ஈரோடு-விருதுநகர் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவாவின் பங்கு என்ன? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 13 -கொளத்தூர் மணி

தோழர் ஜீவா அவர்களின் வரலாற்று வரலாற்றாளர்களான தோழர்கள் இஸ்மத் பாஷா, கே.பாலதண்டாயுதம் ஆகியோரே ஜீவாவுடன் நேரடியாக பழகி உரையாடி அவரது வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புடையவர்கள் என்பதாலேயே அவர்களது நூல்களை முதன்மை ஆவணமாகக் கொண்டு எழுதி வருகிறோம்.
அந்நூல்களில் சுயமரியாதை மாநாடுகளில் ஜீவா நிகழ்த்திய வீரதீர செயல்பாடுகள் குறித்து அந்நூல்களில் விதந்தோதப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம்.
தோழர் இஸ்மத் பாஷாவின் நூலின் 23ஆம் பக்கத்தில் “சென்னையில் போலீஸ் அடக்குமுறை எல்லையை மீறி விட்டது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள். ஆறு போல் இரத்தம் ஓடிற்று. அச்சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு கூடிற்று. போலீஸ் அடக்கு முறையை வன்மையாகக் கண்டித்து ஒரு தீர்மானம் விஷயலோசனைக் கமிட்டியில் வந்தது. ஜீவா அதை ஆதரித்து உணர்ச்சித் ததும்பப் பேசினார். ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எல்லோருடைய சுயமரியாதை உணர்ச்சியைத் தட்டி எழுப்பினர்” என்று காணப்படுகிறது.
தோழர் பாலதண்டாயுதம் நூலிலும் 38ஆம் பக்கத்தில் ‘`அடக்கு முறையோ எல்லை மீறிக் கொண்டிருந்தது; தொண்டர்கள் அடித்து வீழ்த்தப்பட்டார்கள்; சிறையும் சித்திரவதையுமாக ஆதிக்கவெறி தலைவிரித்து ஆடிற்று. இச் சமயத்தில் ஈரோட்டில் சுயமரியாதை மாநாடு நடந்தது. போலீஸ் அடக்கு முறையைக் கண்டித்து விஷய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் வந்தது. ஜாதி மத விவகாரங்களில் மட்டும் நம் சுயமரியாதை இயக்கம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொண்டால் போதாது; அரசியல் விவகாரங்களிலும் நம் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ச்சித் ததும்ப ஜீவா தீர்மானத்தை ஆதரித்து பேசுகையில் கூறினார்” என்று காணப்படுகிறது.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை அறிய நாம் குடிஅரசு இதழ்களைத் தான் பார்க்க வேண்டி உள்ளது. ஈரோட்டில் 1930ஆம் ஆண்டு மே மாதம் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் இரண்டாவது சுயமரியாதை மகா நாடும் அதை அனுசரித்து வாலிபர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, சங்கீத மகாநாடு ஆகிய ஐந்து மகாநாடுகள் நடந்துள்ளன.
ஈரோடு மாநாட்டில் என்ன நடந்தது?
அம்மாநாட்டைக் குறித்து மே மாதம் 18, 25 ஆகிய நாளிட்ட இதழ்களில் ‘ஈரோடு மகாநாடு’ என்ற தலைப்பில் தலையங்கங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் மே18ஆம் நாள் இதழில் மாநாட்டு தீர்மானங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
“இந்த மகாநாட்டில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரமே விவாதத்திற்கு இடமாகி தள்ளப்பட்டு விட்டது. மற்றொரு தீர்மானம் கேட்டுக் கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது. அதாவது திரு.காந்தியின் உப்புச் சட்ட வீரர்களை ஆதரித்து, அதனால் துன்பமுற்றவர்களுக்கு அனுதாபம் காட்டி சர்க்காரைக் கண்டனம் செய்வது; மற்றொன்று திரு காந்தியாரின் உப்பு சட்டமறுப்பு சத்தியாகிரகம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை என்று கண்டனம் செய்வது.
