அக்கம்-பக்கம் பாவம், காமராசர்

அடேங்கப்பா! இது உண்மை தானா? என்று மூக்கில் மீது விரலை வைக்க வேண்டியிருக்கிறது.  எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சென்னை நகரில் திரும்புமிடமெல் லாம் இந்த ஆண்டு காமராசர் பிறந்த நாள் விழா சுவரொட்டிகள்; வண்ணப் பதாகைகள்! அத்தனையும் ஒட்டியது காங்கிரசுக்காரர்கள்தான்! காமராசர் பெயர் படங்களோடு ஒட்டிய பிரமுகர் களின் பெயர்கள்! ‘உயிரே’ என்கிறார் ஒருவர்; தலைவரே என்கிறார் மற்றொருவர்! ‘தெய்வமே’ என்கிறார், இன்னொருவர்! ‘சபதமேற்கிறோம்’ என்கிறார், இன்னொரு தலைவர்!

காமராசர் நூற்றாண்டு சில ஆண்டு களுக்கு முன்பு வந்தது. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக ஒரு விழாக்கூட இவர்கள் நடத்த முன்வரவில்லையே என்று நாம் கேட்க வரவில்லை. கேட்டால் ‘போடா தேசத் துரோகி’ என்று தூற்றுவார்கள்! (அப்போது நமது இயக்கம் தான் பல ஊர்களில் காமராசர் விழாக்களை நடத்தியது) இப்போது போட்டிப் போட்டுக் கொண்டு சுவரொட்டிகள் வருவதற்கு என்ன காரணம்? எல்லாம் வரப் போகிற நாடாளுமன்றத் தேர்தல்தான்! இப்படி நாம் எழுதுவதால் எந்த காங்கிரஸ் காரராவது, “அப்படி எல்லாம் எழுதுவது தவறு; நாங்கள் பதவியை கால் தூசிக்கும் மதிக்காத கொள்கைச் சிங்கங்கள், தெரியுமா?” என்று  மார்தட்டி, தொடை தட்டிக் கிளம்பிடப் போவதில்லை. அப்படிப் பட்ட காங்கிரசு தலைவர் எவரும் இப்போது உயிருடன் இல்லை என்பது நமக்குத் தெரியும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ‘சன்’ தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. “தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் ஏன் வளரவில்லை?” என்பது தலைப்பு. பங்கேற்ற தேசியக் கட்சிப் பிரமுகர்கள் பிளந்து தள்ளினார்கள். ‘1952 ஆம் ஆண்டு தேர்தலின்போது நாங்கள் தான் அதிக பலத்தில் இருந் தோம்’ என்றார், ஒரு பொதுவுடைமை தேசியவாதி. ‘1937ஆம் ஆண்டிலிருந்து 1967 ஆம் ஆண்டு வரை எங்கள் தேசிய காங்கிரசு தான் ஆட்சி செய்தது தெரியுமா?’ என்று பெருமை பேசினார், ஒரு காங்கிரசு தேசியவாதி! இந்து தேசிய வாதி கட்சிப் பிரமுகருக்கு அப்படிப் பெருமை பேச பழைய வரலாறு ஏதும் இல்லை. ஆனாலும் தங்கள் கட்சிதான் தூய்மையானது என்றார். விவாதம் நடந்துகொண்டே இருக்கும்போது, இங்கே, “பேசுகிற நாங்கள் அனை வருமே தேசியவாதிகளாகவே இருக்கிறோம்! திராவிடர் இயக்கவாதி ஒருவர்கூட இல்லையே” என்று ஆதங்கத்துடன் கேட்டார், ஒரு தேசியவாதி. ‘இருக்கிறார், வருவார்’ என்றார், நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

30 நிமிட ‘விவாதங்களுக்குப்’ பிறகு மேட்டூரிலிருந்து பேசினார், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி. அதுவரை சுயப் பெருமை ‘தம் பட்டங்களை’ ஓங்கி ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த தேசியக் கட்சிகளுக்கு ‘கிடுக்கிப் பிடியாக’ வினாக்களை தொடுத்தார், கொளத்தூர் மணி.

“தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களை வெளிப்படுத்தி, அதற்காகப் போராடும் அமைப்புகள் தான் தமிழ் நாட்டில் செல்வாக்கு பெற முடியும்; தேசியக் கட்சிகள் இதைச் செய்யத் தவறு கின்றன. காமராசர் தேசியக் கட்சியில் இருந்தாலும் அவர் தமிழக மக்களின் உணர்வுகளை எதிரொலித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக் கான ஆட்சியை நடத்தினார். மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நிலையில் தென்னக மாநிலங்களை இணைக்கும் ‘தெட்சிணப் பிரதேசம்’ என்ற திட்டத்தை பார்ப்பனர்களும் காங்கிரசுக்குள் இருந்த சிலரும் சூழ்ச்சியாக முன்வைத்தபோது, அதை காமராசர் ஏற்க மறுத்தார்; குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார்; பள்ளிகளைத் திறந்தார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை செயலால் வெளிப் படுத்தியதால் காமராசர் ஆட்சியை பெரியார் ஆதரித்தார்.

