சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

“மராட்டிய மாநிலத்தில் மும்பையுடன் நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை இம்மாதத் தொடக்கத்தில் (ஜன.12) பிரதமர் மோடி திறந்துவைத்தார். 22 கிமீ நீளம் கொண்ட இப்பாலம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் மிக நீண்ட கடல் பாலம் இதுதான்” என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இன்னொரு செய்தியைக் குறிப்பிட மறந்துவிட்டன. இந்த 22 கிமீ நீள பாதையில் பயணிக்க சுங்கக் கட்டணம் 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி நாடு முழுக்க எல்லா சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இப்படித்தான் தாறு மாறாக இருக்கப் போகிறது என்பதுதான் கடந்த 9 ஆண்டுகால ஆட்சி உணர்த்துகிறது.

2014-15 நிதியாண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 145. ஆனால் அதை படிப்படியாக உயர்த்தி தற்போது 959-ஆக அதிகரித்திருக்கிறது ஒன்றிய அரசு. அதிலும் குறிப்பாக கொரோனா பேரிடருக்குப் பிறகு மட்டும் 650-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நெடுஞ்சாலைகளின் நீளம் 18,807 கிலோ மீட்டரில் இருந்து 38,315 கிலோ மீட்டராக மட்டுமே அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள் ஒரு மடங்கு அதிகரித்தால், சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையோ 6 மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது.

சுங்கச்சாவடிகள் மூலமான வருவாயும் 17,759 கோடி ரூபாயில் இருந்து 48,028 கோடி ரூபாயாக பெருகியிருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் சுங்கச்சாவடிகள் மூலமான வருவாயை 1.3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருக்கிறார் ஒன்றிய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. ஆண்டுக்கு 15% வருவாய் உயர்வை எட்டினால் மட்டுமே இது சாத்தியமாகும். அதற்கு சுங்கக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால் நரேந்திர மோடி அரசோ இரண்டையும் செய்து கொண்டிருக்கிறது.

சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வருவாயைப் பெருக்குகிற இதன் பின்னணிதான் பெரும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. 2021-22 நிதியாண்டில் இருந்து 2024-25 நிதியாண்டுக்குள் “தேசிய பணமாக்கல் திட்டத்தில் ( national monetization pipeline)” 6 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இதில் நெடுஞ்சாலைகள் மூலமாக மட்டுமே 27% வருவாயை ஈட்டிவிடலாம் என்று ஆலோசனை கொடுத்திருக்கிறது நிதி ஆயோக்.  அதாவது நெடுஞ்சாலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை வேகப்படுத்தி, அதன்மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டுவதுதான் இதன் நோக்கம். 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் 27,000 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட உள்ளன. இதன்மூலம் ஒன்றிய அரசு ஈட்ட மதிப்பிட்டிருக்கும் தொகை 53,366 கோடி ரூபாய்.

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு நெடுஞ்சாலைகள் தனியார் வசம் போகும் பேராபத்து இன்னும் சில வருடங்களில் ஏற்படப்போகிறது. பெட்ரோல் விலையை தனியார் நிர்ணயிப்பதைப் போல, சுங்கக் கட்டணத்தையும் தனியாரே நிர்ணயிப்பார்களே ஆனால் லாஜிஸ்டிக் கட்டணங்கள் பெருமளவு அதிகரித்து அனைத்து பொருட்கள், உணவுகளின் விலையும் ஏற்றம் காணும். இன்னொருபக்கம் ரயில்களையும் தனியாருக்கு கூறுபோட்டு விற்கும் வேலையை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. விமானச் சேவைகளில் அரசின் வசம் ஒரு நிறுவனம் கூட இல்லை. விமான நிலையங்களையும் ஒவ்வொன்றாக அதானி வாங்கிக் கொண்டிருக்கிறார். மிச்சமிருப்பது சாலைப் போக்குவரத்து ஒன்றுதான்… அதற்கும் 9 ஆண்டுகளாக சத்தமில்லாமல் வேட்டுவைத்துக் கொண்டிருக்கிறது நரேந்திர மோடி அரசு.

பெரியார் முழக்கம் 25012024 இதழ்

You may also like...