அய்.நா. தரும் ஒப்புதல் வாக்குமூலம்

[பல்வேறு செய்தி ஏடுகளில் புதைந்து கிடக்கும் செய்திகள், சிந்தனைகளைத் தேடிப் பிடித்து வாசகர்களின் சிந்தனைக்கு தொகுப்பாக முன் வைக்கப்படுகிறது.]

ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் ஒன்றிரண்டு ஆங்கில இதழ்களோடு நின்று போன ஒரு முக்கிய செய்தி இது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது அதைத் தடுத்து நிறுத்துவதற்கு அய்.நா. எந்த முயற்சியும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து வந்தது என்ற குற்றச்சாட்டை இப்போது அய்.நா.வே ஒப்புக் கொண்டுள்ளது. அய்.நா.வில் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன், அவரது ஆலாசகர் என்ற பொறுப்பில் இருந்த விஜய் நம்பியார் என்ற இந்தியாவைச் சார்ந்த மலையாள அதிகாரி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அய்.நா.வின் பல்வேறு பிரிவுகள் இனப் படுகொலையின்போது மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை செய்ய விடாமல் முடக்கினார். இது குறித்த விரிவான தகவலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருக்கிறது. அவ்வளவும் உண்மைதான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் அய்.நா.வின் அமைப்புகள் தங்கள் கடமைகளை ஆற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டன என்று அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் அதன் 68 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி பேசும்போது குறிப்பிட்டார். அய்.நா. தனது கடமையாற்ற அதன் உறுப்பு நாடுகளும் ஒத்துழைக்க வில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். அய்.நா. இப்படி வெளிப்படையாக தனது தவறை ஒப்புக் கொள்வது வெகு அபூர்வமான சம்பவமாகும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. பான்கி மூன் இதைப் பேசும் போது இலங்கை அதிபர் ராஜ பக்சேவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அய்.நா. செயல்பாடுகள் குறித்து உள்ளக விசாரணை குழு ஒற்றை பான்கி மூன் 2012இல் நியமித்தார். சார்லால் பெட்ரி என்ற அதிகாரி தலைமையில் நியமிக்கப்பட்ட குழு 8 மாதங்கள் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையைத் தயாரித்தது. அய்.நா.வின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே இறுதி கட்டப் போரில் தயாரிக்கப்பட்ட குறிப்புகள், பதிவுகள், இலங்கை அரசுடன் நடந்த பரிமாற்றங்கள் தொடர்பாக 7000 ஆவணங்களை பெட்ரி குழு கவனமாக பரிசீலித்தது. மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், அய்.நா.வின் அதிகாரிகளையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டதோடு, வேறு பிற நாடுகளில் இத்தகைய மோதல்கள் நடந்த காலத்தில் அய்.நா.வின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதையும் ஆய்வு செய்தது. உணவு, மருந்துப் பொருள்களை அனுப்ப வேண்டிய கடமையை செய்ய மறுத்தது. போரில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை பதிவு செய்யாமல் மறைந்தது. இலங்கை அரசு ஆலோசனையைப் பெற்று செயல்பட்டது. அய்.நா.வின் மனித உரிமை அமைப்பு மவுனமாக்கப்பட்டது. பாதுகாப்புக் கவுன்சிலில் இது குறித்த விவாதம் வராமல் தடுத்தது என பல்வேறு முறைகேடுகளில் அய்.நா. ஈடுபட்டது என்பதையெல்லாம் (பார்க்க: மார்ச் 7, 2013, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’) பதிவு செய்திருக்கிறது. அய்.நா. அமைப்பின் உறுப்புகள் தோல்வி அடைந்துவிட்டது என்று ஒப்புக்கொண்ட பான்கி மூன், இது குறித்து மூத்த அதிகாரிகள் குழு பரிசீலிக்கும் என்கிறார். குதிரை ஓடிய பிறகு லாயத்தை இழுத்துப் பூட்டு கிறார்கள், இந்த மேதாவிகள்! இழந்த உயிர்களை இவர்களால் திருப்பித் தர இயலுமா?

பெரியார் முழக்கம் 30102013 இதழ்

You may also like...