பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

திருநெல்வேலி பணகுடி பகுதியில் கழகப் பரப்பரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உற்சாகம் பெற்று மேடைக்கு வந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். தோழர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பணகுடி பகுதியில் பரப்புரையைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ராஜலட்சுமி பயணக் குழு தோழர்களை பாராட்டி குளிர்பானம் வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர்.

அதிராம்பட்டினம் பள்ளிகொண்டான் பகுதியைச் சார்ந்த தோழர்கள் ராஜேஷ், வினோத், மகேஷ் ஆகியோர் கழகப் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆடை போர்த்தி கழக வெளியீடுகளை வழங்கினார்.

கோவை ’தோழர்’ அறக்கட்டளை சாந்தகுமார் பேராவூரணி அணி தோழர்களுக்கு முதலுதவி மருந்து பொருட்களை வழங்கினார்.

பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துக்களை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர்.

திருச்சி பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் இரண்டு நாட்களும் தனது இல்லத்தில் பயணக்குழு தோழர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அய்யாவுக்கு வயது 85. பயணக்குழு அரியலூர் நோக்கி புறப்படுவதற்கு முன் இவ்வாறு கூறி வழியனுப்பினார். ”யார் யாரோ சொல்லுகிறார்கள் சிங்கப்படை என்று; ஆனால், மக்களுக்காக களத்தில் நிற்கும் இது தான் சிங்கப்படை”.

திருச்சி அணியை தலைமையேற்று நடத்தும் உமாபதிக்கும், குழுவில் இணைந்து பயணிக்கும் பெரியார் பிஞ்சு திராவிட மகிழனை ’இளம்புலவர்’ என்று பாராட்டினார். ஆண் தோழர்களோடு சமமாக இணைந்து பயணிக்கும் இரண்யாவுக்கும் பாராட்டு தெரிவித்து ஆடை போர்த்தினார்.

சமூநீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் மேகநாதன் திருச்சி பயணக்குழு தோழர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி ரூ.500 நன்கொடை அளித்தார்.

திருச்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் பானுமதி பயணக் குழுவினரை பாராட்டி ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

அரியலூரில் தெருமுனைக் கூட்டம் பொதுக்கூட்டம் போல் மிகச்சிறப்பாக நடந்தது. கழகத் தோழர் பாரி.சிவா சிறப்பான முன்னேற்பாடுகளை செய்திருந்தார். திமுக ஒன்றியச் செயலாளர் எழில்மாறன் 50-க்கும் மேற்பட்ட தோழர்களோடு பங்கேற்றார்.

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை இளையராசா அரியலூர் நிகழ்வில் பங்கேற்று ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

திருச்சியில் நடந்த பயணத் தொடக்க விழாவில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் கலைக் குழுவினர் 18 பேருக்கும் தலா ரூ.1,000 அன்புப் பரிசாக வழங்கினார்.
நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் இதழ் 13082026

You may also like...