ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும் ஜாதிவெறியன் நவீனாவின் சித்தப்பா கார்த்திக் என்பவர் தொடர்ந்து தேடி நவீனா இணையர் வாழும் இடத்தை அறிந்துகொண்டு, யாரும் உடன் இல்லாமல் நவீனா மட்டும் தனியே இருப்பதை உளவுபார்த்து அறிந்து கொள்கிறார். உடனே, ( 5-8-2016 ) அடியாட்களுடன் வந்து, தான் ஊருக்கு வெளியே நின்றுகொண்டு, தனது அடியாட்களை கோபால் என்பவன் தலைமையில் அனுப்பி தூக்கிச் சென்றுவிடுகிறார். தகவல் அறிந்ததும் பெரியண்ணன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு கும்பல் தனது மனைவியைக் கடத்திச் சென்றதைப் புகாராக அளித்துள்ளார்., ஒரு நாள் கடந்த நிலையிலும் காவல்நிலையத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதைக் கண்டு, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு இரத்தினசாமி, தமிழ்நாடு-புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண..குறிஞ்சி. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் காவலாண்டியூர் ஈசுவரன் ஆகியோருடன் 6-8-2016 அன்று ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று முறையீடு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் அம்மாபேட்டை காவல்ஆய்வாளர் நவீனா வந்துவிட்டதாகவும் பவானி மகளிர் காவல்நிலையம் வருமாறு பெரியண்ணனை அழைத்துள்ளார். அங்கு போனால் அதற்கு முன்னதாகவே நவீனா தன் பெற்றோரோடு போக ஒத்துக்கொண்டதாகக் கூறியுள்ளனர். இரவு 9-45 மணியளவில் குற்றவியல் நடுவர் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டு நவீனாவின் பெற்றோரோடு அனுப்பி வைத்துள்ளனர்

[ தப்பிவந்த நவீனா,  மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒரு வெள்ளாளப் பெண்ணாய் பிறந்துவிட்டு சாணானைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்றுகேட்டு – உதவி ஆய்வாளர் கொங்கு வேளாளர் சமுதாயத்தவர் – தன்னைத் தலையில் பலமுறைக் கடுமையாகக் கொட்டியும், அடித்தும் வற்புறுத்தியதாகக் கூறுகிறார். அது போலவே அங்கு வந்த பவானி துணைக் கண்காணிப்பாளரும் வீணாக செத்துத்தான் போகப் போகிறாய் என்றும், உன் கணவனின் உயிரும் தேவையில்லாமல் போகப் போகிறது என்றும் மிரட்டி வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கியுள்ளார். – அவரும் கொங்கு வேளாளர்தான். காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளருக்கு ரூ. 50,000/- கொடுத்ததாக நவீனாவின் சித்தப்பா கார்த்தி பின்னர் கூறியுள்ளார்.]

அழைத்துச் செல்லப்பட்ட நவீனாவை மிகவும் கெடுபிடியாக  சித்தப்பா ( சித்தியின் கணவர் ) கார்த்திக்கின் வீட்டில் தங்க வைத்துள்ளனர். எப்போதும் உடன் யாராவது இருந்துகொண்டும், நவீனா கைகளில் கைபேசிக் கிடைக்கவிடாமலும் எச்சரிக்கையாக இருந்துள்ளனர்.

எப்படியோ அவர்களையும் ஏமாற்றிவிட்டு தனக்குக் கிடைத்த ஒரு கைபேசி வழியாக தனது கணவரைத் தொடர்பு கொண்டு, நீங்கள் எனது சித்தப்பா வீட்டுக்கு அருகில் வந்து மோட்டார் சைக்கிளோடு நில்லுங்கள்; நான் எப்படியாவது தப்பிவந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அவ்வாறே பெரியண்ணனௌம் மோட்டார் சைக்கிளோடு 10-8-2016 அன்று அங்கு சென்றுள்ளார். நவீனாவும் வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டிக் குதித்து வந்து பெரியண்ணன் மோட்டார் சைக்கிளில் ஏறும்போது அவரது சித்தி ஓடிவந்து நவீனாவின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். நவீனா கீழே விழுந்துள்ளார். ஆனாலும் தன் சித்தியைக் கீழே தள்ளிவிட்டு மீண்டும் ஓடியுள்ளார். ஆனால் சித்தி சத்தம்போட அன்று சந்தை நாளாக இருந்ததால், கூட்டமாக நின்ற மக்கள் நவீனாவைப் பிடித்து விடுகின்றனர்.

நவீனா கருவுற்றிருப்பதையறிந்த அவரது சித்தியும், சித்தப்பாவும் அடுத்த நாளே 11-8-2016 அன்று அவர்து கண்ணைக் கட்டி சுமார் 1½ மணி நேரம் பயணம் செய்து ஒரு மருத்துவ மனையில் கட்டாயக் கருக் கலைப்பு செய்துள்ளனர். மேலும் ஒரு நாள் அங்கேயே தங்கியிருந்து விட்டு அடுத்தநாள் பூதப்பாடிக்கு அழைத்து வந்துள்ளனர்.