பிந்தியதைக் கொண்டு வந்த நண்பர் கேட்டுக்கொண்டதன் பேரில் நிறுத்திக் கொண்டார். முந்தியதைக் கொண்டு வந்த நண்பர் பிரேரேபித்ததில் அக்ராசனர் (தலைவர்) அரசியல் (அதாவது பொலிட்டிக்கல்) விஷயத்தை சம்பந்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை உள்ள இந்த மகாநாட்டில் இந்த விஷயம் கொண்டு வருவது நியாயமாகாது என்ற காரணம் சொல்லி தள்ளப்பட்டு விட்டது. அவைகளைத் தவிர வேறு எல்லா வித தீர்மானமும் அனேகமாய் ஏக மனதாகவே நிறைவேறிற்று” என்ற செய்தியே வெளியாகி உள்ளது. ஆக ஜீவாவால் அப்படிப்பட்ட வீர உரை எதுவும் ஈரோடு மாநாட்டு விஷய ஆலோசனை கமிட்டியில் ஆற்றப்பட வில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.
இதுகுறித்து ஜீவா தனது ‘ஈரோட்டுப் பாதை சரியா’ என்ற நூலில் “உப்பு சத்தியாகிரக காலத்தில் நாடு முழுவதும் பல இடங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னையிலும் வேதாரண்யத்திலும் அடக்குமுறை பேயாட்டம் ஆடியது. ஈரோடு மகாநாட்டில் அரசாங்கத்தின் அடக்கு முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற சில இளைஞர்கள் முயன்றனர். இந்த தீர்மானம் விஷய ஆலோசனைக் கமிட்டிக்கு வந்த பொழுது கமிட்டிக்குத் தலைமை வகித்த ஆர்.கே.சண்முகம் சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கலாமா கூடாதா என்று முடிவு கட்டிய பின்னர்தான் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியும் என்றார், உடனே ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கலக்கக்கூடாது. யார் எவ்வளவு தூற்றினாலும் சரி, போற்றினாலும் சரி சட்ட மறுப்பை ஆதரிக்கக் கூடாது. தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும் என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். தீர்மானத்திற்கு இடம் கிடைக்கவில்லை” என்று நொந்து கொள்கிறார்
1930 மே மாதத்தில் நடந்த ஈரோடு மாநாட்டில் மட்டும்தான் அவ்வாறு திடீரென சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கலக்கக்கூடாது ……. தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும் என்று திடீரெனக் கூறப்பட்டதா என்பதை நாம் யோசிக்க வேண்டி உள்ளது.
1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டிலே கூட கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தில் “(4) இம் மகா நாடு சமூக மதத்துறைகளிலே மாத்திரம் சீர்திருத்தம் செய்யும் வேலையை மேற்கொண்டு இருந்தாலும், நேரு கமிட்டி அறிக்கையானது நமது இயக்கத்தின் அடிப்படைக்கான கொள்கைக்கு விரோதமாய் இருக்கிறபடியால் அதனைக் கண்டிப்பதுடன், இந்தியாவில் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்துகிறது” என்று உள்ளதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்
மேலும் ஈரோடு மாநாட்டுக்கு முன்னதாகவே 23.3.1930 நாளிட்ட குடி அரசு இதழின் ஒன்பதாம் பக்கத்தில் ‘ஓர் மறுப்பு’ என்ற தலைப்பில் வெளிவந்திருந்த அறிக்கையை நாம் இப்போது காணலாம்.
