பெரியாருக்கு முன்பு, 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடந்த நாத்திக இயக்கம்
19 ஆம் நூற்றாண்டில் பெரியாருக்கு முன்பு தமிழ் மாகாணத்தில் நாத்திகர் இயக்கம் ஒன்று ‘இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இந்த அமைப்பு ‘தத்துவ விவேசினி’ என்ற தமிழ் இதழையும், ‘தி திங்கர்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளனர். இந்நூல் களைத் தேடிக் கண்டுபிடித்து, சென்னைப் பல் கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியர் வீ. அரசு பதிப்பித்துள்ளார்.
‘நியு செஞ்சுரி புக் ஹவு°’ இத் தொகுதிகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆய்வரங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வரங் கில் அக்.28, 29, 30 தேதிகளில் நடை பெற்றது. பல்வேறு வரலற்று ஆய்வாளர்கள் பங்கேற்று நூலின் உள்ளடக்கங்களை பல்வேறு தலைப்பு களில் ஆய்வு செய்தனர். ‘சென்னை லவுகிக சங்கமும்-பெரியாரும்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29 ஆம் தேதியன்றும், ‘தத்துவ விவேசினியில் பெண்கள் பற்றிய பார்வை’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் 30 ஆம் தேதியன்றும் உரை யாற்றினர்.
இத்தொகுப்புகள் குறித்து பேராசிரியர் வீ.அரசு அளித்த பேட்டியிலிருந்து சில கருத்துகள்:
இந்து சுயக்கியானிகள் சங்கம் (ழiனேர குசநந கூhடிரபாவ ருniடிn) என்னும் அமைப்பு 1878-1888 காலங்களில் தமிழ்ச் சூழலில் செயல்பட்டது. ‘இந்து’ எனும் சொல் இந்தியர்களைக் குறிக்கும். இந்து மதத்தைக் குறிக்காது. சுயக்கியானிகள் என்பது சுயசிந்தனை யாளர்கள். ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட சுயசிந்தனையாளர்கள் அமைப்புகளின் தாக்கத்தால் இவ்வமைப்பு சென்னையில் உருவாக்கப்பட் டுள்ளது. இவ்வமைப்பு பின்னர் 1886 இல் சென்னை லவுகிக சங்கம் (ஆயனசயள ளுநஉரடயச ளுடிஉநைவல) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தத்துவ விவேசினி மற்றும் கூhந கூhiமேநச இதழ்கள் வழி நாம் பெறும் வரலாற்றுத் தகவல் இது. தத்துவ விவேசினி இதழ் பற்றிய தகவல்கள் மிக மேலோட்டமாகச் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், சென்னை லவுகிக சங்கத்தின் இதழ்கள், ‘தத்துவ விவேசினி’, ‘தி திங்கர்’ ஆகியவை என்பதை முதன்மைப்படுத்தி முதன் முதலாக இந்த ஆறு தொகுதிகளின் மூலம் பதிவு செய்கிறோம். இந்தத் தகவல் தமிழ்ச் சமூக வரலாற்றில் இதுவரை அறியப்படாதது. மேலும் இவ்வமைப்பு நாத்திகக் கருத்துச் சார்பில் செயல் பட்டது என்பது மிக முக்கியம்.
தமிழ்ச் சூழலில் மட்டும்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனிய காலத்தில் நாத்திக இயக்கம் செயல்பட்டுள்ளது. வங்காளம் போன்ற பகுதிகளில் சமய சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், சமய மறுப்பு வேறு எங்கும் பேசப்படவில்லை. தமிழ்ச் சூழலில் செயல்பட்ட சென்னை லவுகிக சங்கம், அனைத்து மதங்களையும் மறுத்தது. மத வழிப்பட்ட கடவுள் கோட்பாட்டை மறுத்தது. பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறாத மிகவும் முற்போக்கான செயல்பாடு தமிழ்ச் சூழலில் நடைபெற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
லவுகிக சங்கத்தில் செயல்பட்ட உறுப்பினர்கள் இரண்டு வகையாகச் செயல்பட்டார்கள். நேரடி யாகத் தங்களது பெயரை வெளிப்படுத்திக் கொண்டு எழுதியவர்கள், பெயர்களை வெளிப்படுத்தாமல், முன்னெழுத்துக்களை மட்டும் போட்டுக் கொண்டும் புனைப் பெயர்களிலும் எழுதியவர்கள் இன்னொரு பிரிவினர். முதல் பிரிவினரை ஆங்கிலத்தில் ஆக்டிவ் மெம்பர் என்றும், அடுத்தப் பிரிவை பாசிவ் மெம்பர்ஷிப் என்றும் அழைத்தனர். ‘கிரிஷ்ணகிரி உண்மை விரும்பி’ எனும் புனைப் பெயரில் மிக அதிகமாக ஒருவர் எழுதியுள்ளார். இவர்களைக் குறித்த அடையாளங்களைக் கண்டறிவது கடினம். ம. மாசிலாமணி, பு. முனுசாமி நாயகர், அ. முத்துசாமி முனிவர், தி.சி. நாரயண சாமிப்பிள்ளை, திரிசிராபுரம் புத்தூர் வையா புரியப்பிள்ளை எனச் சில பெயர்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மிகுதியான கட்டுரைகளுக்குப் பெயர் இல்லை.
