தோழர் தமிழருவி மணியனுக்கு கொளத்தூர் மணி விளக்கம்
ஆர்.எஸ் .எஸ் . கருத்துகள் சமூகத்தைச் சீர்குலைத்துவிடும். தோழர் தமிழருவி மணியனுக்கு இரண்டாவது முறையாக பதிலளித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய கட்டுரை.
ஜூ.வி.யில் சில திருத்தங்களுடன் வெளி வந்துள்ளது. கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது.
‘நம்மிடம் கேட்பதற்கு சில நியாயமான சந்தேகங்கள் உண்டு’ என்று அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்திருக்கிறார் தமிழருவி மணியன். தேர்தல் களத்தில் மூன்றாவது அணிக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது என்பதே அவரது ஆவேசமான கேள்விகள். இது நம்மிடம் தொடுக்கப்பட வேண்டிய கேள்விகள் அல்ல என்பதே நமது பணிவான பதில். நாம் மூன்றாவது அணிக்கான அமைப்பாளராக நம்மை நியமித்துக் கொள்ள வில்லை. எது முதல் அணி, எது இரண்டாவது அணி என்பதும் நமக்குத் தெரியாது.
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ஆர்.எஸ் .எஸ் . நேரடியாக களமிறக்கியிருக்கும் மோடிக்கு – தமிழகத்தில் ஆதரவுத் தளத்தை வலிமைப்படுத்தும் முயற்சிகள் தந்த கவலைதான் – தமிழருவி மணியனுக்கு எதிர் வினையாற்றும் நிலையை நமக்கு உருவாக்கியது. காரணம், தமிழ்நாடு ஏனைய வடமாநிலங்களைப் போல் அல்லாமல், சமூகநீதி – சகோதரத்துவம் – மதவெறுப்பின்மை இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இவை குலைந்துபோய்விடக் கூடாது என்ற சமூகக் கவலை நமக்கு உண்டு. எந்தக் கூட்டணியில் எந்தக் கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதோ, எது சிறந்த கூட்டணி என்பதோ, தேர்தல் களத்தையே இலக்குவாக்கிக் கொண்டவர்களின் கவலை. அதிகாரத்துக்கு வரும் கட்சிகளும் கூட்டணிகளும் தான் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கான திறவு கோலை தங்கள் கைவசம் வைத்திருக்கின்றன என்ற மாயையிலும் நாம் மூழ்கியிருக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களிடம் சமுதாயக் கருத்துகளை பரப்பி, மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியிலேயே நாம் பயணிக்கிறோம். இதைத் தெளிவுபடுத்திவிட்டு, தமிழருவி மணியன் எழுப்பிய சில வினாக்களுக்கு விளக்கம் தர விரும்புகிறோம்.
கட்டுரை முழுதும் அவர் வரித்துக் கொண்ட நிலைப்பாட்டுக்காக ஆர்.எஸ் .எஸ் . கருத்துகளே மறைமுகமாக நியாயப்படுத்தப்பட்டுள்ளன. இஸ் லாமிய வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே போலி மதச்சார்பின்மை பேசுகிறார்கள் என்று சங்பரிவார், இதுநாள் வரை கூறி வருவதை முழுமையாக நியாயப்படுத்தியிருக்கிறார் தமிழருவி. போலி மதச்சார்பின்மை என்பதற்கு பதில், ‘மயக்க மதச்சார்பின்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்; அவ்வளவுதான்.
“காந்தி – இந்துக்களுக்கு எதிராகப் பலமுறை உண்ணாவிரதம் இருந்தவர். முஸ்லீம்களின் கொடுமை களுக்கு எதிராக ஒருமுறைகூட உண்ணாவிரதம் இருந்தது இல்லை” என்று கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார் தமிழருவி. ‘ஏன் இஸ் லாமியர்களை காந்தி எதிர்க்கவில்லை’ என்பது கோட்சேயின் கோபம். அந்த கோபத்தை தமிழருவியும் நியாயப்படுத்திவிட்டார்.
