டிப்டி கலெக்டர் உத்தியோகம்
இவ்வுத்தியோகமானது நமது நாட்டின் ராஜ்ய பாரத்திற்குக் கடுகளவு உபயோகமும் இல்லாமல் – வெறும் தபாலாபீசைப் போல் காகிதம் வாங்கி மேலாபீசுக்கு அனுப்புவதும் – அரசாங்க ஜாதியாரின் சுய நன்மைக்காகவே இருந்து நமது பணத்தின் ஒரு முக்கிய பாகத்தைச் செலவு செய்து கொண்டும் வருகிறது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜில்லாவை 4-4 தாலூக் காக்கள் கொண்ட 2 டிவிஷன் அல்லது மூன்று டிவிஷன்களாகப் பிரித்து சப் கலெக்டர் என்பவருக்கு ஒரு டிவிஷனும் ஹெட் அஸிஸ்டெண்டு கலெக்டர் என்பவருக்கு ஒரு டிவிஷனும், அஸிஸ்டெண்டு கலெக்டர் என்பவரை ஜில்லாக் கலெக்டர் என்பவர் தன்னிடம் வைத்துக்கொண்டு அவருக்கு ஒரு சின்ன டிவிஷனுமாய் கொடுத்து வந்தார்கள். அப்படியிருந்தாலும் அவர் களுக்குப் பலவேலைகள் இருக்கும். அதாவது கிரிமினல் கேசு விசாரணை கள், கிரிமினல் அப்பீல்கள், ரிவின்யூž வேலைகள் முனிசிபாலிட்டி மேற் பார்வை, தாலூகா போர்டு மேற்பார்வை, இன்கம்டாக்ஸ் போடும் விஷயம், நீர்க்கூலி விதிப்பது, சிவாஜிநாமா உத்திரவு முதலியவைகள் போடுவது, நேரில் பார்ப்பதும் ஆகிய வேலைகள் இருக்கும். இவருக்குக் கீழே உள்ள தாசில்தா ருக்கும் ரிவின்யூž வேலையுடன் கிரிமினல் வேலையும் நிறைய இருக்கும். இப்போது மூன்று டிவிஷனை, 2-2 தாலூக்காக்கள் கொண்ட 5 டிவிஷன் களாக்கி 5 டிப்டிக் கலெக்டர்களுக்குக் கொடுத்து கலெக்டருக்கும் உதவிக்காக ஒரு டிப்டிக் கலெக்டர் கொடுத்து, ஆக ஜில்லா ஒன்றுக்கு அய்ந்து, ஆறு டிப்டி கலெக்டர்களாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அல்லாமலும், தாசில்தார்களுக்கு இருந்த கிரிமினல் உத்தியோகத் தையும் பிரித்து சப் மாஜிஸ்ட்ரேடு என்றும், டிப்டி தாசில்தார் என்றும் உத்தி யோகங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு அதை ஒப்புவித்துவிட்டு, டிவிஷ னல் ஆபீஸர் அல்லது டிப்டி கலெக்டர்கள் என்பவர்களுக்கு இருந்த ரிவின்யூž வேலைகளையும் பெரும்பாலும் தாசில்தார்களுக்கே கொடுத்து விட்டார்கள். அல்லாமலும் அவர்களுக்கு இருந்த மற்ற வேலைகளும் – அதாவது முனிசிபல் சம்பந்தமான வேலைகள் , தாலூகா போர்டு சம்மந்த மான வேலைகள் இவைகள் முழுவதிலும் டிப்டி கலெக்டருக்கு ஒரு வேலையும் இல்லாமல் போய்விட்டது. இன்கம்டாக்ஸ் வேலையும் டிப்டி கலெக்டர்களிடமிருந்து பிடுங்கி இன்கம்டக்ஸ் ஆபீஸர் என்ற ஜில்லா ஒன்றுக்கு 2 அல்லது மூன்று பேர் வீதம் கொண்ட வேறு டிபார்ட்மெண்டு ஏற்படுத்தி அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டுப் போய்விட்டது. முக்கிய பட்டணங்களில் முதல்வகுப்பு பெஞ்சு கோர்ட்டு ஏற்படுத்தி விட்டதால் கிரிமி னல் அப்பீல்களும் குறைந்து போய்விட்டது. பல தாசில்தார்களுக்கு