ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார்.

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார். பார்ப்பனிய வாதிகள் மதத்தின் தீண்டாமையையும் வழி பாட்டின் தீண்டாமையையும் சமூகத்தில் ‘மேல்-கீழ்’ தன்மையையும், சாஸ் திரம், ஆகமம், சடங்கு, வாழ்க்கை முறைகளில் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டிலிருந்து அய்ரோப்பிய நாடுகளுக்குப் போன பார்ப்பனர்கள், ஜாதியவாதிகள் தங்களுடன் ஜாதியையும் கொண்டுச் சென்றனர். அய்ரோப்பிய நவீன வாழ்க்கை ஒரு பக்கம்; பார்ப்பனிய ஜாதி வேற்றுமைகளைக் கட்டிக் காப்பது மற்றொருபுறம் என்ற இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பார்ப்பன இந்தியாவைப் போல், ஜாதியைப் பாதுகாக்க அய்ரோப்பிய நாடுகள் தயாராக இல்லை. 28 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய ஒன்றியம், ஜாதிக்கு எதிராக இப்போது போர்க்கொடி உயர்த்தி விட்டது. ஜாதி அடிப்படையில் காட்டப்படும் பாகு பாடுகள் மனித உரிமை மீறல்கள்; சர்வதேசக் கேடு (ழுடடியெட நுஎடை) என்று அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டித்துள்ளது.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அய்ரோப்பிய நாடாளுமன்றம், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜாதியால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் ‘தீண்டாமை’க்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்தியா, நேபாளம், பாகிஸ் தான், பங்களா தேஷ், இலங்கை ஆகிய நாடுகளில் தீண்டாமை தொடருகிறது என்றும் தீர்மானம் கூறுகிறது. செய்யும் தொழில், பாரம்பர்யம் என்ற அடிப்படையிலும் இந்தப் பாகுபாடு ஏமன், நைஜிரியா, செனகல், சோமாலியா ஆகிய நாடுகளிலும் தொடருவதாக தீர்மானம் கூறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் இந்தியாவில் ஜாதி அடிப்படையில் தலித் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடப்பதைக் கண்டித்து, இதேபோல் அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இப்போது நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானம், உலகம் முழுதும் ஜாதி அடிப்படையில் உள்ள பாகுபாடுகளையும் தலித் மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது நடத்தப்படும், ஜாதி தொடர்பான வன் முறைகளை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளது. பெண்கள் மற்றும் தலித் பெண்கள் மீது சமூகத்தில் ஜாதி அமைப்பு காரணமாக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் அல்லது சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் பாதிக்கப் பட்டவர்களே வெளியிடத் தயங்குகிறார்கள். இதனால், தலித் பெண்கள் மைனாரிட்டி சமூகப் பெண்கள் கட்டாய மதமாற்றத்துக்கு தள்ளப் படுகிறார்கள். கடத்தப்படுகிறார்கள், பாலியல் சந்தையில் விற்பனைப் பொருளாக தள்ளப் படுகிறார்கள்.

ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளால் உலகம் முழுதும் 260 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில அரசுகள் இதைத் தடுக்க சட்டங்கள் நிறைவேற்றி பாதுகாப்புத் தர முன்வந்தாலும் அதையும் மீறி இந்த மனித உரிமை மீறல் தொடருகிறது.

குறிப்பாக புலம் பெயர்ந்து வந்த சமூகங் களில் ஜாதியப் பாகுபாடுகளும் தீண்டாமை களும் நீடிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நவீன வடிவங்களில் தீண்டாமை பின்பற்றப் படுகிறது. உழைப்புச் சந்தையில் (வர்த்தகம் வேலை வாய்ப்புகளில்) பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பங்கேற்க முடியாமல், புறக்கணிக்கப்படு கின்றனர். இந்தியா போன்ற சில நாடுகளில் இட ஒதுக்கீடு போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகள் பொதுத் துறைகளில் தலித் மக்களின் பங் கேற்பை ஓரளவு உறுதி செய்துள்ளது என்றா லும், தனியார் துறைகளில் புறக்கணிப்பும், விலக்கி வைப்பதும் தொடர்கிறது.

தெற்கு ஆசியாவில் கொத்தடிமைகளாக பலியானவர்களில் பெரும்பகுதியினர் பட்டியல் இனத்தவராகவும், பழங்குடியினராகவும் இருக்கின்றனர் என்று சர்வதேச தொழிலாளர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுதும் தொழில் நடத்தும் அய்ரோப்பிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உடல் உழைப் பாளர்களாக இந்த மக்களே தள்ளப்படு கின்றனர். விவசாயம், சுரங்கம், ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற வேலைகளில் ஈடுபடு வோரில் இந்த மக்களே அதிகம் என்று அய்ரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானம் கூறுகின்றது. ‘தலித் மனித உரிமைக்கான தேசிய இயக்கம்’ இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளது. இந்த மிக முக்கிய செய்தியை தமிழில் வெளிவரும் நாளேடுகளோ, தொலைக் காட்சி ஊடகங்களோ இருட்டடிப்பு செய்து விட்டன.

‘ஜாதித் தேவைதான்’ என்று சில தமிழ் அமைப்புகள் வெளிப்படையாகப் பேசக் கிளம்பியிருக்கின்றன. மருத்துவர் ராமதாஸ் , ஜாதிய சக்திகளை அணி திரட்டி, தலித் மக்களுக்கு எதிராகவும், ஜாதிக் கலப்பு திருமணங்களுக்கு எதிராகவும் செயல்படும் நிலையில், அய்ரோப்பிய நாடாளுமன்றம் ஜாதிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி யிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பெரியார் தொடங்கிய ஜாதி எதிர்ப்பு இயக்கமும் இட ஒதுக்கீடு உரிமை இயக்கமும் அய்ரோப்பிய நாடாளுமன்றத்தின் குரலாகவே ஒலித்திருப் பது பெரியாரியத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

பெரியார் முழக்கம் 30102013 இதழ்

You may also like...