பேராசிரியர் கல்விமணி வலியுறுத்தல் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்
நாட்டில் சிறப்பு கல்வி மண்டலம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என மன்னார்குடியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி புரட்சி நாள் கருத்தரங்கமாக நடைபெற்றது.
கருத்தரங்கில் காமராஜர் படத்தை, முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவாராஜமாணிக்கம் திறந்து வைத்து பேசினார். அதுபோல் பெரியார் படத்தை, தஞ்சை தமிழ்பல்கலைக்கழக பேராசிரியர் வெற்றி செல்வன், அம்பேத்கர் படத்தை, திருவாரூர் கவுன்சிலர் வரதராஜன் ஆகியோர் திறந்து வைத்து பேசினார்கள். தொடர்ந்து, ‘தமிழக பள்ளி-கல்வி பிரச்சனைகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபா கல்விமணி பேசினார்.
அப்போது, “மத்திய மாநில அரசுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் அனைத்திந்திய அளவில் நடைபெறும் அனைத்து நுழைவுத்தேர்வுகளிலும், தமிழிலும் கேள்வித்தாள் அளிக்கப்படவேண்டும். மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கும் ஐஐடி மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய அளவிற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நுழைவு தேர்வுகளில் கேள்வித்தாள்கள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே உள்ளன. தமிழில் கேள்வித்தாள்கள் வழங்கப்படாததால் தமிழகத்தில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் மேற்படி தேர்வை 85 சதவீதம் பேர் எழுத முடியாத நிலைக்கு ஆளாகின்றார்கள். தமிழ் வழியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க மறுப்பது பெரும் சமூக அநீதியாகும் மேலும் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வியிலும் அனைத்து பட்ட படிப்புகளிலும், கிராமப்புற ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும். உயர்கல்வித்துறையை சீரழிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு சிறப்பு கல்வி மண்டலம் என்கின்ற ஒரு மிகப்பெரிய கல்வியை சீரழிக்கும் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. இதனை உடனடியாக மத்திய அரசு கைவிடவேண்டும். அதுபோல் தமிழக அரசும் தாய் தமிழ் வழி தொடக்கப்பள்ளிகளுக்குநிதியுதவி அளித்து உதவ வேண்டும்.
6ஆம் வகுப்பிலிருந்து படிப்படியாக முப்பருவத்தேர்வு முறையை அறிமுகம் செய்து வந்தது வரவேற்கத்தக்கது. அதையொட்டி கடந்தாண்டு 10ஆம் வகுப்புக்கும் முப்பருவ முறையை அறிமுகம் செய்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை இரத்துசெய்திருக்க வேண்டும் ஆனால் அதனை செய்யவில்லை. பொதுத்தேர்வு நடத்தினால்தான் மதிப்பெண்களை விளம்பரப்படுத்தி பணம் வசூலிக்க முடியும் என்ற தனியார் பள்ளிகளின் அழுத்தமே இதற்கு காரணம். அதேபோல அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பாடத்தை 11ஆம் வகுப்பிலிருந்தே நடத்தி அதிக மதிப்பெண்களை பெறவைத்து அரசு பள்ளி மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ, பொறியியல் மற்றும் உயர் படிப்பு இடங்களை தனியார் பள்ளி மாணவர்கள் பெற்று விடுகின்றனர். அரசு பள்ளியை நம்பி படித்த ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இது எதனால் வருகின்றது என்று பார்த்தால் மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் தேர்வு முறையில் சரியான அணுகுமுறை கடைபிடிக்கப்படவில்லை. 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு என்று நாம் அதனை அழைத்து பாகுபடுத்தி காட்டப்படுகின்றது. அதனை மேல்நிலை முதலாமாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளிலும் உள்ள பாடத்திட்டமானது தொடர்ச்சியாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதனை மறைத்து மிகப்பெரிய கல்வி மோசடி தமிழகத்தில் நடக்கின்றது. அண்டை மாநிலமான ஆந்திராவில் இரண்டாண்டுகளும் பொதுத்தேர்வு நடத்தபடுகின்றது. மற்ற கோரிக்கை களுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்த வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியை திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் காளிதாஸ் ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் நன்றி கூறினார். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில், ஆசிரியர் தமிழ்மணி உட்பட பலர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெரியார் முழக்கம் 30072015 இதழ்