முதல் வகுப்புக் கிரிமினல் அதிகாரம் கொடுக்கப்பட்டதால் டிப்டி கலெக்டர்கள் விசாரிக்கத் தகுந்த கேஸ்களும் தாசில்தார்களுக்கு அனுப்பத் தகுந்ததாய்ப் போய்விட்டது. இவ்வளவு அதிகாரங்களும், வேலைகளும் குறைந்திருக்க, எண்ணிக்கையும் சம்பளமும் குறையாமல், அதிகாரம் குறைந்து விட்டதால் மேல்வரும்படியும் குறைந்திருக்கும் என்கிற எண்ணங்கொண்டு செய்தது போல் பிறர் நினைக்கும்படி சம்பளங்களையும் ஒன்றுக்கு ஒன்றரையாய் உயர்த்தப்பட்டும் போய்விட்டது. சாதாரணமாய் இப்பொழுது டிப்டி கலெக்டர் என்பதும், டிப்டி கலெக்டர் ஆபீஸ் என்பதும் ஒரு தபாலாபீசைப் போல் கீழே இருந்து வரும் காகிதங்களை முத்திரை போடுவது போல் டிப்டி கலெக்டர் கையெழுத்துப் போட்டு மேலே அனுப்புவதும், மேலே இருந்துவரும் காகிதங்களை ³ வீதம் கீழே அனுப்புவதுமான வேலைகளைத் தவிர டிப்டி கலெக்டர்களுக்கென்று என்ன அசல் (ஒரிஜனல் வொர்க்) வேலை இருக்கிறது? டிப்டி கலெக்டர்கள் 500,600, 800, 1000, 1200 என்று சம்பளங்களை வாங்கிக்கொண்டு ஆபீஸ்களுக்கு வந்து மேஜையின் மேலே முழங்கையை வைத்து, தாவாக்கொட்டையை உள்ளங்கைகளில் தாங்கிக்கொண்டு குறிப்பில் (டைரியில்) என்ன வேலை செய்ததாக எழுதிக்காட்டலாம் என்று யோசிப் பதும், பிரயாணச் செலவு பெற (டிராவலிங் அலவன்ஸ் ) நாளைக்கு எந்த ஊர் போகலாம் என்பதும், கலெக்டர் தயவு பெற யார் பேரில், என்ன விதமான ரகசிய யாதாஸ்து (கான்பிடென்ஷியல் ரிப்போர்ட்) எழுதலாம் என்கிற யோசனையும், கலெக்டர்களுக்கு மீனும், முட்டையும், கோழியும், ஆடும் வாங்கிக் கொடுப்பதும் துரைசானி தயவு சம்பாதிக்க வாசற்படியில் காத்தி ருந்து, மூக்கு நிலத்தில் படும்படி குனிந்து சலாம் போடுவதுமல்லாமல், வேறு ஒரு தொழிலுமே இல்லாமல் போய்விட்டதோடு, அநாவசியமாய் ரிவின்யூž வேலைகளை இரட்டிக்கவும், காலதாமதமாகவும், பொதுஜனங்களுக்கும் ஒரு வேலை ஆகவேண்டுமானால் தாசில்தார் தயவு, தாசில்தார் ஆபீஸ் குமாஸ் தாக்கள், சேவகர்கள் தயவு சம்பாதிப்பதோடல்லாமல் டிப்டி கலெக்டர் தயவும், அந்த ஆபீஸ் குமாஸ்தா சேவகர்கள் முதலியவர்கள் தயவும் பெற வேண்டியது அவசியமான இரட்டிப்பு கஷ்டமும், நஷ்டமும், காலதாமதமும் ஆகும்படியாய் ஏற்பட்டு விடுகிறது.
இந்த ஒரு இலாகாவால் நமது வரிப்பணத்தில் ஏறக்குறைய ரூ.1 – க்கு ஒரு அணா வீதம் அநாவசியச் செலவு ஆகிறது.
அதாவது:- நமது மாகாணத்தில் இது சமயம் ஏறக்குறைய 150 காயம்(பர்மனெண்ட்) டிப்டிக் கலெக்டர்களும், சுமார் 90 அல்லது 100 ஆக்டிங் டிப்டிக் கலெக்டர்களும் இருக்கின்றார்கள். இந்த 150 பேருக்கும் ஆள் 1 – க்கு மாதம் 1-க்கு 300 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப் படுகின்றன. ஆக்டிங் டிப்டி கலெக்டர்களும் மாதம் 300 ரூ. குறையாமல் 500 ரூ. வரை கூட வாங்குகிறார்கள்.
