சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:

ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை.

அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து முத்து ராமன் என்பவர் தொடர்ந்த பொது நலன் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ் .எம். இப்ராகிம் கலிஃபுல்லா, கே.டி.கே. வாசுகி ஆகியோரடங்கிய அமர்வு 13.2.2010 அன்று வழங்கிய தீர்ப்பில் அரசு வளாகங்களில் மத வழிபாட்டகங் களை அமைப்பதையும், அலுவலகங்களில் கடவுள் படங்கள் வழிபாடுகள் நடத்துவதையும் கூடாது என்று கூறியுள்ளது. இந்தச் செயல்பாடுகள் பிற மதத்தினரிடையே பாதுகாப்பின்மையை உருவாக்கி விடும் என்றும் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புகள் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன.

இதை நாங்கள் சுட்டிக்காட்டும்போது, இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாக பார்ப் பனர்கள் சங்பரிவாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. இது திசை திருப்பும் கருத்து. இந்து மதத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள்தான் பெரும்பான்மையான இந்த இந்துக்களின் கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமைகளை மறுத்தது யார்? இதே இந்து மதத்தின் தலைமைப் பொறுப்பை தாங்களாகவே பறித்துக் கொண்ட பார்ப்பனர்கள்தான். அதை எதிர்த்து இந்த ஒடுக்கப்பட்ட கோடானுகோடி இந்துக்களின் உரிமைகளுக்காக இவர்களை ‘சூத்திரர்கள்’, ‘தீண்டப்படாதவர்கள்’ என்ற இழிவுகளை எதிர்த்து இவர்களின் சுயமரியாதைக்காக போராடியது யார்? பெரியார் இயக்கம் தான். நாங்கள் இந்துவாக இருக்க – வாழ விரும்பவில்லை என்றாலும், இந்த நாட்டின் சட்டப்படி இந்துக்கள் தான்! இன்றைக்கும் இந்துப் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காகவும் இந்துக்களில் பெரும்பான்மை சமூகத்தினர் கோயிலுக்குள் அர்ச்சகர் ஆகும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவமதிக்கப்படுவதற்கு எதிராகவும் போராடிக் கொண்டிருப்பதும் நாங்கள்தான். ஆனால், இந்த உரிமைகளை சக இந்துக்களுக்கு வழங்கக் கூடாது என்று கூக்குரல் போடும் பார்ப்பனர்களும், ஆர்.எஸ் .எஸ் . பரிவாரங்களும் எங்களை இந்துக்கள் விரோதி என்றும், தங்களை இந்துக்களின் பாதுகாவலர்கள் என்றும் கூறிக் கொண்டு மக்களைக் குழப்புகிறார்கள். இந்த சூழ்ச்சி வலையில் நமது அப்பாவிகள் சிலரும் சிலரும் விட்டில் பூச்சிகளாக வீழ்ந்து விடுகிறார்கள்.

இந்து மதத்தை விமர்சிக்கும் நீங்கள், இஸ் லாம் மதத்தையோ, கிறிஸ் தவ மதத்தையோ எதிர்ப்ப தில்லையே – ஏன் என்ற கேள்வி தான் – இன்று – பரவலாக எழுப்பப்படுகிறது. நாங்கள் மதமற்றவர்கள்; ஜாதியற்றவர்கள்; எனவே முஸ் லிம் மதமோ, கிறிஸ் துவ மதமோ எங்களுக்கு  உடன் பாடானதும் அல்ல; ஆனால்-எப்படி இந்து மதத்தின் கீழ் உரிமைகள் மறுக்கப்பட்ட கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்களோ அதே போல், பிற மதங்களின் கீழ் உள்ள மக்களும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே  நாம் பார்க்கிறோம். இவர்கள் ஜாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக – இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்கள்; எனவே பார்ப்பன ஜாதிய ஒடுக்குமுறைக்குப்  பலியான மக்கள் என்ற பார்வையோடு பிற மதத்தினரின் உரிமைகளுக்கும் நாங்கள் சமூக விடுதலைப் பார்வையில் குரல் கொடுக்கிறோம்; ஆதரித்து நிற்கிறோம். எங்களைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்துக்களும் – இஸ் லாம், கிறிஸ் தவ மதத்தை தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களும் – பார்ப்பனியம் திணித்த சமூக ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள்; இவர்களுக்கான உரிமைகள் மீட்கப்படவேண்டும் என்ற கொள்கையை ஏற்று களமாடி வருகிறோம். அதற்காக அந்த மதங்களை ஆதரிப்பவர்கள் அல்ல.

