தபோல்கர் மசோதா சட்டமானது
நரபலி, மாயமந்திரம், பேய், பில்லி சூன்யம் போன்ற மூடநம்பிக்கைகளைத் தடை செய்யவும், அதில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் மகாராஷ்டிராவில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு தபோல்கர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக அவர் தயாரித்து அனுப்பிய மசோதா, தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வந்தது. பா.ஜ.க., சிவசேனா போன்ற அமைப்புகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வந்தன. இந்த மசோதாவை தாக்கல் செய்யாமல் காலம் கடத்தும் மராட்டிய முதல்வர் பிரித்திவிராஜ் சவானை இரண்டு வாரங்கள் முன் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் தபோல்கர் கடுமையாக விமர்சித்தார்.
அவர் உருவாக்கித் தந்த மசோதாவை அவரது வீரமரணத்தின் நினைவாக மராட்டிய அரசு இப்போது சட்டமாக்கியுள்ளது. தபோல்கர் உருவாக்கிய மசேதாவை சட்டாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21 ஆம் நாள் மராட்டிய அமைச்சரவை கூடி, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. அவசர சட்டத்தின் வழியாக மசோதாவுக்கு மாநில அரசு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. தபோல்கர் தனது வீரமரணத்தின் வழியாக மராட்டிய மக்களுக்கு பெற்றுத் தந்துள்ள வெற்றி இந்த சட்டம்.
2011 ஆம் ஆண்டு ஆக. 10 ஆம் தேதி மராட்டிய மாநில சட்டமன்றத்தில் நரபலி, பில்லி சூன்யம் போன்றவற்றை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மசோதாவை அவர் தயாரித்தார். கடுமையான எதிர்ப்புகளினால் 24 முறை திருத்தப்பட்டு நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்த மசோதாவின்படி பில்லிசூன்யம், தாயத்து மந்திரம் போன்ற மோசடிகளில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். மிருகங்கள் பலியிடுல், நோய் தீர்ப்பதற்கு ‘அற்புத சிகிச்சை’ முறைகளை இந்த மசோதா தடை செய்கிறது. தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து மக்களின் கடும் கோபத்தை தணித்து, அவர்களின் உணர்வுகளை மதிக்க இந்தச் சட்டத்தை உடனே கொண்டு வரவேண்டும் என்று மாநில மூத்த அமைச்சர்கள் முதல்வருக்கு அழுத்தம் தந்தனர். அதன் பிறகு, அவசர சட்டம் பிறப்பிக்க முதல்வர் ஒப்புக் கொண்டார். அத்துடன் தபோல்கர் படுகொலையைத் தொடர்ந்து மாநிலத்தில் செயல்படும் சில மதவெறி அமைப்புகளை தடைசெய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெரியார் முழக்கம் 29082013 இதழ்