மத ஆய்வரங்கில் கொளத்தூர் மணி உரை: அறிவியலுக்கு எதிராக நிற்கும் மதங்கள்!
மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அறிவியலுக்கு எதிராகவே அனைத்து மதங்களும் இருக்கின்றன என்றார், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி.
இந்தியா புனித தோமா வழித் தமிழ்க் கிறிஸ் துவ நாடே – எவ்வாறு? என்ற தலைப்பில் மூன்று நாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. மகாபலிபுரம் அரசினர் சிற்பக் கல்லூரி அருகிலுள்ள Scripture Union Centre இல் நடைபெற்ற இந்த ஆய்வரங்கின் முதல் நாளான 27.08.2013 செவ்வாய் கிழமை அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்க உரையாற்றினார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் ஆய்வு கருத்துரை வழங்கி, மறுப்புக் கேள்விகளுக்கான பதில் அளித்தார். ஆய்வரங்க முடிவின் தீர்ப்பினை வழங்குவதற்கு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையின் சுருக்கம்:
சமயம் தொடர்பான இந்த ஆய்வரங்கில், சமயத் தொடர்பில்லாத என்னை, ஆய்வு கருத்து வழங்குபவர், கேள்வி கேட்பவர், நடுவர்களாக அமர்ந்திருப்பவர்கள் என அனைவரும் ஆய்வு பட்டம் பெற்ற அறிஞர்களாக இருக்கின்ற மேடையில் கல்லூரி பட்டம் கூட பெறாத எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மதம் – சமயம் என்பதை பொதுவாக நாங்கள் எப்படி பார்க்கிறோம் என்பதை அறிந்தேயிருப்பீர்கள்.
பொதுவாக சமயம் சார்ந்தவர்களை நாம் பார்க்கின்றபோது, தாங்கள் பிறப்பால் என்ன சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்களோ, அதனையொட்டித்தான் அவர்களின் சமய சிந்தனையும், சமயப் பற்றும், சமய நம்பிக்கையும் இருக்கிறது. தங்கள் பெற்றோர்கள் சார்ந்த அந்த சமயத்தைக் குறித்து அதை மேலும் வலுப்படுத்துவதற்கு, அதிலுள்ள புதிர்களை விளக்குவதற்கு, அதனை சார்ந்து செல்வதற்குத்தான் அனைவரும் முயற்சிப்பவர்களாக இருக்கின்றார்கள் என்பது ஒன்று. இரண்டாவதாக நான் புரிந்து கொண்டபடி சமயம் என்பதெல்லாம் பெரும்பாலும் பிறப்புக்கு முன்னாலும் எப்படி இருந்தார்கள், இறப்புக்கு பின்னால் என்னவாகப் போகிறார்கள் என்று பேசுவதாகத்தான் இருக்கின்றது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்கும் காலத்தில் இந்த மானிட சமுதாயத்தில் இருக்கின்ற தீங்குகளை நீக்கி, அவர்கள் நலம் பெற, வளம் பெற, முன்னேற அவற்றுக்காக சிந்திக்க அக்கறை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா சமயங்களையும் உண்டாக்கியவர்கள் அல்லது சமயத்தின் தொடக்க நாயகர்களாக கருதப்படுவர்களெல்லாம் புரட்சியாளர்கள் என்பதுதான் என் கருத்து. நிலவி வருகிற ஒரு சமுதாயத்தில் அது பின்பற்றி வருகிற ஒரு கருத்தை அதில் இருக்கும் மூடத்தனங்களை விலக்கி, அதிலுள்ள நல்லவைகளை எடுத்துக் கொண்டு, மேலும் சில நல்லவைகளை சேர்த்து புதிய ஒரு வழிகாட்டுதலைத்தான் எல்லா மதத் தலைவர்களும் கொடுத்திருக்கிறார்கள். இப்படி மதத்தை உண்டாக்கியவர்கள் எல்லோருமே புரட்சியாளர்கள். ஆனால் அதை நிறுவனமயப் படுத்தியவர்கள் அதை பிற்போக்காக மாற்றிவிடுகிறார்கள் என்பதைத்தான் நாம் பார்க்கின்றோம். சமயத்தின் தலைமையை பிடித்துக் கொண்டவர்கள் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்படி செய்துவிடுகிறார்கள். உணவு, உடை, குடியிருக்கும் இடம், இப்படி நாம் பயன்படுத்துகிற எதுவாக இருந்தாலும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதையே பிடித்துக் கொண்டிருக்கவில்லை; மாற்றிக் கொள்கிறோம். ஆனால், வாழ்க்கை தொடர்பான தத்துவமாக இருப்பதை மட்டும் எப்போதோ சொன்னதை அப்படியே கடைபிடிக்க வேண்டுமா? என்பது எனக்குள் எழும் ஒரு கேள்வி. அதன் தொடர்ச்சியாகத் தான் நான் பார்க்கின்றேன். மதங்களில் பல வேலைகளில் அது உண்டாக்கப்பட்ட காலத்திலிருந்து, அதற்கு எதிராக யார் பேசினாலும் – மாற்றிப் பேசினாலும் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை பல வரலாறுகளில் நாம் காண்கிறோம்.
