பெரியாரும்-காமராசரும் பங்கேற்ற விழா
காங்கிரசில் பெரியாரோடு இணைந்து பார்ப்பன ரல்லாதார் உரிமைக்குப் போராடியவர் டாக்டர் பி. வரதராஜூலு (நாயுடு). அவரது பிறந்த நாள் விழா 27.11.1955இல் சென்னை ராஜாஜி ஆலில் நடந்தபோது பெரியார் ஆற்றிய உரை இது. அதே விழாவில் காமராசரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
“நான் அரசியல் தொண்டனல்ல. சமுதாய நலத் தொண்டனாவேன். அதிலும் பெரிதும் தமிழ் மக்கள் நலனுக்கென்றே பாடுபடுபவன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும் விட்டுக் கொடுக்கவும் துணிவேன். காமராசருக்கும் எனக்கும் அரசியல் கருத்துகளில் எவ்வளவு பேதம் காணப்பட்டாலும், தமிழர் நலத்தை முன்னிட்டு நானாகவே முன்வந்து அவரை ஆதரிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்கிறதே ஒழிய மற்றபடி எனது சுயநலத்தை முன்னிட்டோ, அல்லது அவர் விரும்புகிறார் என்று கருதியோ அல்ல. அவரும் என்னுடைய ஆதரவு தேவை என்பதாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதும் கிடையாது.
குடியாத்தம் சட்டசபை தேர்தலில் நான் அவரை ஆதரித்தேன் என்றால், அப்பொழுதும் அவரிடம் சொல்லிவிட்டு அவரை ஆதரிக்கவில்லை. அவரும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று என்னைக் கேட்கவும் இல்லை.
திடீரென்று எனக்குத் தோன்றிய எண்ணத்தின் பேரில்தான் நான் வலியச் சென்று அவரை ஆதரிக்கும் படியாகியது. நானும் அந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த் திருந்தவனுமல்ல. அவர் விரும்புவார் என்று கருதினவனுமல்ல.
ஒருநாள் நான் ஆத்தூர் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் ஒரு தோழர் என்னிடம் ஒரு பத்திரிகையைக் கொடுத்து ‘முதல் மந்திரி அவர்கள் சட்டசபை தேர்தலுக்குக் குடியாத்தம் தொகுதியில் நிற்பதாக செய்தி வந்துள்ளது’ என்று சொன்னார். நான் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, அதே கூட்டத் திலேயே என்னுடைய எண்ணத்தை வெளியிட்டேன்.
“திரு. காமராசர் அவர்கள் குடியாத்தம் தொகுதியில் தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்” என்பதாக அப்போதே கூறிவிட்டேன்.
இதற்கு யாருடைய யோசனையையும் சம்மதத்தையும் நான் கேட்கவில்லை. ஏனெனில், நான் ஜனநாயக ரீதியில் தொண்டாற்றுபவன் என்று சொல்லிக் கொள்பவன் அல்ல. நான், ஜனங்கள் உணராததை, கவலைப்படாததை, மற்ற யாரும் செய்ய முற்படாததை, எடுத்துக் காட்டி உணர்த்தி கவலைப்படும்படி செய்து அவர்களை அவசியமான நேர்வழியில் நடக்கச் செய்ய வேண்டும் என்கிற தன்மையில் தொண்டாற்றுபவன். என்னுடைய கவலையையும் அனுபவத்தையும் கொண்டு, மக்களுடைய இழிவும் குறைபாடுகளும் நீங்க, மக்களுக்கு வழிகாட்டும் பணியை ஆற்றுகிறவனாவேன்.
இந்தப் பணியை ஆற்ற நம் நாட்டில் ஆள் இல்லை. இது பெரும் தொல்லையும், பொறுப்பும் தன்னல மறுப்பும் கொண்ட பணி. ஆதலால் தக்க அறிவும் திறமையும் உள்ளவர்களும்கூட மறைந்து கொண்டும், பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டும், பொதுத் தொண்டு என்னும் பேரால் வயிறு வளர்க்கவும் பணம் சேர்க்கவும் பதவியும் பெருமையும் பெறவுமே, பொதுத் தொண்டு வேஷம் போட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் லட்சத்தில் 99,999 பேர்களாகத் தமிழர்களில் காணப்படுகிறார்கள்.
