வினாக்கள்… விடைகள்…
ட திருநாவலூர் காவல் நிலைய போலீஸ்காரர் ரமேஷ் பாபு, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேகுவேரா படத்தை ஒட்டி வைத்ததற்காக காவல் நிலைய ஆய்வாளரால் தண்டிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார். – செய்தி
சேகுவேரா படத்துக்கு பதிலாக இவர் ஏதாவது கடவுள் படத்தை ஒட்டியிருந்தால் எந்த நடவடிக்கையும் வந்திருக்காது. அந்தக் கடவுள் படத்தை அகற்றச் சொன்ன ஆய்வாளர் மீது தான் நடவடிக்கை பாய்ந்திருக்கும். இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற நாடாம்!
ட சமூக சீர்திருத்தமும் அறிவியல் விழிப்புணர்வும் சமூகத் தில் நடந்தால் தான் மராட்டியத்தில் நிறைவேற்றப் பட்ட மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டம் வெற்றி பெற முடியும். – ‘இந்து’ ஏடு தலையங்கம்
மிக்க மகிழ்ச்சி. இதே கருத்தை தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரங்களுக்கு அரசு தடை போடும்போது ‘இந்து’ ஏடு எழுதாமல் மவுனம் காப்பது தான் நமது பகுத்தறிவுக்கு புலப்படாமல் இருக்கிறது!
ட தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்து குரல் கொடுக்க முன்வருமாறு அரசியல் கட்சிகளுக்கு டாக்டர் இராமதாசு கடிதம். – செய்தி
நீங்கள் உருவாக்கிய அனைத்து ஜாதி கூட்டமைப்பு, இதற்கெல்லாம் குரல் கொடுக்காதோ? அது சரி, ஜாதி யமைப்புகள் எப்படி அடக்குமுறைகளுக்கு எதிராக போராட முடியும்?
ட நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக காணாமல் போன 189 ஆவணங்களைத் தேடி கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. – செய்தி
இந்தக் குழுவும் காணாமல் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கய்யா!
ட உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்த சோனியா பசியை போக்க வந்த மணிமேகலை. – கலைஞர் கருணாநிதி
மணிமேகலை கையில் அள்ள அள்ளக் குறையாத ‘அட்சயப் பாத்திரம்’ இருந்தது! சோனியாவிடம் வெறும் ‘கை’ மட்டும் தானே இருக்கிறது! அதனா லென்ன? இப்போது அட்சயப் பாத்திரமெல்லாம் வேண்டாம். தேர்தலுக்கு ‘கை’ கைகொடுத்தாலே போதும் தானே!
ட 2002 கலவரத்தில் உடைக்கப்பட்ட 535 மசூதிகளை மீண்டும் அரசு செலவிலேயே குஜராத்தில் கட்டித்தர மோடி ஆட்சி உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது. – செய்தி
இடித்த மசூதிகளை கட்டித் தரலாம்; கலவரத்தில் கொல்லப்பட்ட உயிர்களை திருப்பித் தருவார்களா?
ட வகுப்பு மோதலற்ற இந்தியாவை உருவாக்க தேசிய நல்லிணக்க நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும். – மாநிலங்களவையில் பா.ஜ.க. உறுப்பினர் ராம் ஜோய்ஸ்
அந்த நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு பா.ஜ.க.வை தடை செய்வதாக இருக்குமே! பரவாயில்லையா?
ட ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க கோயில்களில் உள்ள தங்கத்தை அரசு எடுப்பது ‘தேச விரோதம்’! கடுமையாக எதிர்ப்போம். – சுப்ரமணிய சாமி
சரி; தங்கத்தை எடுக்க வேண்டாம். கடவுள்களிடம் முறையிட்டு பொருளாதார நெருக்கடியை உடனே நிறுத்தச் சொல்லுங்கள்.
ட வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள், சுகாதார சீர் கேட்டில் சிக்கி, நோயாளிகளாக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. – ‘தினமலர்’ செய்தி
ஆரோக்கிய மாதா அப்படித்தான் சோதிப்பாள். அதற்கெல்லாம் கலங்கக் கூடாது.
ட இலங்கையில் நிலைமைகளை நேரில் பார்வையிட வந்த அய்.நா. மனித ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையை திருமணம் செய்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சிங்கள அமைச்சர் பேச்சு. – செய்தி
அய்.நா. மனித உரிமைக் குழுவை அனுப்புவதைவிட அய்.நா.வின் மனநல மருத்துவர்கள் குழு ஒன்றை அவசரமாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இராஜபக்சேவின் அமைச்சர்களுக்கு அவசர சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது!
பெரியார் முழக்கம் 05092013 இதழ்