வேதத்திலும் மனுதர்ம சாஸ்திரத்திலும் உள்ளது போலவே குறிக்கின்றோம்.

“அதாவது ‘சூத்திரன்’ என்றால் பக்தியினால் பார்ப்பனனுக்கு வேலை செய்கிறவன், யுத்தத்தில் தோற்று அடிமையானவன், பார்ப்பனனின் வைப்பாட்டி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், பாரம்பரியமாய் பார்ப்பன னுக்குத் தொண்டு செய்து வருபவன்” மனு ( 8 – 415)

“இப்படிப் பட்டவனான சூத்திரனுக்கு யோக்கியதை என்ன வென்றால், சூத்திரன் பிராமணனுக்கு தொண்டு செய்தாலல்லது மோக்ஷமில்லை. சூத்திரன் பொருள் சம்பாதிக்கக் கூடாது. மீறி சம்பாதித்து வைத்திருந்தால் பிராமணன் அதை உதைத்துப் பிடுங்கிக் கொள்ளலாம்.” மனு ( 10 – 129) (8- 417 )

“பிராமணனுடன் சரிசமமாய் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் குண்டியை அறுத்து ஊரைவிட்டு துரத்திவிட வேண்டியது” மனு (8 – 281 )

“சூத்திரன் காக்கப்படாத (அதாவது தன்னிச்சையாய் திரிகிற, தானா கவே சம்மதித்த) பிராமண, க்ஷத்திரிய, வைசிய ஜாதி ஸ்திரியைப் புணர்ந்தால் பீஜம் ஆண்குறி முதலியவைகளை அடியோடு அறுத்துவிட வேண்டும். காக்கப்பட்ட ஸ்திரியைப் புணர்ந்தால் தேக முழுவதும் சித்திரவதை செய்து வெட்டி விடுவதுடன் அவனுடைய எல்லாப் பொருள்களையும் பிடுங்கி கொள்ள வேண்டும்” மனு ( 8 – 374 )

“ஆனால் காக்கப்பட்ட சூத்திர கற்புடைய ஸ்திரியைப் பிராமணர் (வலுவில்) புணர்ந்தால் ஆயிரம் பணம் மாத்திரம் அபராதம் போடவேண்டும்”
மனு ( 8 – 333 )

என்பவை போன்றவைகள் ‘இந்து’ மத வேதத்திலும், மனு தர்ம சாஸ்திரத்திலும் பராசர் முதலிய ரிஷிகள் ஸ்மிருதியிலும், புராணங்களிலும் காணப்படும் ‘அநீதிகள்’ கணக்கு வழக்கு இல்லை. இப்படிப்பட்ட பொரு ளையே மத சம்பரதாயத்தில் ‘சூத்திரன்’ என்கிற பெயரைக் கொண்டு நம்மை அழைப்பதென்றால், அதை எப்படி சகிக்க முடியும்? அடுத்த சட்டசபை யிலாவது இப்பெயர்கள் அரசாங்க சம்பந்தமான எந்த காரியங்களிலும் உபயோகப்படுத்தக் கூடாதென்றும் இப்பெயர்களையும், இதற்கு ஆதாரமான வேத சாஸ்திர புராண முதலிய கதைகளையும் பள்ளிக் கூடங்களில் பிள்ளை களுக்குப் பாடப் புத்தகமாக வைக்கக்கூடாது என்றும் ஒரு மசோதா கொண்டு போய் நிறைவேற்றிச் சட்ட மாக்கி அமுலில் வரும்படி செய்ய வேண்டும். அந்தப்படி செய்ய நமது சட்டசபை அங்கத்தினர்களுக்கு யோக்கியதை இல்லையானால், அவர்கள் அங்கிருப்பதில் பயனென்ன என்று கேட்கிறோம்?

சட்டசபை ஸ்தானம் நமது சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காகவா, அல்லது நமது சுயமரியாதையை விற்று தாலூகா, ஜில்லா போர்டு, முனிசிபா லிட்டி முதலியவைகளுக்கு அங்கத்தினராகவும் தலைவர்களாகவும் இருந்து வயிறு வளர்ப்பதற்காகவா என்று கேட்கின்றோம். சட்டசபையில் நமக்குக் கடுகளவாவது மரியாதை இருக்குமானால், அதுவும் நமது சுயமரியாதைக்குக் கொஞ்சமாவது உதவாதா என்கிற எண்ணத்தின் பேரில்தான் இருக்கலாமே ஒழிய மற்றபடி பதவிக்கும் சுகத்துக்கும் அல்ல என்றே சொல்லுவோம். எனவே மகாத்மா காந்தியையும் நாம் வெறுத்துத் தள்ளிய காரணமும் இதுவே அல்லாமல் வேறல்ல. அவர் வருணாசிரமத்திற்கு எவ்வளவு பெரிய தந்திர வியாக்கியானம் செய்தாலும் வருணம் என்பதையும், அது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் எனப்பெயர் கொண்டது என்பதையும், அவர்களுக்குத் தனித்தனி தர்மம் உண்டு என்பதையும் அவரவர் களுக்குண்டான தர்மப்படி அவரவர்கள் நடக்க வேண்டுமென்பதையும், மாற்றி வேறு வியாக்யானம் செய்ய முடியவில்லை என்பதையும் நன்கு உணர்ந்தாய் விட்டது. இனி மகாத்மா இந்தக் கொள்கையுடன் கதரின் மூலமாகவோ வேறு எதன் மூலமாகவோ நம் நாட்டுக்குத் தெருவெல்லாம் பொன் காய்க்கின்ற மரம் உண்டாகும்படி செய்தாலும் கூட அது வெறும் வயிற்றுச் சோற்று பிரசாரமாகுமே தவிர ஒரு கடுகளவும் சுயமரியாதைப் பிரசா ரமாகாதென்பதே நமது முடிவு. இந்தக் கொடுமையைப் பற்றிச் சர்க்காருக்கும், மந்திரிக்கும் சட்டசபை அங்கத்தினர்களுக்கும் தெரியப் படுத்துவதுடன், நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு பட்டணங்களிலும் ஒவ்வொரு கிராமங் களிலும் இருக்கும் சுத்த இரத்த ஓட்டமுள்ள அதாவது ஒவ்வொரு உண்மை யான சூத்திரரல்லாதவர்களுக்கும் ஒரு கூட்டம் போட்டு சூத்திரத் தன்மை என்பது என்ன என்பதை நன்றாய் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி ஒரு கண்டனத் தீர்மானம் செய்து சர்க்காருக்கும் சட்டசபை மெம்பர்களுக் கும் உடனே அனுப்புவதுடன் இக்கொடுமையை ஒழிக்கச் செய்யும் சுயமரி யாதை சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டர்களையும் பதிவு செய்து அனுப்பிக் கொடுக்க வேணுமாய்க் கோருகிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 23.10.1927

You may also like...

Leave a Reply