இக்காலம் பொதுத் தொண்டில் மிகுதியும் நேர்மையற்றதாகிவிட்ட காலம். மக்கள் தன்மையும் அது போன்றதாகி வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகத் தலைமையும் ஜனநாயக மக்களும் எப்படிப் பயனுள்ள தாக இருக்க முடியும்? ஆனதினால்தான் நான் எனக்கு சரி என்று தோன்றுகிறபடி, மற்றவர்கள் என்ன சொல்லு வார்கள் என்றுகூட கவனிக்காமல் மற்றவர்களை யெல்லாம் என்னைப் பின்பற்றச் சொல்கிறேன்.
பின்பற்ற இஷ்டம் இல்லாவிட்டால், விலகிக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வளவு பெரிய காரியத்திற்கு நான் தகுதியா என்றாலும் எனக்கு இது தவிர வேறு வேலை இல்லாத தாலும், வேறு யாரும் இப்பொறுப்பை ஏற்கப் பயப்படு வதாலும் இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் துணிந்து முன்வந்துள்ளேன். காமராசர் அவர்களையும் நான் அந்தப்படி கருதுவதால் அவர் போக்குக்கு என்னாலான ஆதரவைத் தருவது அவசியம் என்று கருதுகிறேன். அவருக்கு ஆதரவு தருவது பற்றி நான் வெட்கப்படவில்லை. அவரும் என்னைப் போலவே ஒரு துறவி ஆவார். எனக்காவது மனைவி உண்டு. அவருக்கு அதுவும் இல்லை.
இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசிய மாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது வேறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும் தவறுதான் செய்யலாமே ஒழிய புரட்டு மோசம், சுயநலப் பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர் களாக மாட்டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்.
…. இதுவரை நான் அவரை (காமராசரை) எந்த விதமான உதவியும் கேட்டது கிடையாது. அவரும் என்னை எதுவும் கேட்டது கிடையாது. எங்கள் இருவருக்கும் சொந்த சங்கதி என்பதாக எதுவும் இல்லை. தமிழர் நலத்திற்காக அவர் தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படு வதுண்டு. தனிப்பட்ட நபர்களைப் பற்றி நான் அவரிடம் எதுவும் பேசுகிறதே இல்லை. இனியும் பேசப் போவதும் இல்லை. நாங்கள் இப்படிப்பட்ட சம்பிரதாய சம்பந்தமில்லாமல் தனிப்பட சந்திப்பதுமில்லை!
இன்றுகூட இந்த விழாவுக்கு என்னை அழைத்த போது, காமராஜர் இங்கு வருவார் என்று தெரிந் திருந்தால் நான் கண்டிப்பாய் வர ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். நான் இதுவரை எந்த மந்திரி பேசுகின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதே இல்லை. அதில் கலந்து கொள்வதில்லை என்பது இதுவரை நான் செய்து கொண்டிருந்த முடிவான கருத்தாகும்.
ஆனால், இதில் மட்டும் கலந்து கொள்ளும்படியான நிலை ஏற்பட்டதானது, நான் இதற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டபின்தான் முதல் மந்திரி அவர்கள் இதற்குத் தலைமை வகிக்கிறார் என்றும், சிலர் பேச வந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. இதன் பிறகு நான் மறுத்துக் கூறுவது முறை இல்லை என்பதாகக் கருதி எதிர்பாராத இச்சந்தர்ப்பம் தவிர்க்க முடியாத சூழ்நிலையின் பேரில் அமைந்துவிட்டது.
(நூல்: ‘காரியக் காமராசர் குறித்து காரணப் பெரியார்’ தொகுப்பு மே.கா. கிட்டு. வெளியீடு: தோழமை, 10, 6வது தெரு முதல் செக்டர், கலைஞர் கருணாநிதி நகர், சென்னை-600 078. பேசி: 9444302967; பக்.184 – விலை 125.)
பெரியார் முழக்கம் 22082013 இதழ்