கொள்கைகளை நிர்ணயிப்பவர்களே ‘அவாள்’ தான்! பார்ப்பன அதிகார வர்க்கம் வலிமை பெறுகிறது பயணத் தொடக்க விழாவில் விடுதலை இராசேந்திரன் உரை
மக்கள் பிரதிகளின் அதிகாரங்கள் குறைக்கப் பட்டு பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கம் கொள்கைகளை நிர்ணயித்து அமுல்படுத்தி வருகிறது என்று மயிலாடுதுறையில் ஜூலை 24 அன்று சுயமரியாதை சமதர்மப் பயணத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். அவரது உரை:
சுயமரியாதை, அந்த சொற்களுக்குள் அடங்கி இருக்கிற பொருள் ஒரு சமூகம், அந்த சமூகத்தில் வாழ்கின்ற மனிதன் தன்மானம் உள்ள மனிதனாக, சுயமரியாதை உள்ள மனிதனாக, வாழ்ந்தால் அவன் ஒரு மனிதன் என்பதற்கான அடையாளம். அந்த சுயமரியாதை அடையாளத்தை இந்த சமூகத்திற்கு குறிப்பாக இந்த பார்ப்பனர் அல்லாத சமூகத்திற்கு மீட்டு தருவதற்காக வந்த இயக்கம் தான் பெரியார் இயக்கம். 1932ம் ஆண்டு பெரியார் தன்னுடைய சுயமரியாதை கொள்கைகளோடு சமதர்ம கொள்கை களையும், இணைத்து சுயமரியாதை சமதர்மத் திட்டம் என்கிற ஒரு திட்டத்தை ஈரோடு நகரத்திலே வகுத்தார்கள். அதாவது சுயமரியாதை கொள்கை களோடு பொதுவுடமை கொள்கைகளையும், இணைக்கின்ற சமூக அரசியல் கோட்பாடுகளை முன்வைக்கின்ற ஒரு திட்டம்,
அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி பொதுவுடமை என்றாலே தங்களுக்கு எதிரி என்று கருதப்பட்ட நாளில் சுயமரியாதை இயக்கத்தையே தடை செய்யும் ஒரு நிலை உருவான போது சமதர்ம திட்டத்தை வேண்டுமானால் நான் பிறகு பார்த்துக் கொள்வேன். ஆனால் இந்த சுயமரியாதையை பேசுவதற்கு இந்த மண்ணில் வேறு யாரும் இல்லை எனவே அந்த இயக்கம் நடத்தப்படவேண்டும் என்பதற்காக அந்த சமதர்ம திட்டத்தை சற்று ஒத்தி வைத்துவிட்டு பெரியார் சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத் தார். இன்றைய காலச்சுழலில் மனிதனின் இழிவை ஒழிக்கிற அந்த கோட்பாடுகளோடு சமத்துவம் என்கிற ஒரு கோட்பாட்டை இணைக்க வேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது. அந்த அடிப்படை யில் நாட்டு மக்களிடம் சில கருத்துக்களை விதைக்க வேண்டும் என்று இந்த இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள். இந்த பயணத்திற்கான திட்டங்களை உருவாக்கியது இந்த இயக்கத்தினுடைய இளைஞர்கள் இந்த பயணத் திற்கான உழைப்பை வழங்குவதும் இந்த இயக்கத்தின் இளைஞர்கள், இந்த பயணத்தோடு மட்டுமல்ல இந்த கொள்கைக்கு இந்த லட்சியத்திற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டு பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் இணைத்துக் கொண்டு இதனால் தங்கள் சொந்த நலனுக்கு, சுயலாபத்திற்கு எந்தவித வருமானமோ லாபமோ இல்லாமல் சமூதாயத்தின் கவலை ஒன்றையே கருதி இந்த பணியில் களப்பணியாற்ற வந்திருக்கிறார்கள் இது ஒரு மிகமிக அபூர்வமான ஒரு செய்தியாகும். அந்த இளைஞர்கள் தான் இங்கே வீதி நாடகத்தை நடித்து காண்பித்தார்கள். பறை இசையை ஒலித்தார்கள். ஜாதி தீண்டாமைக்கு எதிரான பறை இது என்கிற முழக்கத்தோடு ஜாதி வெறியை பிணமாக்கி காட்டி நம்மிடத்திலே தன்மான உணர்ச்சியை தூண்டிவிட்டிருக்கிறார்கள்.
