வினாக்கள்… விடைகள்…
வினா : டெல்லி ராஜ்காட்டில் காந்தி சமாதிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு. – செய்தி.
விடை : ஆட்சியாளர்கள் பயப்பட வேண்டாம்; சமாதியை உடைத்துக் கொண்டு காந்தி நிச்சயம் வெளியே வரமாட்டார்.
வினா : ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்தை அவரது வீட்டில் சந்தித்து தனது கட்சியை பா.ஜ.க. வுடன் இணைத்தார். – செய்தி
விடை : ஒரு கட்சியின் இணைப்பையே வீட்டு வரவேற்பறையில் நிகழ்த்தும் உலகச் சாதனையை சுப்ரமணியசாமியால் மட்டுமே செய்ய முடியும்!
வினா : தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து ஆந்திராவில் முழு அடைப்பு நடந்த நாளிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. – செய்தி
விடை : அப்போ, ஏழுமலையான் முழு அடைப்பில் பங்கேற்கவில்லையா? அப்படியானால் தெலுங்கானா பிரிவினையை ஏழுமலை யானும் வரவேற்கிறானா?
வினா : மாநில கட்சிகளுக்கு பிரகாசமான எதிர் காலம் இருப்பதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பரதன் கூறினார். – செய்தி
விடை : கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மாநில உரிமைகளை வழங்கலாமே, தோழர்!
வினா : காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொறுப்பு உண்டு. அது என்னவென்றால், தேசிய நீரோட்டத் திலிருந்து தமிழகம் விலகிச் செல்லக்கூடாது. தேசிய நீரோட்டத்தையொட்டியே தமிழகம் இருக்க வேண்டும். – ப. சிதம்பரம் பேச்சு
விடை : முதலில் காவிரி நீரோட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்க; அப்புறம் தேசிய நீரோட்டம் பற்றி யோசிக்கலாம்!
வினா : பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். – அமைச்சர் நாராயணசாமி
விடை : அடுத்த, 15 நாட்களுக்குள்ளாகவா சார்?
வினா : அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தபோது நடைபாதையில் 2 சிறுத்தைப் புலிகள் நடந்து சென்றதைப்பார்த்து, பக்தர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். – செய்தி
விடை : பக்தர்கள் ‘பாத யாத்திரை’ போகலாம். புலிகள் ‘பாத யாத்திரை’ போகக் கூடாதோ? இது எந்த ஊர் நியாயங்க?
வினா : ‘திராவிட’ என்பது போன்ற இனத்தின் அடிப்படையில் பெயர் வைத்துள்ள கட்சி களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. – செய்தி
விடை : தேர்தல் ஆணையத்தின் பெயரில் இணைந் துள்ள ‘இந்திய’ என்ற இனப் பெயரையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!
வினா : களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப் படாததும் எவ்வித ரசாயன கலவையற்றது மான வினாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
விடை : உண்மையாகவே சொல்கிறோம். இதுதான் மக்களுக்கான சரியான ஆகம விதி! இதே போல் வேத மந்திரங்கள் ஓதப்படாமலும், ‘பிராமணர்கள்’ மட்டுமே ‘விக்கிரத்தை’ தொட்டு பூஜை செய்ய முடியாததுமான ஆகமவிதிகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமே அறிவித்துவிட்டால், சமூக சுற்றுச் சூழலை மோசமான கேடுகளிலிருந்து காப்பாற்றி விடலாம்.
பெரியார் முழக்கம் 15082013 இதழ்