உலகிலேயே இன்று மதவாதம்தான் பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விடுகிறது; தாலிபான் களையோ-ஜிஹாத்துகளையோ, அவர்கள் பழமை வாதத்தை மீட்டெடுக்க நடத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளையோ ஒரு போதும் ஆதரிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாது. சமூகப் பார்வையில் ‘நல்லவர்கள்’  என்ற  இலக்கணத்துக்கு உரியவர்களை. மதம் கெட்டவர்களாக மாற்றி விடுகிறது; காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கு தனது  கொலையை நியாயப்படுத்த பகவத் கீதைதான் பயன்பட்டது; தர்மத்தைக் காப்பாற்ற, அதர்மத்தை வீழ்த்த – மனிதர்களை அழிப்பது பாவமல்ல என்று  பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறியதைத் தான் கோட்சே நிறைவேற்றினான். இது கோட்சே நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலம். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதிலிருந்து உலகம் முழுதும் நடக்கும் இஸ் லாமிய பயங்கரவாதங்கள் மதத்தின் பெயரில் இறைவனுக்கு செய்யும் கடமையாகவே நியாயப் படுத்தப்படுகிறது. மேலை நாடுகளின் கிறிஸ் தவம், இஸ் லாமிய வெறுப்பை கட்டமைக்கிறது. மதங்களின் இந்த பயங்கரவாதம் மனித குலத்தின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் சவால் விடுகிறது.

பெற்றோர்கள் சம்மதத்தோடுதான் பெண்கள் திருமண உறவை தேர்வு செய்ய வேண்டும் என்றோ, இளம் பெண்களுக்கு திருமணம் செய்யும் தங்களின் மத உரிமையை சட்டங்கள் தடுக்கக் கூடாது; விதி விலக்கு வேண்டும் என்றோ, பெண்கள் முகத்தை வெளியே காட்டாமல் மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்றோ, பெண்கள் கார் ஓட்டும் உரிமையோ தொலைக்காட்சியில் பேசும் உரிமையோ மறுக்கப்பட வேண்டும் என்றோ, பெண் கல்வியை வலியுறுத்திய சிறுமிக்கு  மரண தண்டனை வழங்க முற்பட்டாலோ, நவராத்திரி கொலுவில் பங்கேற்க கணவனை இழந்த பெண்களுக்கு உரிமை    மறுத்தாலோ அது இந்து, இஸ் லாம், கிறிஸ் தவம் என்று எந்த மதம் கூறினாலும் காலத்துக்கு ஒவ்வாத எதிர்க்கப்பட வேண்டிய முறியடிக்கப்பட வேண்டிய பழமை வாதம் என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக நிற்பவர்கள்.

காந்தியாரின் கருத்துகளோடு முரண்பட்டு நின்ற பெரியார், காந்தி சுடப்பட்டபோது இந்த நாட்டுக்கு ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். சங்பரிவாரங்கள், பார்ப் பனர்கள் கொள்கை ரீதியாக எங்களுக்கு எதிர் நிலையில் இருப்பவர்கள் என்றாலும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்க்கப்படுவதே அதற்கான தீர்வு என்று நாங்கள் கருதவில்லை. அதை ஆதரிக்கவும் இல்லை. மதத் தீவிரவாதத்துக்கு பலியாகி ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தினரையே பாதிக்கச் செய்யக்கூடிய சில தீவிரவாத இளைஞர் களின் வன்முறையை நாங்கள் கண்டிக்கிறோம். மத வழி பயங்கரவாதம் – அது எந்த மதமாக இருந்தாலும் எங்களுக்கு உடன்பாடானது அல்ல.

மதம் – தனிமனித வாழ்க்கையோடு நின்று விடாமல், அது எல்லை மீறி சமூகத்தில் ஒடுக்கு முறைக்கு துணை போகும்போது, அரசு நிறுவனங் களில் ஊடுருவும்போது அரசியல் கொள்கைகளாக வடிவெடுக்கும்போது அதை எதிர்க்கிறோம்; அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம்” என்றார், விடுதலை இராசேந்திரன்.

கார்ட்டூன் காமெடியா? கடவுள் புராணமா?