ஜாதி தீண்டாமை ஒடுக்கு முறைகளையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளையும் பெரியார் தந்த சுயமரியாதை பார்வையில் அந்த வெளிச்சத்தில் மக்கள் மன்றத்திலே கொண்டு செல்லுகின்ற பயணமாக இந்த பயணம் அமைய விருக்கிறது. அந்த சுயமரியாதை கருத்துகளோடு சம தர்மம் என்கிற கருத்துக்களையும், ஏன் இணைக்க வேண்டும் என்று சொன்னால் இந்த சமுதாயம் சுயமரியாதை உள்ள சமுதாயமாக மாறுவதற்கு சமதர்மம் என்கிற கொள்கை அவசியத் தேவை யாகிறது. அரசினுடைய பொருளாதார திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே சுயமரியாதையை இழந்து நிற்கின்ற இந்த சமூதாயத்தை மேலும் இழிநிலையில் உள்ள மக்களாக மேலும் புறந்தள்ளக் கூடிய மக்களாக மாற்றக்கூடிய ஒரு கொள்கை யாகவே இருக்கிறது. 1990ம் ஆண்டில் மண்டல் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டபோது பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு ஒரு சில மத்திய அரசு பணிகளில் மட்டும் உண்டு என்ற ஆணை வந்தபோது ஜாதீய ஆதிக்கவாதிகள், பார்ப் பனர்கள் ஒரு பெரும் கலவரத்தை உருவாக்கினார்கள் அதன் காரணமாக இந்த ஆணையை பிறப்பித்த வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தே போனது, அதற்கு ராமன் கோவிலை கொண்டு வந்து காரணம் காட்டி ஆட்சியை கவிழ்த்தார்கள்.
அதற்குப் பிறகும் அந்த இடஒதுக்கீடு ஆணை சட்டமாகி இந்த நாட்டில் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசிலே சில அரசு பதவிகள் அரசு பணிகள் இவைகள் எல்லாம் இருந்தால் தானே நீங்கள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். எனவே மத்திய அரசினுடைய பதவிகள், பணிகள் பொதுத் துறைகள் அத்தனையும் இல்லாமல் ஒழிப்போம் பார் என்பதற்காக இந்த நாட்டில் பார்ப்பன சக்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கை தான் புதிய பொருளாதார கொள்கை.
அது அமலுக்கு வந்தபிறகு அவசர அவசரமாக மத்திய அரசினுடைய பணி நியமனங்கள் நிறுத்தப் பட்டன. மத்திய அரசினுடைய பல துறைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. பொதுத் துறைகள் வேகவேகமாக தனியார் நிறுவனமாக மாற்றப் பட்டன. பங்குகளை விற்கின்ற ஒரு நிலைமை வேக வேகமாக தொடங்கியது அதன் காரணமாக அரசு பொதுத் துறைகளில் அரசாங்க நிர்வாக கட்டமைப்பில் கொள்கை முடிவு எடுக்கின்ற இடங்களில் இந்த நாட்டினுடைய பொருளாதார கொள்கைகளை முடிவு எடுக்கின்ற மையங்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு இடம் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டு அதனுடைய அதிகாரம் எல்லாம் இந்த நாட்டில் இருக்கின்ற பார்ப்பன உயர்ஜாதி அதிகார வர்க்கங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டன.
புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டு வந்தபோது அவர்கள் சொன்னார்கள், இதனால் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் உயரப் போகிறது வெளிநாட்டுக்காரர்கள் இந்த நாட்டில் அவர்களுடை தொழில் நுட்பத்தைக் கொண்டு வருவார்கள். நம்முடைய தொழில் நுட்பம் வெளிநாட்டிற்கு போகும். எனவே வெளிநாட்டின் தொழில் நுட்பத்திற்கும், நம்முடைய தொழில் நுட்பத்திற்கும் இடையே பெரிய போட்டி வரப் போகிறது. அந்த போட்டியில் இங்கு நாம் பெரிய சந்தையை உருவாக்கப் போகிறோம், இறக்குமதி செய்யப் போகிறோம், அதேபோல் ஏற்றுமதியும் செய்யப் போகிறோம், சர்வதேச தரத்திற்கு இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தப் போகிறோம் என்றெல்லாம் ஜாலவார்த்தைகளை காட்டி கொண்டு வந்த அந்த திட்டம் அவர்கள் சொன்ன அந்த இலக்கை அடைந்திருக்கிறதா? இந்தியாவிற்குள் வெளிநாட்டு சுரண்டல் படையெடுத்துக்கொண்டு இருக்கிறதே தவிர இந்தியாவின் உள்நாட்டு தொழில் உற்பத்திகள் அத்தனையும் அழிந்து நாசமாகிப்போய் சிறுதொழிலை குறுந்தொழிலை நடத்துகிறவன் பிளாட்பாரத்திற்கு தள்ளப்படுகின்ற ஒரு நெருக்கடியைத்தான் உருவாக்கினார்கள். மண்டல் குழு அறிக்கையை கொண்டு வந்தாயே உன்னை நான் பழிவாங்கி காட்டுகிறேன் பார் என்று இன்றைக்கு மக்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாய தொழில்களில் ஈடுபட்டிருக்கிறவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அந்த விவசாயம் பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற விவசாயமாகி அந்த விவசாயத்திற்குள் செயற்கையாக விளைவிக்கப்பட்ட கத்திரிக்காய்கள் உருவாக்கு கிறார்கள். பன்னாட்டு உற்பத்தியான செயற்கை உரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான, பல லட்சக் கணக்கான விவசாயிகள் பூச்சிகளை அழிக்கக்கூடிய வயலுக்கு விடவேண்டிய பூச்சி மருந்துகளை தாங்கள் சாப்பிட்டு உயிரை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாங்கள் வெளிநாட்டு மூலதனங்களை இறக்குமதி செய்ய போகிறோம் என்கிறார்கள். இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 61ஆக படுசரிவை சந்தித்து விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது என்றால் என்ன அர்த்தம்? வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் நாம் டாலருக்கு ரூபாய் என்கிற அடிப்படையில் தான் நாம் செலுத்த வேண்டும். அப்போது இறக்குமதிக்கு இதுவரை கொடுக்க வேண்டி இருக்கிற பணம் டாலருடைய மதிப்பு ரூபாயின் மதிப்பு சரிய சரிய நாம் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இன்னொரு பக்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகின்ற பொருள்களுக்கு வரிகளை இந்திய அரசு கணிசமாக குறைத்து விட்டது.
