பார்ப்பன அகராதி – சித்திரபுத்திரன்

காங்கிரஸ் என்றால் என்ன?
வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒடுக்கி பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்துவது.

வெளியேற்றம் என்றால் என்ன
பார்ப்பனரல்லாதார் சமூகத்தையும், அவர்கள் சுயமரியாதையையும் ஒழிக்க மறுபடியும் சில குல துரோகிகளை கூட்டிக்கொண்டு வாக்குத் தத்தத் தை மீறி மனச்சாக்ஷியின் பேரால் கட்டுப்பாடாய் சட்டசபைக்குப் போ வதுதான்.

தொழிலாளிகள் நன்மை என்றால் என்ன?
தொழிலாளிகளை ஏமாற்றி அவர்களுக்குத் தலைவர்களாகி அவர்கள் ஓட்டுப்பெற்று சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெற்று, தொழி லாளர்களையே விட்டு பார்ப்பனரல்லாதாரையும், தலைவர்களையும் ஈனத் தனமாகவும் இழித் தன்மையாயும் திட்டும் படியும் அடிக்கும்படியும் கலகம் செய்யும்படியும் தூண்டி விடுவது.

இந்துமத பரிபாலன சட்டத்தால் இந்துமதம் போய்விடுமே என்று பயப்படுகிறார்கள் என்றால் என்ன?
பார்ப்பனருக்கு வரும்படி போய்விடுமே என்று பயப்படுவது.

மத விஷயத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்களே என்றால் என்ன?
பார்ப்பனரல்லாதார் பிரவேசிக்கிறார்களே என்பது.

சட்டசபை கலையும்போது மத பரிபாலன சட்டத்தை நிறை வேற்றுகிறார்களே என்றால் என்ன?
பார்ப்பனரல்லாதார் எல்லாம் இம்மசோதாவை ஆட்சேபிப்பவர்க ளுக்கு மறுதேர்தலில் ஓட்டுக்கொடுக்க மாட்டார்களே என்கிற பயம் தான்.

பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்றால் என்ன?
பார்ப்பனர் பார்த்து, போடு தோப்புக் கரணம் என்றால் இதோ போடு கிறேன் எண்ணிக்கோ என்று சொல்பவர்களைத்தான்.

பிராமணத் துவேஷமென்றால் என்ன?
பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கு பாடுபடுவதுதான்.

சுயராஜ்யக் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு கட்டுப்படுவது என்றால் என்ன?
பார்ப்பனரல்லாதாரை ஒடுக்க பார்ப்பனர் சொல்லுகிற படியெல்லாம் கொஞ்சமும் தவறாமல் கட்டுப்பாடாய் நடப்பதுதான்.

காங்கிரஸ் துரோகம் என்றால் என்ன?
காங்கிரஸ் பேரால் பார்ப்பனர் பாமர ஜனங்களை ஏமாற்றுவதை வெளியிலெடுத்துச் சொல்வதுதான்.

காங்கிரஸ் தோல்வி என்றால் என்ன?
பார்ப்பனருக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் சட்ட சபையிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் இடம் கிடைக்காமல் போவதுதான்.

பொது ஜனங்களுக்கு ராஜீய ஞானம் இல்லையென்றால் என்ன?
பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுப் போடுவதுதான்.

பொது ஜனங்கள் ஏமாறவில்லை என்றால் என்ன?
பார்ப்பனருக்கு ஓட்டுப் போடுவதுதான்.

பிராமண விசுவாசம் என்றால் என்ன?
கர்ப்பதான முகூர்த்தம் முதல் பிறந்து வளர்ந்து செத்தும், செத்த பிறகும் பார்ப்பனருக்கு பணம் கொடுத்து சடங்கு செய்து பார்ப்பனர்கள் தயவால்தான் மோக்ஷத்திற்கு போகலாம் என்று சொல்வதுதான்.

தரும பூஷணம் என்றால் என்ன?
ஆயிரக்கணக்கான ரூபாயை ஒரு பார்ப்பனரின் காலில் கொட்டி தங்க புஷ்பத்தால் அருச்சனை செய்து அக்காலைக் கழுவி அந்தத் தண்ணீரை சாப்பிடுவது தான்.

