தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழ்நாட்டில் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி உருவாக காய் நகர்த்தி வரும் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மோடியை நியாயப்படுத்தி, ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் எழுதிய கட்டுரைக்கு மறுப்புரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஜீ.வி.’க்கு எழுதிய மறுப்பு இது. 9.10.2013 அன்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?’ என்ற தலைப்பில்

அந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறு சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தை

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

இந்தியாவில் அடுத்து அமையப் போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்று மலரப் போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை.

ஆனால், “இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும். அதற்குத் தகுதியானவர் அவர் ஒருவரே” என்ற பிம்பம் திட்டமிட்ட வகையில் கட்டி எழுப்பப்படுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் இந்தக் கருத்தைப் பரப்புவதில் உற்சாகம் காட்டி நிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பெருமுதலாளிகளும் இதன் பின்னணியில் இருப்பது கண்கூடு. இந்தத் ‘திருப்பணி’யில் நாம் மிகவும் மதிக்கும் தோழர் தமிழருவி மணியனும், தன்னை இணைத்துக் கொள்ள முன்வந்திருப்பது நமக்கு வியப்பையும் வேதனையையும் தருகிறது. சுயநல சந்தர்ப்பவாத, பதவி வெறி அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவர், மோடியை பிரதமராக்குவதற்குக் கூட்டணி வியூகங்களை வகுத்துத் தந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ‘புதிய அரசியல் பூத்துக் குலுங்குவதற்கும்’ பா.ஜ.க.வுடனான அணியே அவசியம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். யாரோடு யார் கூட்டணி சேர வேண்டும் என்பது பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால், நரேந்திர மோடியையும் பா.ஜ.க.வையும் முன்னிறுத்துவதால் உருவாகும் ஆபத்துகளைப் பற்றியே நாம் கவலைப்படுகிறோம்.

முதலில், நரேந்திர மோடி பா.ஜ.க. தேர்வு செய்த பிரதமர் வேட்பாளர் என்பதைவிட, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ் .எஸ் .சின் செல்லப் பிள்ளையாகக் களமிறக்கப்பட்டவர் என்பதே உண்மை. காந்தியார் முன் வைத்த ‘தேசியத்தை’, ‘போலி தேசியம்’ என்று ஒதுக்கித் தள்ளிய ஆர்.எஸ் .எஸ் . மனிதர்களைப் பிளவுபடுத்தும் மதவாதத்தை – உண்மையான தேசியமாக வரையறுக்கிறது. பெரும்பான்மை மக்களின் சமூகம், மொழி, இனம் மற்றும் வர்க்க அடையாளங்களைப் புறந்தள்ளிவிட்டு, மதப் பெரும்பான்மைவாத அரசியலை முன்னிறுத்தித் தேர்தல் ஆதாயம் அடைய முனைகின்றனர். மதச்சார்பற்ற, ஜனநாயக தேசியத்துக்கு மாற்று – மதவாதத்தை முன்னிறுத்தும் வகுப்புவாத தேசியம் என்போருக்கு ஆதரவாக தமிழருவி மணியன் வாதாடத் துணிவது மிக மிக ஆபத்தானது.

தமிழகத்தில் 15 விழுக்காடு வாக்காளர்கள் மோடியை ப் பிரதமராக்கத் துடித்துக் கொண்டிருப்பதாக மணியன் வரையும் சித்திரம் அடிப்படை ஆதாரமற்றது. தமிழகத் தேர்தல் களத்தில் கடைசியாக நடந்த 2011 தேர்தலில்கூட பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 2.2 விழுக்காட்டைத் தாண்டவில்லை. அது 15 விழுக்காடாகத் திடீரென ஊதிப் பெருத்து நிற்கிறது என்பதற்கு எந்தச் சான்றுமில்லை.

“ராமன் கோவில் விவகாரத்தை வளர்த்தெடுக்கக்கூடாது, பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தக் கூடாது, காஷ்மீருக்குத் தனி அந்தஸ் து வழங்கும் 370 ஆவது பிரிவை ரத்து செய்யக் கூடாது” என்று பா.ஜ.க.விடம் நிபந்தனை விதிக்கலாம் என்றும் மணியன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

திருச்சியில் நடந்த இளந்தாமரை மாநாட்டில் பேசிய மோடியே இதற்குப் பதில் கூறி விட்டார். காஷ்மீருக்குத் தனிச் சலுகை வழங்கியதை மட்டுமல்ல, இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதையேகூட அவர் எதிர்த்திருக்கிறார். இதுவே ஆர்.எஸ் .எஸ் .சின் சித்தாந்தத் தந்தை கோல்வாக்கரின் கருத்து.