அறிவியல் என்பது மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்கு மட்டுமின்றி, நம் உடல் உழைப்பை குறைத்து, ஓய்வை அதிகமாக்கி, அதன் வழியாக சமுதாயத்தின் நலனுக்கு திருப்புவதற்கான பலவற்றை அறிவியல் கொடுக்கிறது. இயற்கையை புரிந்து கொள்வதும், இயற்கை விதிகளை அறிந்து கொள்வதும் அதைப் பயன்படுத்தி புதிதாக இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாகவும் அறிவியல் பயன்படுகிறது. பல வேலைகளில் இந்த மதங்கள் அறிவியலுக்கு எதிராக இருந்திருக்கின்றன. கிறித்துவம் உட்பட அனைத்து மதங்களுமே அப்படி எதிராக இருந்திருக்கின்றன.
தாங்கள் நம்பிக் கொண்டிருக்கிற நம்பிக்கையை முற்று முதலாக ஏற்றுக் கொண்டு, அதை பகுத்தறிவு வழியில் ஆய்ந்துக்கூட பார்க்கக் கூடாது என்று விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கின்ற பார்வையோடுதான் இந்த ஆய்வரங்கத்தை நடத்துகிறார்கள் என்று கருதுகிறேன்.
தோமா தமிழகத்திதற்கு வந்து கிறித்துவத்தை பரப்பினார் என்றும், அது இந்து மதமாக இருக்கின்றது என்றும் சொல்லுகிறார், அதற்கு என்ன விளக்கம் அளிப்பார் என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் மற்ற மதங்களைவிட கடுமையான மதமாக இந்து மதத்தை பார்க்கிறோம். காரணம் ஒரு மதம் தத்துவத்தில் என்னவாக இருக்கின்றது, சமய நூல்களில் என்ன இருக்கின்றது என்பதைவிட, அது மக்களால் என்னவாக புரிந்து கொள்ளப் படுகிறது என்பதைத் தான் நாம் பார்க்க வேண்டும் என்று கருதுகிறோம்.
அறிவியல் வேகமாக முன்னேறி வருகின்ற வேலையில், அறிவியல் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தப் பின்னால் மிக நீண்ட நெடுங்காலம் கழித்து தான் அதை மதத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். உலகம் உருண்டை என்பதைகூட ஒரு காலத்தில் கிறித்துவம் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு நடைபெறும் இந்த ஆய்வரங்கின் தலைப்பையொட்டி இந்த தொடக்க உரையை ஆற்ற முடியாமைக்கு எனக்கும் வருத்தம் இருந்தாலும்கூட, நான் மீண்டும் மீண்டும் உங்களை கேட்டுக் கொள்வதெல்லாம் நாம் பிறந்த மதமோ, ஏற்றுக் கொண்ட மதத்தையோவிட மனிதாபிமானம் பெரிது; மனிதன் பெரியவன்; மனித நேயம் உயர்ந்தது என்ற கருத்தோடு மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு – வாழ்வுக்கு துணை நிற்போம் என்று சொல்லி விடை பெறுகிறேன், என்றார்.
பெரியார் முழக்கம் 23102013 இதழ்