“ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலி”யாரின் சுற்றுப் பிரயாணம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் வகுப்புத் துவேஷம் உண்டாகி விடும் என்று பயப்படுவதாய்ச் சொல்லிக்கொண்டு அதற்கெதிர்ப் பிரசாரம் செய்ய பிராமணர்களுடன் சுற்றுப் பிரயாணம் செய்யும் ஸ்ரீமான் திரு.வி.கலி யாணசுந்திர முதலியார் அவர்கள் ஆங்காங்கு கண்ட காட்சியைப் பற்றி சொல்லும் போதும், எழுதும் போதும், தான் போனவிடங்களில் வகுப்புத் துவேஷங்கள் விளங்கிக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுகிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வெகுகாலமாய் இல்லாமலிருந்தும் நாட்டில் ஏன் வகுப்புத் துவேஷங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்? இம்மாதிரி வகுப்புத் துவேஷங்கள் நாட்டில் இருப்பதற்குக் காரணம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட தினாலா ஏற்படாததினாலா? என்பதை நமது ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தயவு செய்து பிராமணர்கள் இல்லாத சமயத்தில் தனியே உட்கார்ந்து தனது நெஞ்சில் கையை வைத்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 18.04.1926