“மத நல்லிணக்கத்தை அரசியல் ஆதாயத்துக்காகப் பாழ்படுத்த முனையும் வகுப்புவாத வெறியர்கள், காந்தி காலம் தொட்டு இன்று வரை இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றனர் என்பதே கசப்பான உண்மை” என்ற தமிழருவியின் எழுத்துகளே இதற்கு சாட்சி.
‘இந்தியாவில் இந்து தேசம் – இஸ் லாம் தேசம் என்ற இரண்டு தேசங்கள் உண்டு’ என்று 1937 இல் முதலில் அறிவித்ததே வீரசவர்க்கார் தான். அதற்குப் பிறகுதான் 1940 இல் ஜின்னா, பாகிஸ் தான் கோரிக்கையை முன் வைத்தார். இது குறித்த வரலாற்றுப் புரிதல் காந்திக்கு இருந்தது. அதனால் தான் திலகர் முன்னிறுத்திய ‘இந்து ராஷ்டிர விடுதலை’யை புறந்தள்ளிவிட்டு, இந்தியாவின் அரசியல் விடுதலையை முன்னிறுத்தி னார். அந்தப் போராட்டத்தில் இஸ் லாமியர்களையும் தாழ்த்தப் பட்டவர்களையும் இணைக்க முயற்சித்தார். அதனால் தான் ஆர்.எஸ் .எஸ் . முன் வைத்த இந்துத்துவ அரசியலை எதிர்த்தார். இந்து-இஸ் லாமியர் பிரச் சினையை ஒரே தளத்தில் பொதுமைப்படுத்துவதில் நியாயம் இல்லை என்று கருதினார். இதற்கு மாறான தமிழருவி பார்வை – காந்தியாரின் அணுகுமுறையை களங்கப்படுத்து கிறதே!
‘மதத்தைப் பொறுத்தவரை அரசுக்கு எந்த ஒரு வேலையும் இல்லை’ என்ற காந்தியின் கருத்தை சரியாகவே எடுத்துக்காட்டியிருக்கும் தமிழருவி, ‘எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் உண்மையான மதச் சார்பின்மை’ விளக்கம் அளித்திருப்பது முரண்பாடு அல்லவா?
‘அரசியல் சட்டத்தின் பிரிவுகள் சம உரிமையை சாத்தியமாக்கும்போது இந்த அடிப்படை உரிமைகளில் ஆயிரம் மோடிகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தாலும் கை வைக்க முடியாது’ என்று அடித்துக் கூறுகிறார் தமிழருவி. அவரே குறிப்பிடும் குஜராத் கலவரம் – இதே அரசியலமைப்புச் சட்டம் அமுலில் உள்ள நாட்டில் தானே நடந்தது.
1976 நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணன் முயற்சியில் ஜன சங்கத்தையும் உள்ளடக்கிய ஜனதா கட்சி உருவாகி, மொரார்ஜி தலைமையில் ஆட்சி அமைந்தபோது ஆட்சிக் கட்டமைப்பில் ஆர்.எஸ் .எஸ் . பல்வேறு துறைகளில் ஊடுருவியது. கொதித்தெழுந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜிக்கு கடிதம் எழுதி (1976 -மார்ச் 2) எச்சரித்தார்.
“அரசாங்கத்தின் தலைமையைக் கைப்பற்ற ஆர்.எஸ் .எஸ் . முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எனக்கு வருகின்றன. கலாச்சார முகமூடியோடு அரசியலில் செல்வாக்கு பெறுவதை என்னால் ஏற்க முடியாது. இந்து ராஷ்டிரக் கொள்கையை நான் எப்போதும் கண்டித்து வந்திருக்கிறேன். அது ஆபத்தானது. பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட இந்திய நாட்டுக்கு இது நேர் எதிரான தத்துவம்.”
“I have always condemned the Hindu Rastravad of R.S.S. because it is a dangerous ideology and is contradictory to our ideal of composite Indian Nation.” – இது ஜெ.பி.யின் கடிதத்தில் இடம் பெற்ற வாசகம்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் சுட்டிக்காட்டிய எச்சரிக்கையை -அவர் வழி வந்த தமிழருவி மணியன் மறக்கலாமா?