இந்த மூன்று விவகாரங்களையும் கையிலெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி தந்துதான் 1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் கூட்டணியை அமைத்தார். அவற்றில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பங்கேற்றன. அந்தக் காலகட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த தமிழருவி மணியன், மதவாத பா.ஜ.க.வின் உறுதிமொழிகளை ஒருபோதும் நம்ப முடியாது. இந்தியாவின் ஆட்சி அதிகாரம் காவிப் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்று தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று அனல் பறக்கப் பேசியது நினைவுக்கு வருகிறது. கொடுத்த உறுதிமாழிகளையே நம்புவதற்கு உகந்ததல்ல என்று புறந்தள்ளியவர், இப்போது புதிதாக உறுதிமொழியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும், அதை நம்பி மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த n வண்டும் என்பதும் நாட்டை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும்?

அயோத்தியில் பூஜை மட்டுமே செய்வோம் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதி கூறி அனுமதி பெற்ற பா.ஜ.க.தான், பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது. மசூதி இடிக்கப்பட்டவுடன் அதை வன்மையாகக் கண்டித்த அத்வானிதான், பிறகு அதை நியாயப்படுத்தினார். குஜராத் இனப் படுகொலையின்போது, மோடி பதவி விலக வேண்டும், ராஜ தர்மத்தைப் பின்பற்ற மோடி தவறிவிட்டார். எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன் என்று கண்ணீர் வடித்த வாஜ்பாய்தான், பிறகு மோடி பதவியில் தொடர்வதை அனுமதித்தார். இவர்கள் தருகிற உறுதிமொழிகளை நம்பி ஏற்க முடியுமா என்பதை தமிழருவி மணியன்தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. மீது நமக்கும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. கொள்கை வழி அரசியல் இலட்சியங்களை வளர்த்தெடுக்க முனையாமல், சந்தர்ப்பவாத – தனிமனித ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தியவர்கள் என்பதும் உண்மைதான். ஆனாலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பீட்டு அளவில் ஆராய்ந்தால், சமூக நீதி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது என்பதே உண்மை. தமிழ் மண்ணில் பெரியார் உள்ளிட்ட பல முன்னோடிகள்தான் இதற்கான அடித்தளத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள். அதன் காரணமாகவே மக்களிடம் பகையுணர்ச்சியைக் கட்டி எழுப்பிடத் துடிக்கும் மதவாத சக்திகள் தமிழகத்தில் ஆழமாகக் கால்பதிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் வைகோ போன்ற தலைவர்களையும், இதுவரை, மதவாத அடையாளத்தைத் தனது கட்சிக்குள் நுழைத்திடாத விஜயகாந்த் போன்றவர்களையும் ஆர்.எஸ் .எஸ் .ஸோடு அணி சேர்க்க அழைத்து தமிழகத்தில் காவிக் கூட்டத்தின் ஆதரவுத் தளத்தை அதிகரிக்கச் செய்யும் ஆபத்துக்கு தோழர் மணியன் துணை போகலாமா என்பதே நம் கேள்வி.

பல்வேறு மொழி, இனம், மதம், பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர், இந்தத் தனித்துவமான பன்முகத் தன்மையை மதிப்பவராகவும், ஏற்பவராகவும் இருப்பதே அப்பதவிக்குத் தேவையான முதல் தகுதி. வளர்ச்சியைக் கொண்டு வரும் சாதனையாளர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே! ஊடகங்கள் வியந்தோதுவதைப்போல அப்படியொன்றும் குஜராத்தில் மோடி வளர்ச்சியை கொண்டு வந்துவிடவும் இல்லை. உருவான காலத்தில் இருந்தே, தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் முன்னணியில் இருந்து வரும் மாநிலம் தான் குஜராத். மோடியின் காலத்திலும் அது தொடர்கிறது என்பது தானே தவிர, புதிதாக எதையும் அவர் சாதித்துவிடவில்லை என்பதை புள்ளி விவரங்களும் ஆய்வுகளும் ஆதாரபூர்வமாக மெய்ப்பித்துள்ளன. (எகனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி, செப்.28, 2013)

மனிதவள மேம்பாடு, எழுத்தறிவு, ஆண்-பெண் பிறப்பு விகிதம், ஊட்டச் சத்துக் குறைபாடு, தீண்டாமை ஒழிப்பு பழங்குடியினர் முன்னேற்றம், வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலிலேயே குஜராத் இடம் பெற்றிருக்கிறது. மோடிக்குப் பெருமை சேர்க்கவே போலி என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. 97 இஸ் லாமியர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட நரோடா பாட்டியா கொலை வழக்கில் – 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருக்கும் மாயா கொட்னானிக்கு, அந்த கோரத் தாண்டவத்தை அரங்கேற்றிய பிறகு அமைச்சர் பதவி தந்து அழகு பார்த்தவர்தான் மோடி. அதனால்தான் உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்தியா சென், “மோடி பிரதமராவதை நான் ஆதரிக்க மாட்டேன். 2002 இல் திட்டமிட்ட இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர் அதைத் தடுக்க ஒன்றும் செய்யவில்லை. அவர் ஆட்சியில், பாதுகாப்பான சூழ்நிலையில் வாழ்வதாக சிறுபான்மை மக்கள் உணர மாட்டார்கள்” என்றார். இதை அறியாதவர் அல்ல, தமிழருவி!

