அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’
நீட் எதிர்ப்புக்கு உயிர்ப்பலி தந்த அனிதாவின் 9-ஆம்ஆண்டு நினைவு நாள் செப்டம்பர்-1ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நீட் ஒழிப்புக்கான உறுதி ஏற்பு நாளாக நடைபெற்றது.
நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த நினைவு நாள் திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால் திராவிடர் கழகத்தின் தலைமையிடமான பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டது.
பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு தலைவர்கள் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். ஆசிரியர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் வீரவணக்க உரையாற்றினர். நீட் எதிர்ப்பையும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. தோழர் தியாகு உறுதிமொழியைப் படித்தார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர். தபசி குமரன், சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, அற்புதம் அம்மாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நன்றி கூறினார்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் காவல்துறை தடையை மீறி திட்டமிட்டபடி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி தலைமையில் கழகத் தோழர்களும், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, நீட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சார்ந்த அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் உள்ளிட்ட தோழர்களும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.
காலை 10:30 மணிக்கு, நினைவேந்தல் நிகழ்வு, சென்னை ராயப்பேட்டை பத்ரிநாராயணன் பெரியார் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தலைமையில், மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் குடிஅரசு முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மருத்துவர் அனிதாவின் சகோதரர் மணிரத்னம் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், அருண் இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 03092026
