ஒரு காதல் திரைக்கதை

காதல் உணர்வுகளை ஊட்டி ஊட்டி, திரைப்படங்களை எடுத்த இயக்குனரின் ‘குடும்ப காதல் காவியம்’ அண்மையில் தமிழகத்தில் மக்கள் மன்றத்தில் நடித்துக் காட்டப்பட்டது. விறுவிறுப்புகள், சோகம், காதல் உணர்வு, திடீர் திருப்பம் என்று அத்தனை அம்சங்களோடும் இதற்கான திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது.

முதல் காட்சி இயக்குனரின் பேட்டியோடு தொடங்குகிறது. இது ஒரு வித்தியாசமான பேட்டி.  பேட்டி தரும் இயக்குனர் பேச மாட்டார். ஒலி பெருக்கி முன் குமுறி குமுறி அழுது கொண்டே இருப்பார். பத்திரிகை யாளர்கள் கண்களில் கண்ணீரை துடைத்துக்  கொண்டே கேள்வி கேட்பார்கள்.

இயக்குநர் : அய்யோ, என் மகள் ஒருவனை காதலிக்கிறாள். அந்தக் காதலன் நல்லவனே அல்ல.

பத்திரிகையாளர் : அப்படியா?

இயக்குனர் : ஆமாம்! ஆமாம். அந்த காதலன் குடும்பமே மோசடிக் குடும்பம். காதலித்து ஏமாற்றும் குடும்பம்!

பத்திரிகையாளர் : அதற்கு ஆதாரங்கள் உண்டா?

இயக்குனர் : இனிமேல் தான் சேகரிக்கப் போகிறேன்.

பத்திரிகையாளர் : இது உங்கள் மகளுக்குத் தெரியாதா?

இயக்குனர் : அவள் ஒன்றுமறியாதப் பெண்; ஏமாந்து விட்டாள். என்ன செய்வேன், அய்யகோ என்ன செய்வேன்.

(காட்சி முடிகிறது; அடுத்தக் காட்சி)

பத்திரிகையாளர், பெண்ணிடம் கேள்வி: நீங்கள் காதலிக்கும் நபர் நல்லவர் இல்லையா?

பெண் : அப்படி எல்லாம் இல்லை. எனது அப்பாதான் நல்லவர் இல்லை. எனது காதலரை அடியாள் வைத்து தாக்க திட்டமிட்டார்.

பத்திரிகையாளர் : இப்போது நீங்கள் யாருடன் போகப் போகிறீர்கள்?

மகள் : நிச்சயமாக என் காதலுடன் தான்!

(காட்சி முடிகிறது; அடுத்த காட்சி – நீதிமன்றம்)

இயக்குனர் : நீதிபதி அவர்களே, எனது மகள் மனநிலை பாதிக்கப்பட் டுள்ளார்.

நீதிபதி : ஆமாம், ஆமாம்! பார்த்தாலே தெரிகிறது. சரி, ஒரு பொதுவான இடத்தில் தங்க வைக்கலாம். காதலன் தரப்பினரும் உங்கள் தரப்பினரும் பெண்ணிடம் பேச அனுமதி உண்டு.

(காட்சி முடிகிறது; அடுத்த காட்சி ஆசிரியர் வீடு)

ஆசிரியர் வீட்டில் இயக்குனர் பட்டாளம் – நடிகர் கூட்டம், கதா நாயகர்கள் என பெண்ணைச் சூழ்ந்து நிற்கிறது. மலையாள மாந்திரிகர்கள் யாகம் நடக்கிறது. காதலர் தரப்பினர் வீட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்படுகிறது. தனக்கு தரப்படும் அழுத்தத்தை தாங்கவே முடியவில்லை என்று பெண் காதலரிடம் அலைபேசியில் கதறுகிறார்.

(காட்சி முடிகிறது; மீண்டும் நீதிமன்றக் காட்சி)

நடிகர்கள், இயக்குனர்கள், திரைப்பட ஸ்டண்ட் நடிகர்கள் என்று பெரும் கூட்டம் நீதிமன்றத்துக்குள் அலைமோதுகிறது. ஸ்டண்ட் நடிகர்கள் மனித சங்கிலி போல இயக்குனரையும் அவரது ஆதரவாளர்களையும் சுற்றி வளைத்து நிற்கிறார்கள். எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற பதட்டம்; நீதிபதி வருகிறார்.

நீதிபதி பெண்ணிடம் கேட்கிறார் : என்ன முடிவு செய்திருக்கிறாய்?

பெண் : நான் இப்போது அப்பாவுடன் போகிறேன்.

நீதிபதி : அப்படியானால் போகலாம். போன முறை காதலனோடு போவேன் என்று கூறியபோது உனது மனநிலை சரியில்லை. அதைப் பார்க்கும்போதே தெரிந்து கொண்டேன். இப்போது உன் மனநிலை தெளிவாகி விட்டது. இதுவும் பார்த்த உடனே தெரிகிறது!

– இயக்குனர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆரவாரம்; மகிழ்ச்சி; இனிப்புகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனாலும் திரைக்கதையில் உப்புசப்பில்லையே! உணர்ச்சி வேண்டுமே! என்ன ‘கிளைமேக்ஸ்’ வைக்கலாம் என்று இயக்குனர் சிந்திக்க, உடனே பளிச்சிடுகிறது

‘அய்டியா’!

நீதிமன்ற வளாகத்துக்குள் குழுமியிருந்த பத்திரிகையாளர்களை சற்று விலகச் சொல்கிறார்; அப்படியே மண்ணில் விழுந்து வணங்குகிறார். இயக்குனர் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தோடுகிறது.

முதல் காட்சியில் வடித்த கண்ணீர்; இறுதி காட்சியிலும் கண்ணீரோடு முடிகிறது. பார்வையாளர்கள் உள்ளம் கசிந்துருகுகிறது. ஆகா குடும்பப் பாசம் என்றால் இது தான். ‘என்ன புதுமையான காதல் கதை’ என்று பாராட்டுகள் குவிகின்றன.

முடிவில் கீழ்க்கண்ட கருத்துகள் செய்தியாக எழுத்து வடிவில் போடப்படு கிறது.

“இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல; தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெற்றோருக்கும் கிடைத்த வெற்றி, நீதி வென்றது.”

காட்சி முடிகிறது.

பார்வையாளர்கள் எழுந்து செல்கிறார்கள். இத் திரைப் படத் திற்கு ‘சென்சார்’ அனுமதி எது வும் தேவைப்படவில்லை. திரை யிட்டால் தியேட்டர்களில் வெடி குண்டு வெடிக்கும் என்று மர்ம தொலைபேசி மிரட்டல்களும் கிடையாது.

ஜாதி சங்கங்களின் ஆதரவு பெற்ற மகத்தான காதல் காவியம்!

ஆனால் இன்னும் எத்தனை நாள் இது ஓடும்?

– கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 29082013 இதழ்

You may also like...