இவர்களில் இரண்டு முக்கியமான ஆளுமை களை அறிய முடிகிறது. ஒருவர் மாசிலாமணி, மற்றொருவர் இலட்சுமி நரசு. இவர் பின்னர் மிகச் சிறந்த பௌத்த அறிஞராக அறியப்பட்டு, அம்பேத்கரால் பெரிதும் மதிக்கப்பட்ட திரு. பி.எல். நரசு எனும் இலட்சுமிநரசு ஆவார். சென்னை லவுகிகச் சங்கத்தின் கிளை அமைப்பான இந்து மால்தூசியன் சங்கத்தின் செயலாளராகச் செயல் பட்டுள்ளார். இவ்வமைப்பின் பிறிதொரு கிளை அமைப்பான சிறு பத்திரிகா பிரகடந சங்கம் மூலம் சிறுவெளியிடுகள், புத்தகங்கள் கொண்டு வரப் பட்டன. இவ்வமைப்பின் முதல் வெளியீடாக 1885 இல் ‘வருணபேதச் சுருக்கம்’ எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. இந்நூலின் சிறிது விரிவுபடுத்தப்பட்ட வடிவம் 1990 இல் ‘வருணபேத விளக்கம்’ எனும் பெயரில் வெளி வந்துள்ளது. 1926இல் கோலார், சித்தார்த்த புத்தக சாலை மூலம் மேற்குறித்த 1900 வருட நூல் மறு அச்சு செய்யப்பட்டுள்ளது. இந் நூலை முதல் தொகுதியில் இணைத்துள்ளேன். மநு தர்மத்தை மறுத்து; சாதி மறுத்து எழுதப்பட்டது இந்நூல்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்தில் வெளியான கிறித்துவ மறுப்பு நூல்களை வரவழைத்து விற்பனை செய்துள்ளனர்.
சென்னை லவுகிக சங்கத்தின் முதல் வெளி யீடான ‘வருண பேதச் சுருக்கம்’ (1885) என்னும் ‘வருண பேத விளக்கம்’ நூலானது சாதியத்திற்கு எதிரானது. மநுதருமம் என்பது எவ்விதம் பார்ப் பனியமாகச் செயல்படுகிறது மற்றும் எவ்வகையில் வருண பேதங்களை நியாயப்படுத்து கிறது என்ற விவரங்கள் இந்நூலில் பேசப்படு கின்றன.
‘தத்துவ விவேசினி’ மற்றும் ‘தி திங்கர்’ இதழ்களில் சாதியத்திற்கு எதிரான பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதழ்களில் எழுதியோர், தங்கள் பெயர்களுடன் சாதி அடை யாளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்விதம் பயன்படுத்துவதைக் கண்டித்த ‘தத்துவ விவேசினி’ இதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது. நாத்திகம் பேசுபவர்கள் சாதி மறுப்பாளர்களாகவும் இருப்பது அசியம் என்னும் பொருளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மத மறுப்பை எந்த அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்களோ அந்த அளவிற்கு சாதி மறுப்பு குறித்தும் எழுதியுள்ளனர். மனிதத் தன்மைக்கு எதிரானது சாதி என்ற பொருளில் அமைந்த கட்டுரை தத்துவ விவேசினியில் உள்ளது. இவர்கள் வெளியிட்ட நூலை, தமிழ் பௌத்த மரபைச் சார்ந்தவர்கள் மறு அச்சு செய்து பரப்பியுள்ளதைத் தமிழகச் சாதி ஒழிப்பு மரபிற்குச் சென்னை லவுகிகச் சங்கத்தின் பங்களிப்பாகக் கருதலாம்.
