சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு
என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது சோம்பறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை – முடிவுகளை தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது.
நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய ஒரு குறையும் இருப்பதாக நான் கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டுவிட்டுப் போகிறேன் என்று அதிருப்திப்பட மாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆகவேண்டும்? ஏதாவது ஒரு வேலையில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே முக்கியமானதும் முடிவானதுமான வேலையென்று இறங்கிவிட்டேன். இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள் மறைந்துவிடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும். தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால் போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம்.
அதாவது, பண்டிகைக்காக ஓய்வெடுத்துக் கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக் கும் உயிருள்ளவரை இருந்துதான் தீரும். “சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக் குத் தெரியாத சூட்சும சரீரத்திற்கும்” கூட ‘மோக்ஷமும்’, ‘முக்தி’யும் கற்பித்திருப் பதில் ஜீவனுக்கு வேலையில்லாமலும் அனுபவமில்லாமலும் மோக்ஷம் – முக்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து தீரவேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.
இதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் சொல்லலாம். நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப்படுவது முன்னுக்குப் பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில், நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர்பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் எதற்கு செய்ய வேண்டும்? நிஷ்காமியமாய் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே ‘ஒரு பலன் ஏற்பட வேண்டும்’ என்பதற்காக வேண்டி செய்வது என்பது அருத்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பீடித்துத் தான் தீரும்.
ஆனால், உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே. இந்த வேலை – சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால், இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தைக் கொடுத்து சலிப்பாக வேலை செய்யச் செய்யவில்லை. உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.
– பெரியார் ‘குடிஅரசு’ 18.7.1937
பெரியார் முழக்கம் 28112013 இதழ்