அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர்.
விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:
“நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால், பிணை கிடைத்துவிடும் என்று ஊகமாகக் கருதிக் கொண்டு, அவர்கள் பிணையில் விடுதலையாகிடக் கூடாது என்ற ஊகத்தின் அடிப்படையில் தேசியப் பாது காப்புச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டரீதியான எங்கள் தரப்பு கருத்துகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட மனுவில் விளக்கப்பட்டுள்ளன. நான் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு சில நியாயங்களை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். எங்களுடைய இயக்கம் அரசியல் கட்சி அல்ல; பெரியாரின் ஜாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், சமூக நீதி, பெண் ணுரிமை, பகுத்தறிவு கருத்துகளை மக்களிடம் பரப்பும் சமுதாய இயக்கம். இன்றைய சூழலில், இளைஞர்கள் இப்படிப்பட்ட சமுதாயக் கொள்கைகளை நோக்கி வருவதே மிகவும் அதிசயமான அபூர்வமான நிகழ்வாகும். அரசியலுக்குப் போனால் பணம், பதவி, அதிகாரங்கள் கிடைக்கும். இங்கே அத்தகைய எந்தப் பயனும் கிடைக்காது. இளைஞர்களில் பெரும்பாலோர் பொழுதுபோக்கு, கேளிக்கைக் கொண்டாட்டங்கள், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில் மக்களுக்கு உண்மையான தொண் டாற்ற வரும் இத்தகைய இளைஞர்கள் மீது அவர்கள் கொள்கைக்காக நடத்தும் பேராட் டங்களைக் காட்டி வாழ்க்கையே முடக்கிப் போடும் இத்தகைய சட்டங்களைப் பயன்படுத் துவது நீதி தானா? என்று கேட்கிறோம்.
கைது செய்யப்பட்ட இந்தத் தோழர்கள், உண்மையிலேயே இந்தக் குற்றத்தைச் செய்திருப்பார்கள் என்பது உறுதியானால், அதற்கான சட்டங்களின் கீழ், நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களது பெரியார் இயக்கம் எந்த வன்முறை செயல்பாடுகளையும் ஏற்கவில்லை. ஆனால், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி, ஓராண்டு காலம் முடக்கியிருப்பதால்தான், இங்கே நியாயம் கேட்க வந்திருக்கிறோம். தோழர் உமாபதியின் துணைவியாருக்கு அறுவை சிகிச்சை நடந்து, ஒரு சில நாட்களிலேயே அவர் துணைவியாருக்கு பாதுகாப்பாக இருந்த நிலையில் வீட்டில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் அவர் இல்லை; கைது செய்யப்பட்ட ஒரு தோழரிட மிருந்து உமாபதி குறித்து வாக்குமூலம் பெற்று, அவர் மீது காவல்துறை பொய்யாக வழக்குத் தொடர்ந் துள்ளது. தோழர்கள் ஒப்புதல் வாக்குமூலம் ஏதும் தரவில்லை. காவல்துறையே ஒப்புதல் வாக்குமூலங்களை தயாரித்துள்ளது. எனவே அதில் அவர்கள் கையெழுத்திடவில்லை. கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் இதற்கு முன் எந்த குற்றச்சாட்டின் கீழும் தண்டிக்கப் பட்டவர்களும் அல்ல.
இந்தியாவில் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடும்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அதிகம் இல்லாத மாநிலம் தமிழ்நாடு. ஆனால், தமிழ்நாடுதான் தடுப்புக் காவல் சட்டங்களை அதிகமாகப் பயன்படுத்தும் மாநிலமாக உள்ளது. 2012 ஆம் ஆண்டு குற்றவியல் ஆவண நிறுவனம் தந்துள்ள தகவல்படி, 523 பேர் தமிழ்நாட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவுரைக் குழுமங்கள்தான் இதற்கு நீதி வழங்க வேண்டும்.
அறிவுரைக் குழுமங்கள் கடந்த காலங்களில் தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்த முன் வந்ததே கிடையாது அரசு பிறப்பித்த ஆணைகளுக்கு ஏற்பு வழங்கிக் கொண்டே இருந்தன. தமிழக வரலாற்றிலேயே இந்த அறிவுரைக் குழுமம் தான் பல தடுப்புக் காவல் ஆணைகளை நீக்கம் செய்து, நம்பிக்கை ஒளியைக் காட்டியிருக்கிறது. எனவே, தங்களிடமிருந்து நிதியை எதிர்பார்க்கிறோம்” என்று விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார்.
மருத்துவர் எழிலன் தனது வாதுரையில், “கைது செய்யப்பட்ட தோழர்கள் வாழும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நான் மருத்துவராகப் பணியாற்றுகிறேன். இந்தத் தோழர்களை நான் நன்கு அறிவேன். அவர்கள் பெரியார் கொள்கை பரப்பும் பணியை மட்டுமல்ல, மக்களுக்காக குருதிக் கொடை வழங்குதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், மக்கள் பிரச்சினைகளுக்கு ஓடிச் சென்று உதவுதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறார்கள். இவர்கள் மீது இதற்கு முன் எவ்வித குற்ற வழக்கிலும் தண்டிக்கப் படாதவர்கள். சமுதாயத் தொண்டாற்றும் இந்த இளைஞர்கள் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் – சட்டத்துக்கும் இயற்கை நியதிக்கும் எதிரானது. அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ் 12122013