15-8-2016 அன்று ஈரோடு சித்ரா தங்கவேலு என்ற மருத்தவரிடம் கவுன்சிலிங்குக்கு என்று அழைத்து சென்றுள்ளனர். அவர் சிறிது நேரம் நவீனாவோடு பேசிவிட்டு, வேறு ஒரு சீனியர் டாக்டர் திருச்சியில் இருந்துவருகிறார்; அவரிடம் நீ பேசு என்று கூறியுள்ளார். அதேபோல ஒருவர் மாலை 6-30 மணியள்வில் வந்துள்ளார். அவர் நவீனாவைத் தனியாக அமரவைத்து காதல் அரும்பிய நாளில் இருந்து அன்றுவரையிலான எல்லா செய்திகளையும் துல்லியமாகக் கேட்டு அறிந்துள்ளார். அது மட்டுமின்றி பெரியண்ணனின் குடும்பம், உறவினர்கள், அவர்களது வசிப்பிடம் எல்லாவற்றையும் அக்கறையுடன் கேட்டறிந்துள்ளார். அதுபோலவே அவரின் தொடர்புள்ள எல்லோரிடமும் கேட்டறிய அனைவரது கைபேசி எண்களையும் கேட்டறிந்துள்ளார். நவீனாவும் மனம் விட்டு அனைத்து செய்திகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் கூறியுள்ளார். முடிவாக சில நாட்கள் தனது ஹோமில் தங்கவேண்டியிருக்கும் என்று அந்த சீனியர் டாக்டர் கூறியிருக்கிறார்.

வீடு திரும்பிய அடுத்த நாள் மீண்டும் கைபேசியில் பேச நவீனா முயற்சி செய்துள்ளார். அவரது சித்தப்பா இனி சரிப்படாது, உன்னை ஹோமுக்கு அனுப்பவேண்டியதுதான் எனக் கூறி, அன்று பிற்பகல் 3-00 மணியளவில் ஹோமுக்கு அழைத்து சென்றுள்ளார். சென்றபோது ஏற்கனவே இரண்டு இளம்பெண்கள் அங்கிருந்துள்ளனர். தங்கியிருந்த இரண்டு பெண்களும் ஹோமின் ”சிறப்புகளை” இரவே விளக்கியுள்ளனர். அடுத்த நாள் அந்த சீனியர் மருத்துவர் அங்கு வந்துள்ளார். வந்தவரும் வெறொருவரும் நவீனாவையை அழுத்திப் பிடித்துக் கொள்ள வேறொருவர் கருப்பு பிளஸ்டிக் ஹோசால் உள்ளங்கால்களில் கடுமையாக போலீஸ் அடி அடித்துள்ளனர். சிறிது நேரம் அடித்ததும் இவரை எழுந்து நடக்க வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் அடித்துள்ளனர். அந்த சீனியர் மருத்துவர்தான் கொங்கு வேளாளர் சங்கப் பிரமுகர் – திருமணத் தகவல் நிலையம் நடத்தும் துளசிமணி என பின்னர் அறிந்துள்ளனர். அவரோடு வந்தவர்களில் சரவணன், பாலன் என்ற இருவரின் பெயர்கள் மட்டும் இவர்களுக்குத் தெரிகிறது.

மேலும் நான்குப் பெண்கள் ஒவ்வருவராக அங்கு வந்து சேர்ந்துள்ளனர். அன்று முதல் தப்பித்த 3-10-2016 வரை அவ்வப்போது ஒவ்வருக்கும் அடி விழுந்தவண்ணமே இருந்ததாம். தப்பியவர் 4-10- 2016 அன்று காலை கொளத்தூர் ஒன்றியம் காவலாண்டியூரில் உள்ள தோழர் ஈசுவரின் இல்லம் வந்துசேர்ந்துவிட்டார்.

 

இவை ஒருபுறம்; மறுபுறம் பெரியண்ணன் தனது மனைவிக்காக கழக வழக்குரைஞர் அருண் அவர்கள் வழியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் 27-8-2016 அன்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய, அம்மாபேட்டைக் காவல்துறைக்கு ஒரு மாத காலக்கெடுவில் நவீனாவைத் தேடிக் கொணர வேண்டுமென ஆணையிட்டது. 27-9-2016 அன்று 3-10-2016க்குள் நவீனாவைக் கொணரவேண்டுமென மீண்டும் ஆணையிடுகிறது. 3-10-2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்திக் அம்மாபேட்டை உதவி ஆய்வாளர் நடேசன்  ( இவரும் கொங்கு வேளாளர்தான்.)  நவீனா வைரல் காய்ச்சலோடு உள்ளார் என்பதற்கான ஒரு மருத்துவரின் சான்றிதழோடு காலநீட்டிப்புக் கேட்டுள்ளார். 17-10-2016க்கு வழ்க்கு ஒத்திவைக்கப்பட்டது, வைரல் காய்ச்சல் எனக்கூறி வாய்தா கேட்ட அதே நேரத்தில்தான் நவீனாவும் வேறு நான்குப் பெண்களும் தங்களை அடைத்து வைத்திருந்த, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, வி.எஸ்.ஆர் கார்டனில் உள்ள தங்கமணி இல்லம் எனும் ”ஹோமில்” இருந்து தப்பியுள்ளனர்.

நவீனாவும், பெரியண்ணனும் , கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வீட்டில் செய்தியாளர்களுடன் இந்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 13102016 இதழ்

14519655_694316117373774_8827361513184271078_n 14520372_694316247373761_6585509685853140897_n000 00

You may also like...