கேரளாவின் பொதுவுடைமைக் கட்சி யும், காங்கிரசு கட்சியும் தங்கள் மாநிலத் துக்கு அணுமின் திட்டமே தேவை யில்லை என்கிறது. ஜெய் தாப்பூர் அணு மின் திட்ட எதிர்ப்புப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தலைமை ஏற்று நடத்துகிறது.  தமிழ் நாட்டில் அதே கட்சிகள் கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரிக்கின்றன. கருநாடகா வில் பா.ஜ.க. ஆட்சியானா லும், காங்கிரசு ஆட்சியானாலும் தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீர் உரிமையை தர மறுக்கிறார்கள். இங்கே தமிழகத்தி லுள்ள அதே ‘தேசிய கட்சிகள்’, தங்கள் கட்சிகள் நடத்தும் ஆட்சியைத் தட்டிக் கேட்பதில்லை.  சடங்கிற்காக கண்டித்து அறிக்கைகள் விட்டிருக்கலாம். அது வேறு அவர்களின் கட்சி செயற்குழு விலோ, நிர்வாகக் குழுவிலோ தமிழகத் தின் உரிமைகளுக்கு நியாயமானக் குரல் கொடுத்து அழுத்தம் தந்தார்களா என்பதுதான் கேள்வி?

மண்டல் குழு பரிந்துரை அமுலாக்கப் பட்டபோது வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க. – “தமிழ்நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு கொள்கையை ஆதரிக்கிறோம்” என்றது. இப்போதும் கூட பிரதமர் பதவிக்கு பா.ஜ.க. மோடியை முன்னிறுத்துகிறது, எந்த அடிப்படையில்? மோடி குஜராத்தில் நல்ல நிர்வாகத்தைத் தந்தார் என்று கூறுகிறார்கள். ஆக, தேசிய அரசியலை நிர்ணயிப்பதற்கு மாநிலங்களிலிருந்து தான் ஆட்களைப் பிடித்து வரவேண்டி யிருக்கிறது. எங்கே போனது தேசியம்?”

– என்று வாதங்களை அடுக்கிக் கொண்டே போனார்,

தோழர் கொளத்தூர் மணி.

அவ்வளவுதான். தேசியம் பேசும் கட்சிகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ‘தற்காப்பு’ வாதங்களில் இறங்கிடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள். தோழர் கொளத்தூர் மணி எழுப்பிய கேள்விகளுக்கு இறுதி வரை விடையே இல்லை!

“தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சியை அமைப்போம்” என்று தமிழக காங்கிரசார் தனித்தனியாக பேசக் கிளம்பியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட காமராசர் ஆட்சியை காங்கிரசுக்குள் எந்தக் குழு அமைப்பது என்பதுதான் இப்போது பிரச் சினையே! திருவாளர்கள் வாசன்,

ப. சிதம்பரம், ஈ.வெ.கி.எஸ். இளங்கோ வன், தங்கபாலு, ஞானதேசிகன் என்று பல்வேறு அணியினர் காமராசர் ஆட்சியை அமைப்பதற்கு கடும் போட்டியில் களத்தில் இறங்கி யிருக்கிறார்கள். (பெயர் விடுபட்டிருக்க லாம் பெயர் இடம் பெறாதவர்கள், மன்னிப்பார்களாக. இருட்டடிக்க வேண்டும் என்ற எந்த உள் நோக்கும் எமக்குக் கிடையாது)

1976ஆம் ஆண்டில் இந்திரா பிரதமராக இருந்தபோது அவசர நிலையை பிரகடனம் செய்து, எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் விசாரணை யில்லாமல் ஓராண்டு காலம் சிறையிலடைத்தார். அப்பொழுது காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைக் கூட்டி, அவசர நிலையை எதிர்த்து துணிவாக தீர்மானம் போட்டார். நாட்டின் சுதந்திரத்திற்கு  ஆபத்து வந்து விட்டது என்றார். நாடு இந்த நிலைக்கு வந்து விட்டதே என்று உள்ளம் உடைந்து போன காமராசர், தனது வீட்டுக்குள்ளே முடங்கி, அதே ஆண்டில் அக்டோபர் 2இல் (அதாவது காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று கூறிய காந்தியார் பிறந்த நாளில்) மக்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். அப்போது, இந்திரா காந்தி முகாமிலிருந்து கொண்டு அவசர நிலையை ஆதரித்த ப.சிதம்பரம் போன்றவர்கள், இப்போது காமராசர் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள்! அதேபோல காமராசர் முகாமில் இருந்துவிட்டு, அவரது மரணத்துக்குப் பிறகு கட்சியை கூண்டோடு இந்திராவின் தேசியத்தில் அடகு வைத்தவர்களும் இப்போது காமராசர் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள்.

இந்திராவைப் பிரதமர் பதவியில் உட்கார வைத்தவரே, இந்தப் பச்சைத் தமிழன்தான்! ஆனால், தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கக் கிளம்பினார் இந்திரா காந்தி. அதே இந்திரா வின் குடும்ப வாரிசுகளுக்கு நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து கிடக்கும் “தன்மான வீரர்கள்”தான் காமராசர் ஆட்சியை அமைப்போம் என்று பேசுகிறார்கள். இதே முழக்கம் கடந்த 40 ஆண்டுகளாக காதுகளை துளைத்துக் கொண்டே இருக்கிறது.

காமராசர் ஆட்சியை இவர்கள் அமைக்கும் அதிசயம் எந்த யுகத்தில் வேண்டுமானாலும் நிகழட்டும்! அதற்காக காமராசர் ‘மாட்சியை’க் குலைத்து விடாதீர்களய்யா என்பதே அடியேனின் தாழ்மையான விண்ணப்பம்!

பாவம் காமராசர்! அவரை விட்டுவிடுங்களய்யா!

– கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 18072013 இதழ்

You may also like...