அதுமட்டும் அல்ல, அரசாங்கத்தினுடைய அய்ந்தாண்டு திட்டங்களில் அடிப்படையான உற்பத்திகளை செய்யகூடிய வளங்களை ஏற்படுத்தக் கூடிய நீண்டகால திட்டங்களுக்கான செலவு தொகை மிக கனிசமாக குறைக்கப்பட்டது. உலக வங்கி சொன்னது நீங்கள் உங்கள் நாட்டினுடைய வரவு செலவு திட்டத்தை துண்டு விழாத வரவு செலவு திட்டமாக உருவாக்கவேண்டும் என்றது. வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான செலவுகளை குறைக்க வேண்டும் மருத்துவத்திற்காக செய்யும் செலவுகளை குறைக்கவேண்டும், ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்காக வழங்கப்படுகின்ற அரிசி போன்ற பல்வேறு பொருள்களுக்கு வழங்கப்படுகின்ற மானியங்களை குறைக்கவேண்டும் என்று உலக வங்கி கட்டளையிடுகிறது. கல்வி உரிமையை மருத்துவ செலவை குறைத்துக்கொண்டு அதே நேரத்தில் துண்டு இல்லாத பட்ஜெட்டை போடு என்று இங்கே உள்ள ஆட்சிக்கு வெளிநாட்டில் உள்ளவன் சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு இங்கே உள்ள திட்டங்களுக்கான செலவை குறைத்தார்கள். எனவே பெரிய திட்டங்கள் இல்லாமல் போனது, திட்டங்கள் இல்லாமல் போனதால் நமக்கு வரவேண்டிய வருவாயும் குறைந்தது. வருவாய் குறைந்து போன காரணத்தினால் பொருளாதாரத்தில் பெரிய நெருக்கடி பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்காக வெளிநாட்டு காரர்களுக்கு மனுப்போட்டு நீ இங்கே மூலதனத்தைக் கொண்டு வா நான் வால்மார்ட் கடைகளாக வணிக நிறுவனமாக, விற்பனை நிறுவனமாக நான் அனுமதி தருகிறேன் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு பல துறைகளில் 100க்கு 100 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வரப் போகிறார்களாம். தொலைதொடர்பு உட்பட 13 துறைகளில் அப்படி அன்னிய முதலீட்டை அனுமதித்திருக்கிறார்கள். கேட்டால் என்ன சொல்கிறார்கள் என்றால் அன்னியநாடு இங்கு முதலீடு செய்கிற போது அன்னிய பணம் இங்கு வரும்போது நாட்டின் பொருளாதார சரிவை மீட்டுக் கொள்ள முடியும் என்று சமாதானம் சொல்கிறார்கள். ஆனால் அன்னிய முதலீட்டிற்கு கதவு திறந்து விட்ட பிறகு வெளிநாட்டுகாரன் முதலீடு செய்வது இந்த நாட்டின் பங்கு சந்தைகளில் தான் உற்பத்தித் துறையில் மிகக் குறைவுதான். இந்த நாட்டில் நடைபெறும் ஊக வணிகத்திற்கு பணத்தை கொண்டு வந்து முதலீடு செய்கிறான். தொழிற் சாலைகள் துவங்கப் போகிறேன் என்று சொல்லி விளை நிலங்களை வளைத்துப் போட்டு அவற்றை ரியல் எஸ்டேட் தொழிலாக மாற்றம் செய்து அதில் முதலீடு செய்கிறான். இப்படி அன்னிய முதலீட்டிற்கு திறந்து விட்ட மூலதனம் எல்லாம் இந்த நாட்டு மக்களைச் சுரண்டுகிறது. அவன் காரியம் முடிந்த பின்பு அந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவன் நாட்டிற்கு போய் விடுகிறான். இந்த சூழ்நிலை தொடர்கிறபோது இந்த நாடு திவால் ஆகும். எல்லையை நோக்கி பொருளாதாரம் போய்க் கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த நாட்டில் பெரும் தொழில் அதிபர்களாக இருக்கக் கூடியவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு கடந்த ஆண்டு மட்டும் நாடாளுமன்றத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டிருகிறது. உச்ச நீதிமன்றத்தில் ஒருவன் வழக்கு போடுகிறான். லஞ்சம் கொடுப்பதாக கருதி இலவச பொருள்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வழக்கு வருகிறது. உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது? லஞ்சம் கொடுப்பதாக கூறி நாங்கள் இதைத் தடைசெய்ய முடியாது என்றாலும் தேர்தல் ஆணையம் இதை பற்றி பரிசீலித்து இலவசங்களை யாரும் அளிக்கக் கூடாது என்று முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொன்னது.