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அரசு கட்டமைப்புகள் ஆர்.எஸ் .எஸ் . கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதும், அரசு ஊழியர்களே ஆர்.எஸ் .எஸ் .சில் சேர குஜராத்தில் அனுமதி வழங்கப்பட்டதும், பாடத் திட்டங்கள், வரலாறுகள், பண்பாடுகள், இந்துத்துவா பார்வையில் திருத்தியமைக்கப்பட்டதும், அவற்றை எதிர்த்து தமிழருவி மணியன் அவர்களின் அற்புதமான கருத்து முழக்கங்கள் மேடைகளில் எதிரொலித்ததும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு நன்றாகவே தெரியும் இன்றைக்கும். பா.ஜ.க. ஆட்சி செய்யும் ம.பி.யில் மாட்டுக் கறி சாப்பிடுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளதும், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ் .எஸ் .சில் சேர அரசு சட்டத்தின் வழியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு அனுமதித் திருப்பதும், பள்ளிகளில் சூரிய நமஸ் காரம், சமஸ் கிருத ஒப்புவிப்பு கட்டாய மாக்கப்பட்டிருப்பதும், பசுவின் சிறுநீர் சக்தியை ஆராய அரசு சோதனைக் கூடம் அமைத்திருப்பதும், உத்தரகாண்ட் மாநிலத்தில் சமஸ் கிருதம் இரண்டாவது ஆட்சி மொழியாக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் சமஸ் கிருத மயமாக்கப்பட்டுள்ளதும், இதே இந்திய ஆட்சியமைப்பின் கீழ் தான் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழத் தமிழர்களுக்கு துரோகமிழைத்த காங்கிரசை உதறி விட்டு தன்மானத்தோடு வெளியேறிய தமிழருவி மணியன், களத்தில் காங்கிரசை எதிர்த்து, தமிழ் ஈழ விடுதலையை ஆதரித்து நின்ற ஜெயலலிதா அணியை ஆதரிக்க மறுத்தார். அப்போது, அவர் சொன்னது, ‘பேயை எதிர்ப்பதற்காக பிசாசை ஆதரிக்க முடியாது’ என்பதுதான். ஆனால், இப்போது இந்த தேர்தல் களத்தில் ‘பிசாசு’க்களை அரவணைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார். ஏன் இந்த தடுமாற்றம்?
2002 குஜராத் கலவரத்தை மறக்காதவர்கள், 1984 இல் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக ஊழிக் கூத்தை நடத்திய காங்கிரஸ் கலவரத்தை மட்டும் ஏன் வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்த மறதிக்குப் பெயர்தான் மதச்சார்ப்பின்மையா? – என்று கேட்டுள்ளார். இந்தக் கேள்வி காங்கிரசை நோக்கி எழுப்ப வேண்டியது.
ஆனாலும் நம்மை நோக்கி வந்திருப்பதால் ஒரு சிறு விளக்கம். சீக்கியர் படுகொலை, இந்திரா கொலை செய்யப்பட்டதால் உருவான பழிவாங்கும் வெறியின் வெளிப்பாடு. ஆனால், சங் பரிவாரின் இஸ் லாமிய வெறுப்பு என்பது அது ஏற்றுக் கொண்டிருக்கும் கொள்கை.
இறுதியாக ஒன்று.
டெல்லி சீக்கியர் படு கொலையை நியாயப்படுத்தி ராஜீவ் காந்தி பேசியதையும், அதே ராஜீவ் காந்தி அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்துக்கு படை
அனுப்பி தமிழர்களைக் கொன்று குவித்ததையும் திண்டுக்கல் கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசியதற்காக தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைப் படுத்தப் பட்டேன். ஆனால், அதே காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர பரப்புரையாளராக இருந்தவர்தான் தமிழருவி மணியன் என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியார் முழக்கம் 23102013 இதழ்