சென்னை லவுகிகச் சங்கம் நடத்திய ‘தி திங்கர்’ எனும் ஆங்கில ஏடு, அவர்கள் 1879களில் நடத்திய ‘கூhந ஞாடைடிளடியீhiஉ நnளூரசைநச’ இன் தொடர்ச்சியாக உள்ளது. 1879 முதல் வெளிவரும் இவ்வமைப்பின் ‘தத்துவ விசாரிணி’ இதழின் தொடர்ச்சியாகத் ‘தத்துவ விவேசினி’ வருவதோடு மேற்குறித்த செய்தியை இணைத்துப் பார்க்கலாம். தமிழ்ப் பத்திரிகையில் வெளிவரும் செய்தி வேறாகவும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவரும் செய்தி வேறாகவும் இருக்கிறது. மேலை நாடுகளிலிருந்து இவர்களுக்கு வரும் ஆங்கிலப் பத்திரிகைகளி லிருந்து பல செய்திகளை மீண்டும் ‘தி திங்கர்’ இல் வெளியிட்டனர். தமிழ்ப் பத்திரிகையில் சைவத்தை யும் பிரம்ம ஞானசபையையும் மறுத்து அதிகமாக எழுதினர். ஆங்கிலப் பத்திரிகையில் கிறித்துவ மறுப்பு வெளிப்பட்டது.
‘தி திங்கர்’ இதழ்கள் மிகவும் சிதிலமடைந்து உள்ளன. இப்பத்திரிகைகளின் ஆங்கில மொழி நடை கடினமாக இருக்கிறது. கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
தத்துவ விவேசினி இதழின் மொழி நடை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங் களில் நடைமுறையில் இருந்த மணிப் பிரவாள மொழி நடை சுமார் 125 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ்.
மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இவ்விதழ்களை ஒரு கட்டத்தில் நோட்டில் எழுதினோம். சுமார் இருபது பெரிய அளவிலான லெட்ஜர் நோட்டில் எழுதினோம். பின்னர் கணிப்பொறியில் °கேன் செய்து, பெரிதுபடுத்தி, படிகளை எடுத்து அதனை தட்டச்சு செய்யப் பயன்படுத்தினோம். கட்டுரைகளில் தொடர்ச்சி அறுபட்டுப் போன பகுதிகளுக்குப் புள்ளி இட்டுப் பதிப்பித்துள்ளோம். ஓலைச்சுவடிகளைப் பதிப்பிப்பதுபோன்றது இவ்வேலை. இறுதிக் கட்டத்தில் நியுசெஞ்சுரி நிறுவன ஊழியர்கள் பெரிதும் உதவினர். சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் மூலம் சுமார் 1000 பக்கங்கள் தட்டச்சு செய்தோம்.
எனக்குக் கிடைத்த எனது மாணவ நண்பர்களின் உழைப்பு இல்லாவிட்டால், இதனை முடித்திருக்க முடியாது. கணிப்பொறி வழி சில பணிகளை எளிதாகச் செய்ய முடிகிறது. பயமுறுத்தும் வேலை என்பதால் சுமார் 12 ஆண்டுகள் விட்டுவிட்டு வேலை செய்ய வேண்டி வந்தது. பல்வேறு வசதிகளையும் பெற்றுள்ள நிறுவனங்கள் இவ்வகைப் பணிகளைச் செய்ய வேண்டும். தமிழில் உள்ள வரலாற்று ஆவணங்களாக அமையும் கடந்த 150 ஆண்டுகளில் வெளிவந்துள்ள இதழ்களை, ஓலைச் சுவடிகளைப் போல பதிப்பிப்பது அவசியம்.
சென்னை லவுகிக சங்கம் என்னும் அமைப்பு குறித்த அனைத்து விவரங்கள், விளம்பரங்கள், அறிக்கைகள் உட்பட அனைத்தையும் முதல் தொகுதியில் இணைத்துள்ளோம். இவ்வியக்கத்தின் முக்கிய அறிவிப்புகள் மூலம், அதன் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வியக்கம் நடைமுறைப்படுத்திய கடவுள் கோட்பாடு குறித்த பொருண்மைகள் இரண்டாம் தொகுதியாக அமைகிறது. சாதி, சமயம் மற்றும் பெண்கள் தொடர்பான இவ்வியக்கம் முன்னெடுத்த கருத்து நிலைகள் சார்ந்த கட்டுரைகள் மூன்றாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சென்னை லவுகிக சங்கம் பிரச்சாரப்படுத்திய அறிவியல் செய்திகள், மூடநம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் காலனிய அரசை இவர்கள் எதிர்கொண்ட முறைமைகள் நான்காம் தொகுதியாக அமைகிறது. ஆங்கிலத்தில் உள்ள ஐந்து மற்றும் ஆறாம் தொகுதிகள் ‘தி திங்கர்’ இதழில் வெளிவந்த கடவுள் மறுப்பு. அறிவியல், வறுமை மற்றும் பெண்கள் குறித்த செய்திகளின் தொகுப்பாக அமைகிறது. சுமார் 3500 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதிகளை வெளியிட்ட நியு செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு எங்களது நன்றி என்றும் உரியது, என்று கூறினார் பேராசிரியர் அரசு. ட
பெரியார் முழக்கம் 07112013 இதழ்