ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்துகிறார் பகுத்தறிவுப் பரப்புரையாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை
மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு நீதிமன்றங் களே துணை போவதை சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ். சந்துரு, பகுத்தறிவுப் பரப்புரை செய்வோரை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
‘தி இந்து’ (செப். 22) தமிழ் நாளிதழில் இது குறித்து அவர் எழுதியது:
மராட்டிய மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இயக்கம் நடத்திய தபோல்கரின் படுகொலை அறிவியல் பூர்வமாக சிந்திப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடெங்கும் மூடர் கூடங்கள் உருவாவதை தடுக்க சட்டங்கள் வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. மராட்டியத்தில் மூட நம்பிக்கைகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வோரை பாதுகாக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை அரசே தண்டித்த வரலாறுகளும் உண்டு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந் தில் மக்கள் பெருக்கத்துக்கு எதிராக குடும்பக் கட்டுப்பாட்டை அன்னிபெசன்ட் அம்மையார் வலியுறுத்தினார். அவர் கிறிஸ்துவ மதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சிறையில் அடைத்தனர்.
1925 இல் டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி பற்றிப் பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர் ஸ்கோப்ஸ், மதத்துக்கு எதிராக செயல்பட்டதாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இன்றும் சில அமெரிக்க மாநிலங்களில் அப்படியான போதனை செய்பவர்களை தண்டிக்க சட்டங்கள் உண்டு.
இந்தியாவும் இவ்விஷயத்தில் விதிவிலக்கு அல்ல. சமீபத்தில் உத்தரகாண்ட்டில் நடந்த இயற்கைச் சீற்றத்தை கடவுளின் சீற்றமாகக் கருதி பரிகார பூஜை செய்வது பற்றி அம்மாநில அரசே பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்தது. வரம்பு மீறிய கட்டுமானங்களும் அதற்காக செய்த வன அழிப்பும்தான் வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. அறிவியல் வளர்ச்சியின் உச்சமாகக் கருதப்படும் அணு உலைகள் திறப்பிலும் தேங்காய் உடைக்கிறார்கள்.
நீதிமன்றங்கள் இவற்றைத் தடுப்பதற்கு பதிலாக பல நேரங்களில் உறுதுணையாக இருக்கின்றன. அரசு அலுவலகங்களில் ஒரு மதத்தின் சார்பாக கடவுள் சிலைகளையும் படங்களையும் வைத்து பூஜைகள் நடத்துவதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகள் அனேகமாக தள்ளுபடியே செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றக் கட்டிடங்களை கட்டும் போது பூமி பூஜையுடன் துவங்குவதும் தமிழகத்தில் பலமுறை நடந்துள்ளது.
1976 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு மக்கள் ஆற்ற வேண்டிய அடிப்படை கடமைகள் பிரிவு 51ஏ-வில் வரையறுக்கப் பட்டுள்ளன. அதில் அறிவியல் ரீதியான விசாரணை யும் அறிவியல் மனப்போக்கும் அடிப்படைக் கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் கடமைகளை மறந்து மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடித்து வருகிறோம்.
பல்கலைக்கழக மானியக் குழு ஜோதிட படிப்பை அங்கீகரித்தபோது ஜோதிடம், விஞ்ஞானம் அல்ல என்று சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், வழக்கை உச்சநீதிமன்றம் 2004 இல் தள்ளுபடி செய்துவிட்டது மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோரை பாதுகாக்க சட்டம் இயற்றினால் மட்டுமே அறிவியல் பூர்வமான விசாரணைக்காக பிரச்சாரம் செய்வோருக்கு தைரியமும் அவற்றை எதிர்ப்பவர்களுக்கு அச்ச உணர்வும் ஏற்படும்.
பெரியார் முழக்கம் 26092013 இதழ்