தேர்தல் அறிக்கையிலே இலவசங்களை கட்சிகள் அறிவிப்பது உண்மைதான். ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பிறகு ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் தொழிலதிபர்களுக்கு வரிவிலக்கு தரப்போகிறேன் என்று எந்த கட்சிக்காரராவது அவரது தேர்தல் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்களா? தேர்தல் அறிக்கையிலே சொல்லாமலே இத்தனை லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் வெறும் 450 கோடி ரூபாய்க்காக நெய்வேலியில் பங்கை விற்கப் போகிறேன் அதுவும் லாபம் தரக்கூடிய பங்கை எடுத்து விற்கப் போகிறேன் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டும், அதற்கு பணம் வேண்டும். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தனை தங்கமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது, அதற்கு பணம் வேண்டும். தங்கம் என்பது தொழில்களுக்கு அதன் வளர்ச்சிகளுக்கு எந்த ஆக்கபூர்வமான பங்களிப்பையும் கொடுக்கவில்லை. மாறாக அது முடக்கப்படுகிறது. கோவில்களில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் முடங்கிப் போயிருக்கிறது. தங்கத்தின் பயனை குறைத்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை சொல்லுகிறார் அமைச்சர் சிதம்பரம்.
திருப்பதி ஏழுமலையானுக்கு வைரத்திலும் வைடூரியத்திலும் செருப்பு செய்கிறான், தங்கத்திலே தேர் செய்கிறான். வேறு எந்த நாட்டிலாவது பொருளாதாரத்தில் அதுவும் மக்களுக்கு நெருக்கடி வரும்போது கோவிலுக்கு, கடவுளுக்கு தங்கத்தை இப்படி வாரி, வாரி இறைக்கிறானே அதற்கு ஒரு கடிவாளம் போட வேண்டும் என்று கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பனீயம், இந்துத்துவா போன்றவை நம்மை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த ஜாதியின் காரணமாக வறுமையை சந்தித்துக் கொண்டு இருக்கின்ற மக்கள் சுயமரியாதை உணர்வோடு போராடி எழுகிறபோது இந்திய பார்ப்பனீய அரசினுடைய அது பாஜக அரசாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி இந்த கொள்கைகள் மேலும் அவர்களை அடிமைப் படுத்துகின்றன. பாஜக ஆட்சியில் பங்குகளை விற்பதற்காக அருண்சோரி என்கிற பார்ப்பனர் அமைச்சராக இருந்தார்.
அதைத்தான் இன்று காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. நாளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் அதன் கொள்கை இதுதான். வி.பி.சிங் எப்போது 27 சதவீத பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தாரோ அன்றைக்கு பார்ப்பனர்கள் எடுத்த சபதம், இந்த நாட்டின் கட்டமைப்பை இந்த நாடாளு மன்றத்தை அதிகாரம் இல்லாத நாடாளுமன்றமாக மாற்றிக் காட்டுவேன் என்பதுதான். அதில் பி.சி. அதிகமாக இருக்கலாம் எஸ்.சி. அதிகமாக இருக்கலாம் எண்ணிக்கையில் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால் இதற்கான கொள்கைகளை உருவாக்கக்கூடிய அதிகார கட்டமைப்பில் பார்ப்பனராகிய நாங்கள்தான் இருப்போம் என சபதம் போட்டனர். இன்றைக்கு நாடாளுமன்றத்தைவிட மிக செல்வாக்கான அமைப்பு முதலீடு கட்டுப்பாட்டு வாரியம் என்கிற செபி. ஏன், நெய்வேலியில் உள்ள பங்கை விற்கிறாய் என்று கேட்டால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது செபி சொல்கிறது, செய்கிறோம் என்று சொல்லுகிறது ஆட்சி. செபியின் தலைவராக இருக்கிறவர் ரங்கராஜன் என்கிற பார்ப்பனர். அவர் ரிசர்வ் வங்கியிலே இருந்தவர்.