இவர்களுக்காக என்ன குறைந்தாலும் நமது மாகாணத்தில் மட்டும் 150 ஆபீஸ்கள் வரை டிப்டி கலெக்டர் ஆபீஸ் என்ற பெயராலேயே இருந்து வரு கிறது. இவர்களுக்கு குமாஸ்தாக்கள் 80 ரூ. சுமாரில் 2 பேர், 35 முதல் 60 ரூ. சுமாரில் 3 பேர் ஆக 5 குமாஸ்தாக்களுக்கு குறையாமலும், பியூன்கள் என்று சொல்லும் பில்லை சேவகர்கள் 5 பேரும், இவர்களுக்கும் சராசரி µ 75 ரூபாயும், கண்டிஞ்செண்ட் µ 200 ரூபாயும், பிரயாணச் செலவு (டிராவலிங் அலவன்ஸ்) µ 250 ரூபாயும், ஆக ஒரு டிப்டி கலெக்டர் ஆபீசுக்கு மாதத்தில் சராசரி கட்டட வாடகை உட்பட 1600 ரூபாய் வீதம், வருடத்திற்கு சுமார் 20,000 ரூபாயும், இம்மாதிரி 150 ஆபீஸ்களுக்கு 30,00,000 ரூ. (முப்பது லக்ஷம் ரூபாய்) இவர்களுக்குப் பென்ஷன், லீவு வகையறா, ஆக்டிங் டிப்டிக் கலெக்டர்கள் முதலியவைகளும் சேர்த்தால், அதுவும் கிட்டத்தட்ட 4 அல்லது 5 லக்ஷம் ரூபாய்க்கு குறையாது. ஆக, சுமார் வருடம் 1- க்கு 35 லக்ஷம் ரூபாய் செலவாகிறது.
இதல்லாமல் ஜனங்கள் இவர்கள் தயவு பெறக் கொடுக்கும் விலையும், சப்ளையும், மற்றும் பல இழிதொழில்கள் செய்வதன் மூலமும் எவ்வளவோ பணம் செலவாகிறது. ஆக இவ்வளவும் குடிகளுடைய பணம் அநாவசிய மாய்ச் செலவாவதோடு அலைச்சல், ஒழுக்கக் குறைவு எவ்வளவு ஏற்படு கின்றன. இதல்லாமல் இந்த உத்தியோகங்களுக்குப் போட்டி போடுவதன் மூலம் நம்மில் படித்தவர்கள், புத்திசாலிகள் என்று சொல்லத்தக்கவர்கள் எவ் வளவு தூரம் தங்கள் மனச்சாக்ஷியை விற்கவும் அடிமையாகவும் நேரிடு கிறது. இவற்றை நமது நாட்டினர் கவனிப்பதில்லை. நமது நாட்டினரை ஏமாற்றிச் சட்டசபைக்குப் போகும் படித்தவர்கள், புத்திசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பிரதிநிதிகளும் இதைப்பற்றிப் பேசப் பயப்படுகிறார்கள். ஏனென் றால், இம் மாதிரி உத்தியோகங் களைக் கொண்டு தானே தங்கள் இனத்தார்கள் பிழைக்க முடியும்; சர்க்காருக்கும் இம் மாதிரி உத்தியோகமான பல துண்டுகள் கைவச மிருந்தால்தானே கடிக்க வருவதற்கெறிந்தது போல் ஆளுக்கொரு துண்டு வீசலாம். சர்க்கார் ஜாதியார் பிழைக்கவும் படித்த ஜாதியார் பிழைக்க வும் ஏழை ஜனங்கள் பணம் எவ்வளவு வீணாகிறது. இம்மாதிரி அதிகச் செலவும் இன்னமும் போலீஸ் இலாகாவில் சர்க்கில் இன்ஸ்பெக்டர் என்கிற தெண்ட உத்தியோகத்திற்கு அழுகும் செலவும், டெட்லெட்டர் ஆபீஸ் என்று சொல்லத் தகுந்த ரிவின்யு போர்டு ஆபீசும் ஒழிந்தால், கள்ளு வரும்படி நின்றால் சர்க்கார் எப்படி நடைபெறும் என்று யாரும் பயப்பட வேண்டியதே இல்லை.
இதைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லை. இரண்டொரு வருடங் களுக்கு முன்பு டிப்டி தாசில்தார்களைக் குறைத்துவிடலாம் என்று சர்க்காரே யோசனை செய்து பொதுஜன அபிப்பிராயம் கேட்ட போது நம் ஜில்லா சட்ட சபை மெம்பர் ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார் அதை எடுக்கக் கூடாது; எடுத்தால் பிராமணர்களுக்கு வேலை குறைந்து போகும் என்ற கருத்துடன் அதை எதிர்த்து அவ்வுத்தேசத்தைப் பாழாக்கிவிட்டார். எலும்புருக்கு வியாதி மாதிரி இந்த உத்தியோகங்களும் இம்மாதிரி சட்டசபை மெம்பர் ஜாதியும் நமது நாட்டுக்குப் பெரிய ஆபத்தாயிருக்கிறது.
குடி அரசு – கட்டுரை – 21.03.1926