செல்லுபடி இல்லாத எலெக்ஷன் என்றால் என்ன?
பார்ப்பனர் தோற்றுப்போகும் எலக்ஷன்கள்தான்.

நல்ல நிர்வாக அதிகாரி என்றால் யார்?
பார்ப்பனருக்கு உத்தியோகம் கொடுப்பவன்தான்.

கொடுமையான அதிகாரி என்றால் யார்?
பார்ப்பன சிப்பந்திகள் செய்யும் அயோக்கியத்தனத்தைக் கண்டிப்பவன்தான்.

மகா அயோக்கிய அதிகாரி என்றால் என்ன?
பார்ப்பன சிப்பந்திகள் லஞ்சம் வாங்குவதைக் கண்டுபிடித்து இனிமேல் இப்படிச் செய்யாதே என்று சொல்லுகிறவன்தான்.

சுதேச வைத்தியம் என்றால் என்ன?
பார்ப்பனர் மாத்திரம் படிக்கத்தக்க வைத்திய முறையும் பார்ப்பனர் களே வைத்தியர்களாயிருந்து தீர்க்கத்தக்க வைத்தியமுமாகிய சமஸ் கிருதத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியம்தான்.

பரதேச வைத்தியம் என்றால் என்ன?
பார்ப்பனரல்லாதார் படிக்கத்தக்கதும் பார்ப்பனரல்லாதார் வைத்திய ராகத் தக்கதுமான தமிழில் உள்ள சித்த வைத்தியந்தான்.

இந்தியாவுக்கு பொது பாஷை என்றால் என்ன?
பார்ப்பனர் மாத்திரம் படித்து இந்தியா பூராவும் சுற்றிப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த உபயோகப்படும் ஹிந்தி பாஷை தான்.

தமிழ்ச்சங்கம் என்றால் என்ன?
அக்கிராசனாதிபதி பார்ப்பான்; உப அக்கிராசனாதிபதி பார்ப்பான்; காரியதரிசி பார்ப்பானாக இருக்கும் சங்கம்தான்.

தமிழ் கலாசாலை என்றால் என்ன?
பிரின்ஸ்பால் பார்ப்பனன், உதவி பிரின்ஸ்பால் பார்ப்பனன், உபாத் தியாயர் பார்ப்பனன், படிக்கும் பிள்ளைகளும் பார்ப்பனப் பிள்ளைகளாய் இருப்பதுதான்.

சமஸ்கிருதத் துரோகிகள் என்றால் யார்?
தனித்தமிழ் பேசுகிறவரும் எழுதுகிறவரும்தான்.

தமிழில் தக்க ஆராய்ச்சியுடையவர் என்றால் யார்?
சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் வந்தது. தமிழுடன் சமஸ்கிருத வார்த்தைகளையும் சேர்த்துப் பேசுவதுதான் தமிழுக்கு அதிக யோக்கிய தையைக் கொடுக்கும் என்று சொல்லுபவர்தான்.

தமிழில் கொஞ்சமும் ஆராய்ச்சி இல்லாதவன் என்றால் யார்?
தமிழ் தனிப்பாஷை, வேறு எந்த பாஷையின் உதவியில்லாமலே அது இருந்திருக்கிறது என்று சொல்லுபவன்தான்.

தேசீயப் பத்திரிகை – யோக்கியமான பத்திரிகை என்றால் எது?
பார்ப்பனர்களுக்கு விரோதமில்லாமல் அவர்கள் செய்யும் அக் கிரமங்களையெல்லாம் மூடி வைத்துவிட்டு காங்கிரசைப் போற்ற வேண்டும், சுயராஜ்யக் கட்சியில்தான் தேசீயத் திட்டம் இருக்கிறது, அதை ஆதரித்து ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கவேண்டும் என்று எழுதுவதுதான்.

யோக்கியப் பொறுப்பற்ற – தேசபக்தி இல்லாத பத்திரிகை என்றால் எது?
காங்கிரசின் தற்கால யோக்கியதையையும் அதில் இருக்கும் பார்ப் பன சூழ்ச்சியையும் வெளியிலெழுதுவதும், சுயராஜ்யக் கட்சி சுத்தமாய் பார்ப்பனக் கட்சி என்று எழுதுவதுமான பத்திரிகைதான்.

குடி அரசு – உரையாடல் – 29.08.1926

You may also like...

Leave a Reply