அந்த செபி உத்தரவு போடமுடியும், நடவடிக்கை எடுக்கமுடியும் சோதனை செய்யமுடியும், என்கிற அளவிற்கு யாருக்கும் தெரியாமல் அவசர, அவசரமாக ஒரு சட்டம் இரண்டு நாட்களுக்கு முன் பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆக இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய பொறுப்பை செபி என்கிற ஒரு பார்ப்பன அமைப்பு ஏற்றுச் செய்து கொண்டு வருகிறது. இவர்களுக்கு உத்தரவு போடுகின்ற ஒரு அமைப்பு உலக வங்கி. அந்த வங்கி இந்த நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை தராதே, மருத்துவத்தை தராதே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காதே, மானியங்களை தராதே, மாறாக பங்கு வர்த்தகத்தை திறந்து விடு. மேலும் பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்து விடு என்று உத்தரவு போடுகிறது. அந்த உலக வங்கியிலும் இந்த நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் தான் உயர் அதிகாரிகளாக வேலை செய்கிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளு மன்றத்தைவிட அதிகார அமைப்புகள் வலிமை மிக்கவையாக மாறி வருகின்றன. இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றம் அது ஒரு பார்ப்பன மன்றம். அது அரசாங்கத்தை நடத்துகின்ற மன்றமாக மாறி மக்களால் தேர்த்தெடுக்கப்படுகின்ற மன்றத்திற்கு உத்தரவு போடுகின்ற மன்றமாக அதிகாரத்தை கையில் எடுத்து விட்டது.
ஆகவே இந்த நாட்டில் அதிகாரத்தை செலுத்தக் கூடிய அத்தனை நிறுவனங்களும் மக்களால் தேர்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்ற பிரதிநிதிகளை துண்டித்துவிட்டு பார்ப்பன அதிகார வர்க்கம், உயர்ஜாதி அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனம் பெரும் முதலாளிகள் கையாட்களாக மாறி நிற்கிறார்கள். இவர்கள்தான் இந்த நாட்டின் அதிகாரத்தை நிர்னயிக்கக் கூடிவர்கள் என்கிற அளவிற்கு இந்த இந்திய தேசியம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு அமைப்பில் இருந்து சுயமரியாதைக்கு போராடிக் கொண்டிருக்கிற மக்கள் வாழ்வுரிமைக்கு போராடிக் கொண்டிருக்கிற மக்கள் தங்கள் வாழ்வுரிமையை சுயமரியாதையை மீட்டெடுக்க முடியுமா?
இந்த வாழ்வுரிமைக்கும் சுயமரியாதைக்கும் நடத்துகின்ற போராட்டத்தில் இவர்களை மேலும் மேலும் பள்ளத்தில் கொண்டு போய் ஆழ்த்திக் கொண்டிருக்கிற இந்திய தேசியம் என்கிற இந்த பார்ப்பன பன்னாட்டு பகல் கொள்ளைக்காரர்களுடய கோர முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி இந்த அரசுகளுக்கு எதிராக இந்த ஆட்சிகளுக்கு எதிராக இந்திய தேசிய பார்ப்பனீயத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதி எதிர்ப்பு என்கிற தளத்தில், இந்துமத எதிர்ப்பு என்கிற தளத்தில் பெண்ணுரிமை மீட்பு என்கிற தளத்தில் ஒட்டு மொத்தமாக சுயமரியாதை என்கிற தளத்தில் அணி திரட்டி ஒரு சமத்துவத்தை நோக்கிக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு புறப்பட்டு இருக்கிற இந்த பயணத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்றார் விடுதலை இராசேந்திரன்.
செய்தி : மன்னை இரா.காளிதாசு
பெரியார் முழக்கம் 19092013 இதழ்