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்றால், கர்நாடகம் உள்ளிட்ட பா.ஜ.க. ஆட்சி

செய்த மாநிலங்களிலும் அதே கதைதான். பெருந்தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் விற்பனை, 2 லட்சம் கோடி காண்ட்லா துறைமுக ஊழல், எரிவாயுத் திட்டத்தை அன்னிய நிறுவனத்துக்கு இலவசமாக வழங்கியதில் ரூ.20,000 கோடி இழப்பு என்று ஊழல் குற்றச்சாட்டுகள் மோடியின் ஆட்சியின் மீது அணி வகுத்து நிற்கின்றன. குஜராத் அரசின் செயலால் பொதுத் துறைக்கு 2013 ஆம் ஆண்டு ரூ.4052 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை தலைமைக் கணக்காயரின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு கதவைத் திறந்துவிடத் துடிப்பதில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.90 ஆயிரம் கோடி வரியை ரத்துச் செய்ய ப. சிதம்பரம் முன்மொழிந்தால், ‘தேச நலன்’ கருதி அதை ஆதரிக்கிறார் பா.ஜ.க.வின் வெங்கைய நாயுடு.

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காங்கிரசில் இருந்து பா.ஜ.க. வேறுபட்டு நிற்கவில்லை. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் சிங்களப் படைகளின் துப்பாக்கிக் குண்டுகளைத் தமிழக மீனவர்கள் எதிர்கொண்டார்கள். இலங்கை ராணுவத்தின் சக்தி வாய்ந்த போர்க் கப்பல் – வாஜ்பாய் காலத்தில் வழங்கப்பட்டதுதான். முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு, சுஷ்மா ஸ் வராஜ் தலைமையில் சென்ற நாடாளுமன்றக் குழு – ராஜபக்சே அரசு மறுவாழ்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்வதாகப் பாராட்டுப் பத்திரம்தான் வாசித்தது. மத்திய பிரதேச பா.ஜ.க. ஆட்சியோ, ராஜபக்சேவை புத்தர் கோயிலுக்கு அழைத்து, சிவப்புக் கம்பளம் விரித்தது. அதற்காகவே, சாஞ்சி வரை தொண்டர்களை அழைத்துச் சென்று போராடினார் வைகோ. தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு, போர்க் குற்றத்துக்கான பன்னாட்டு விசாரணை போன்ற கோரிக்கைகளிலும் இரு கட்சிகளின் நிலையும் ஒன்றேதான்!

தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு, தமிழகத்தில் இருந்து ஆதரவுக் குரல் கொடுத்த தலைவர்களையும் இயக்கங்களையும் ‘தேச விரோதிகள்’ தண்டிக்கப்பட வேண்டிய ‘பிரிவினைவாதிகள்’ என்று  பேசிய, எழுதிய சுப்பிரமணியன்சாமி, ‘துக்ளக்’ சோ உள்ளிட்ட பல ‘உயர்குலத் தலைவர்கள்’, ஏடுகள் மோடியை பிரதமராக்க வேண்டும் என்று உறுதியுடன் களமிறங்கி நிற்கின்றன.

இவைகளைக் கருத்தில் கொண்டு, மக்களைக் கூறுபோடும் வெறுப்பு அரசியலை தேசியமாக்க முயற்சிக்கும் சனாதன அமைப்புகளிடம் இருந்து ஒதுங்கி நிற்க வண்டிய எச்சரிக்கையை தமிழ்ச் சமூகத்தின் முன் முன்வைப்பதே தமிழருவி மணியன் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு அறம் செய்வதாகும்.

தேர்தலுக்கு முன் அமைக்கப்படும் கூட்டணி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அணி மாறி அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் சந்தர்ப்பவாதமாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கு முன்மொழியப்படும் கூட்டணிகளில் என்ன பொருள் இருக்க முடியும்?

காந்திய இயக்கம் நடத்தும் தமிழருவி மணியன், காந்தியின் உயிரைப் பலி கேட்ட ஒரு தத்துவத்தை நியாயப்படுத்தும்  அரசியலுக்குத் துணை போவது காந்தியத்துக்கு இழைக்கும் அநீதி அல்லவா?

எண்ணெய்ச் சட்டி சுடுவது உண்மைதான். அதற்காக நெருப்பில் விழுந்துவிட முடியுமா?

பெரியார் முழக்கம் 10102013 இதழ்

You may also like...