மன்னையில் திலீபன் நினைவு நாள் கருத்தரங்கு
தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சரசுவதி பேசினார். பெரியார் 135 ஆவது பிறந்த நாள் மற்றும் தியாக மறவன் திலீபன் 26 ஆவது நினைவேந்தல் கருத்தரங்கம் கழகத்தின் சார்பில் மன்னார்குடி அம்பேத்கர் அரங்கத்தில் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது.
தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் மகேசு, தஞ்சை மாவட்ட செயலாளர் பாரி, எழுத்தாளர் பசு. கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் பெரியாரின் படத்தினை கருக்கல் பத்திரிகை ஆசிரியர் அம்ராபாண்டியன், திலீபன் படத்தினை தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர். இனப்படுகொலை போர் குற்றம் மனித உரிமை மீறல், “இலங்கை காமன்வெல்த் மாநாடு- நாம் செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரசுவதி உரையாற்றினார். துவக்கத்தில் மன்னை நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 17102013 இதழ்