ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை !

வாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டிவிட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து,சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை மாவட்டக் கழக செயலாளர் தோழர் உமாபதி மற்றும் கழகத் தோழர் செந்தில் FDL ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப்,நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும்?இதுபோல் ஆபாசமாகவும்,கொலை மிரட்டல் விடுத்தும் பேசிவரும் ஜாதிவெறியர்கள் மீது சட்டப்படியான வழக்குகள் மூலம் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் கழக வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

பெரியார் இயக்கம் தொடர்ந்து இந்த மண்ணில் ஜாதி ஒழிப்புப் பணியில் எவ்வித சமரசமும் இன்றி ஜாதிவெறியர்களின் பல்வேறு விதமான கடும் எதிர்ப்புகளை எதிர் கொண்டு அவற்றை முறியடித்து வந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதிவெறியர்களின் எவ்வித எதிர்ப்பையும் எதிர்கொள்ள எந்த சூழலிலும் அணியமாக உள்ளது. கொலை மிரட்டல் விடுக்கும் முகம் காட்ட மறுக்கும் கோழை ஜாதி வெறியர்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் கழகத் தோழர்கள் அதனை எதிர்கொண்டு முறியடிக்க அணியமாகவே உள்ளனர்.

தமிழக அரசிற்கு பல்வேறு நிலைகளிலும்,பலமுறை இது போன்ற தொலை தொடர்பு ஊடகங்கள்,சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் சர்வ சுதந்திரமாக எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி தொடர்ந்து சட்ட விரோதமாகசெயல்படும் ஜாதி வெறியர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கழகத்தின் சார்பில் தொடர்ந்து காவல்துறை, இணையதள குற்றப்பிரிவு ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் இந்த மெத்தனப்போக்கே ஜாதிவெறியர்கள் நவீன ஊடகங்களை எவ்வித தயக்கமும் இன்றி தவறாக பயன்படுத்தக் காரணமாக அமைகிறது.

இனியும் தமிழக அரசு இந்த நவீன ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி கலவரத்தை உருவாக்க முயலும் ஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும், ஜாதி கலவரம் உருவாவதையும் தடுக்க இயலாது.

தமிழக அரசு இதுபோலவே தொடர்ந்து பாராமுகமாக இருக்குமேயானால் கடைமை ஆற்றத் தவறும் இணையதள குற்றப்பிரிவு காவல்துறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தோழமை அமைப்புகள்,ஜனநாயக சக்திகளைத் திரட்டி திராவிடர் விடுதலைக் கழகம் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

– திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...