திரு ஈ.வெ.ராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட மறுப்பை பத்திரிகைகளுக்குத் தந்தி மூலம் அனுப்பியிருக்கிறார். அதாவது:-
“20ஆம் தேதி வெளிவந்த சென்னை தினசரி பத்திரிகைகளில் ஆயிரக் கணக்கான சுயமரியாதைச் சங்க அங்கத்தினர்கள் உப்பு வரியை எதிர்த்து சத்தியாகிரகம் செய்யப் போவதாக ஒரு செய்தி வெளிவந்திருப்பதைப் பார்த்தேன். யாராவது தன் சொந்த ஹோதாவிலோ அல்லது வேறு ஹோதாவிலோ உப்பு சட்டத்தை மீறுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பெயரால் யாராவது உப்புச் சட்டம் மறுப்பு செய்யத் தொடங்கினால் அம்முயற்சி சுயமரியாதை இயக்கத்தாரால் ஆதரிக்கப்பட்டதாகாது. அவ் இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களில் ஒருவர் என்கின்ற முறையில் எனக்காவது ,சுயமரியாதை சங்கத் தலைவருக்காவது அதில் சம்பந்தமே கிடையாது. உப்பு சட்டத்தை மீறுவது என்பதை இது சமயம் நான் வன்மையாக்க் கண்டிக்கிறேன் உப்பு சட்டத்தை மீறுவதனால் சுயமரியாதை இயக்கத்திற்கு எத்தகைய நன்மையும் உண்டாகாது” என்ற ஓர் எச்சரிக்கை அறிக்கையை நாம் காண முடிகிறது.
இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே இப்படிப்பட்ட ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தும் அதில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட வன்முறை குறித்து தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாததை எப்படி குறை கூற முடிந்ததோ நாம் அறியோம்!
தோழர் கே.பாலதண்டாயுதம் அவர்களின் ‘ஜீவா வாழ்க்கை வரலாற்று’ நூலில் ஜீவாவின் மற்றுமோர் வீரச் செயலை பற்றி பதிவு செய்திருக்கிறார்.
கதர் பொருளாதாரம் அல்லது கதரைப் பற்றிய மூடநம்பிக்கை ( Supetition of Khadi) என்ற நூலை வெளியிட்ட திரு. எஸ். ராமநாதன் “கைராட்டினத்தை அடிப்படையாகக் கொண்ட கதர் பொருளாதாரம் வளர்ச்சிக்கு வித்திடாது; மாறாக பின்னோக்கியே இழுக்கும். தற்கொலை செய்து கொள்வது அல்லது பிச்சை எடுப்பது என்பவற்றைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் வேண்டுமானால் கதர்த் தொழிலை ஒரு மாற்றுத் தொழிலாக கொள்ள முடியும்” என்ற தீர்மானத்தை விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டில் பிரேரேபித்துக் கடுமையான விவாதம் நடந்தது.
மாநாட்டுப் பிரதிநிதிகளில் மிகப் பெரும்பான்மையர் இதே கருத்தைப் பிரதிபலித்தனர். வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது போல் தீர்மானத்தை எதிர்த்து ஜீவா முழங்கினார். தேசிய கௌரவத்தை உயர்த்தி பிடிக்கும் சின்னம் கதர் என்று அவர் வாதாடினார். கதர் பொருளாதரத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையை விளக்கமாகவும், விரிவாகவும் எடுத்துச் சொன்னார். இவர் வாதத் திறனைக் கண்டு புகழாதவர்கள் கிடையாது. பெரும்பான்மையான ஆதரவைப் பெறாவிடினும் ஜீவாவின் கருத்தில் ஆழம் இருக்கிறது என்ற அளவுக்கு அங்கீகாரம் பெற்றார். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்” என்று அவரது வாழ்க்கை வரலாற்று நூல் கூறுகிறது. எங்கெங்கு தொடர்ந்து நட்த்தினார் என்ற விவரம் அதில் தரப்படவில்லை. உண்மையில் அம் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்ன என்பதைப் பார்ப்போம்.
“பொருளாதாரத் துறைக்கும் தொழிலில் அபிவிருத்திக்கும் இயந்திர வளர்ச்சிக்கும் சமதர்ம உணர்ச்சிக்கும் தத்துவம் விரோதமாய் இருப்பதால் கதர் தேசிய பொருளாதார தொழில் திட்டம் என்பதை இம்மாநாடு மறுக்கின்றதுடன் தொழில்துறை இயந்திர வளர்ச்சியை இம்மாநாடு ஆதரிக்கின்றது” என்பதுதான் அந்த 7ஆவது தீர்மானம்.
பெரியார் முழக்கம் இதழ்19022026

You may also like...