வடகலை-தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘குடுமிபிடி’ சண்டை

வைணவத்தில் வடகலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும், தென்கலை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கும் இடையிலான மோதல் இன்றும் தீர்ந்தபாடில்லை.

கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ளது புகழ் பெற்ற தேவநாத சாமி கோயில். பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இக் கோயிலின் வடக்கு பிரகாரத்தையொட்டி மணவாள மாமுனிகள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் 10 நாட்கள் உற்சவம் நடத்தப் படும். இந்த உற்சவத்தின்போது காலையிலும் மாலையிலும் மணவாள மாமுனிகள் வீதி உலா புறப்படும், அந்த உலா தேவநாத சாமி கோயிலைச் சுற்றி வரும்.

மாமுனிகள் வீதி உலா வரும்போது தேவநாத சாமி கோயில் பார்ப்பனர்கள் சன்னதி கதவுகளை இழுத்து மூடி உள்ளே தாழ்ப்பாள் போட்டு விடுகின்றனர். மணவாள மாமுனிகள் சாமியும் அந்த சாமியோடு வருபவர்களும் தேவநாத சாமியைப் பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தீட்டாம்! இப்படி ஒரு தீண்டாமை பல ஆண்டுகளாக நிலவுகிறது. மாமுனிகள் தரப்பினர் எவ்வளவோ முயன்றும் கதவு மூடப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

தீண்டத்தகாதவர்கள் என்று கூறி கதவைச் சாத்துவது மட்டுமல்ல, மாமுனிகள் வீதி உலா வந்த மாட வீதிகளில் சாணியை கரைத்து ஊற்றி தீட்டைத் துடைத்து விடுவதும் நடக்கிறது. தினமும் தேவநாதசாமி கோயில் கதவு திறந்தால் உச்சிக் காலம் முடிந்த பிறகுதான் சாத்தப்படும். ஆனால், உற்சவ காலத்தில் மட்டும் காலை 9 மணிக்கே மூடி விடுவார்களாம். மாமுனிகள் சாமி உலா கடந்து  சென்ற பிறகுதான் மீண்டும் திறக்கப்படுமாம்.

அக்டோபர் 29, மணவாள மாமுனிகள் கோயிலில் உற்சவம் தொடங்கியது. வழக்கம் போல் காலை மணவாள மாமுனிகள் சாமி வீதி உலா வரும்போது தேவநாதசாமி கோயில் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டு விட்டனர். அப்போது தேவநாதசாமி கோயில் பார்ப்பன அர்ச்சகர் களுக்கும், மணவாள மாமுனிகள் சாம கோயில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அவர்களுக்குள்ளே உள்ள வடகலை, தென்கலை பிரச்சினையால் ஆண்டாண்டு தோறும் இந்த பிரச்சினை தொடருகிறது என்று பல ஆண்டுகளாக இதை கவனித்து வருவோர் கூறுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை படம் பிடித்த தொலைக் காட்சி மற்றும் பத்திரிகைகளின் புகைப்படக் காரர்களை தேவநாதசாமி கோயில் பார்ப்பனர்கள் மிரட்டி படம் எடுக்கக் கூடாது என தடுக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மாமுனிகள் தரப்பினர், “ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த பிரச்சினை கைகலப்பாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.

இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தும் அதிகாரிகள் இதில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறது.

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

You may also like...