தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!

புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி சார்பில் 2009 மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவுகளோடு, “தமிழீழ வரலாற்றில் பெண் புலிகள் நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சி” 18.05.2026 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, தோழமை ஒன்றுகூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர் அன்பு எழிலன் வரவேற்புரையாற்றினார்.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி பெரியாரிய கொள்கைக்காக கழகப் பணிகளை செய்தும், கொள்கைக்காக பல வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்ற தோழர்.கடலூர் தாமரைகண்ணன் முயற்சியில் தமிழ் ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுகின்றன. அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

“கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ பெண்களின் சிறுகதைகள் ‘வழி’, வேர்கள் துளிர்க்கும், பெண்களும் புரட்சியும், மார்ச் 8 அனைத்துலகப் பெண்கள் நாள், கட்டுநாயக்கா தாக்குதல் வெற்றி” ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தோழமை இயக்கத் தோழர்கள் பலர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூல்களை வெளியிட்டு பேசுகையில் நடந்துவிட்ட அவலம் என்பதை நினைவு கூறுவது நமது நோக்கம் அல்ல!. நடந்த அவலங்களுக்கு தீர்வு காண்பதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்கும் நிகழ்ச்சியாக இந்நாளை கருதி, மீண்டும் ஈழமக்களை இணைக்கவும்;. நியாய உணர்வுள்ள உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும்; நடத்த கொடுமைகளுக்கு நடவடிக்கை தேவை என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நிறைவாக புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் உரையாற்றி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பெரியார் முழக்கம் இதழ் 04062026

You may also like...