“தருமத்தின் மேல் தருமம்”
கோவை ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமண அய்யங்கார் மகாத்மா காந்திக்கு பணமனுப்பியதாகவும், மகாத்மா பெற்றுக் கொண்டு வந்தனமனுப் பியதாகவும் பல பத்திரிகைகளில் வெளியாயிருந்தும், பொது ஜனங்கள் அது ஒரு பெரிய துகையாய் அதாவது நாலு ஐந்து ஆறு ஸ்தானங்கள் கொண்ட தாயிருக்கலாம் என்று நினைத்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், இப்போது சரியான இடத்திலிருந்து வந்துள்ள தகவல்படி அத்தொகை மிகச்சிறிய தொகையென்றும் மூன்று ஸ்தானங்கள் கொண்டதுதான் என்றும் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்காய் கொடுத்த கனவான்களின் பெயரெல்லாம் மூடிவைக்கப்பட்டு நூற்றுக்கணக்காய் கொடுத்த கனவான்கள் பெயர் சந்து பொந்துகளிலெல்லாம் அடிபடும்படியாயிருப்பதும், அதுவும் உண்மைக்கு விரோதமாய் ஜனங்கள் நினைத்து ஏமாறும்படி இருப்பதும், பிராமணப் பத்திரிகைகளின் விளம்பரமும், எலெக்ஷன் தந்திரமும்தானே அல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது.
இதுபோலவே ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரின் மற்றொரு தர்மம், அதாவது 2 லக்ஷ ரூபாய் தர்மம்; அதற்குக் காலும் இல்லை தலையும் இல்லை. ஆனால், அத்தர்மத்தை துவக்க ஸ்ரீமதி சரோஜினி வருகிறார்; ஸ்ரீமான் நேரு வருகிறார் என்று அசோசியேட் பிரஸ் முதல் அடிபடுகிறது. எலெக்ஷன் தீர்ந்தவுடன் இந்த சப்தங்கள் அடங்கிப்போகும். எலெக்ஷன் வேஷம் போட்டுக்கொண்டால் அதற்கு தகுந்தபடி ஆடித்தானே ஆகவேண் டும். ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரே ஆடும்போது ஐயோ பாவம்! ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? இவர்கள் பேரில் குற்றம் சொல்லுவதில் பயனென்ன? இவ்விடங்களுக்கு நம் ஆள்களே திரைபிடித்து திரியவும், இதை நம்பி ஏமாறவும் தயாராயிருக்கும் போது அவர்கள் இங்ஙனம் செய்யாமல் வேறு என்ன செய்யக் கூடும்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 14.02.1926