ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’
நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும்...