அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது.
தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட் டத்தில் கைதுக்காக பிறப் பிக்கப்பட்ட ஆணைகளிலிருந்து விரிவாக எடுத்துக் காட்டி விளக்கினார். வாதுரை முடிந்தவுடன் அனைவரும் சேலம் கொண்டு செல்லப்பட்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 26122013