சரசுவதி பூஜை கொண்டாடப்படுகிறது; சரசுவதி யார் என்பதற்கு புராணங்களில் கதைகள் உண்டு. பிரம்மா தனது உடலிலிருந்து சரசுவதியை படைத்தார். பிறகு சரசுவதியின் அழகில் மயங்கி அவளிடமே உடல் உறவு கொள்ள முயன்றார். சரசுவதை இதை விரும்பவில்லை.

“என்னைப் படைத்த தந்தையாகிய நீங்களே இப்படி நடக்கலாமா? இதற்கு உடன்பட மாட்டேன்” என்கிறாள். பிரம்மா விட்டபாடில்லை. உடனே சரசுவதி பெண் மான் உருவம் எடுத்து தப்பித்து ஓடுகிறாள். பிரம்மா உடனே, நீ பெண் மான் என்றால் நான் ஆண் மான் உருவெடுத்து உன்னோடு உறவு கொள்வேன் என்று, ஆண் மான் உருவமெடுக்கிறார்.

இரண்டு மான்களும் ஓடுகின்றன. அப்போது சிவபெருமான் பார்க்கிறார். உடனே அவர் வேடன் உருவமெடுத்து ஆண் மானை வேட்டையாடுகிறார். பெண் மான் உருவில் இருந்த சரசுவதி, ‘அய்யோ, ஆண் மான் உருவமாய் இருந்தது பிரம்மாவாயிற்றே; இப்படி வீழ்த்திவிட்டீர்களே’ என்று கலங்குகிறாள். உடனே சிவன், பிரம்மாவை உயிர்ப்பிக்கிறார். சரசுவதி கண்ணீரோடு உளமறங்கி படைத்த பிரம்மாவோடு இணைய சம்மதிக்கிறாள்.

இது சரசுவதியின் ‘தெய்வீகக் கதை’.

இதையே குழந்தைகள் தொலைக்காட்சியில் ‘கிராபிக்ஸ் ’ படக் கலவைகள் செய்தால் எப்படி இருக்கும்? ‘சூப்பர் மேன்’ ஒருவரிடம் சென்று குழந்தைகள் தங்களோடு விளையாட ஒரு அக்காள் வேண்டும் என்று கேட்கிறார்கள். ‘சூப்பர் மேன்’ தனது சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார். கைதட்டி மகிழ்ந்த குழந்தைகள் அக்காவோடு விளையாடுகிறார்கள். திடீரென்று சூப்பர்மேன், அழகிய அக்காவை திடீரென்று கடத்த, குழந்தைகள் பதறிப் போகிறார்கள். அக்கா – பெண் மானாகிறது; சூப்பர் மேன் ஆண் மானாகிறார். திடீர்க் காட்சிகள் குழந்தைகளுக்கு குதூகலமூட்டுகின்றன. ஆனாலும் குழந்தைகள் அக்காவை காப்பாற்ற அந்த வழியே வந்த ஒரு வழிப் போக்கனிடம் கேட்கிறார்கள். வழிப் போக்கனும் வேடன் உருவம் எடுத்து ஆண் மானை வீழ்த்தி, பெண் மானைக் காப்பாற்றிக் கொண்டுவர, குழந்தைகள் கொண்டாடி, வேடனுக்கு நன்றி சொல்கிறார்கள். அப்போது ஆண் மான் உருவத்தில் இருந்த சூப்பர் மேன், பெண் மான் உருவத்தில் இருந்த அக்காள் இருவரும் திடீரென்று தோன்றி, குழந்தைகளிடம் விடை பெற்றுக் கொண்டு காதலர்களாக பறந்துச் செல்கிறார்கள்.

‘சூப்பர் மேன் அட்டகாச கடத்தல்’ என்ற பெயரில் இப்படி ஒரு கார்ட்டூன் காட்சியைப் பார்த்தால் குழந்தைகள் கை தட்டி சிரிப்பார்கள்.

இந்த ‘கார்ட்டூன் காமெடிகள்’ புனித  தெய்வக் கதைகளாக்கப்பட்டு,

நாடு முழுதும் வீடுகளிலும் அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்.

அறிவியல் யுகத்தில் இது கேலிக்கூத்து அல்லவா என்று நாம் கேட்டால்,

எங்களை இந்து விரோதிகள் என்கிறார்கள்.

– ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் உரையிலிருந்து

பெரியார் முழக்கம் 17102013 இதழ்

You may also like...