4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது.

ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர்.

உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு:

டி           பேரணியில் 65 தோழர்கள் முழுமையாகப் பங்கேற்றனர். இதில் பெண்கள் 12 பேர்; குழந்தைகள் 9 பேர்.

டி           பரப்புரைக் குழுவினர் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி படத்துடன் தயாரிக்கப் பட்ட கருப்பு ‘டீ’ சட்டைகளை அணிந்திருந்தனர்.

டி           பேரணியின் நோக்கத்தை விளக்கிடும் 18,000 துண்டறிக்கைகள் இந்த நான்கு நாள் பயணத்தில் பரப்புரை நடக்கும் பகுதிகளிலுள்ள கடைகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.  துண்டறிக்கையில் கூறப்பட்ட செய்திகளை ஆர்வத்துடன் பலரும் படித்தனர்.

டி           உண்டியல் வழியாக நிதி திரட்டிய பெண் தோழர்களின் கொள்கை உணர்வு களைப் பொது மக்கள் வியந்து பாராட்டினர். உண்டியல் மூலம் 10 ரூபாய், 20 ரூபாய் என்று பொது மக்கள் வழங்கிய நிதி ரூ.27,000. பயணத்துக்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கியது. இது தமிழர் உரிமைக்கான பயணம்; உங்களின் பங்களிப்பும் வேண்டும் என்று கேட்டு காவல் துறையினரிடம் தோழர்கள் கேட்டபோது மகிழ்ச்சியோடு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினரும் நிதி வழங்கினர்.

டி           பேரணியில் நான்கு பெரிய வாகனங்கள் வந்தன. வாகனங்களின் முகப்பில் பெரியார்-அம்பேத்கர் படங்களுடன் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. வாகனங்களின் இரு பக்கங்களிலும் கோரிக்கைகள் படங் களுடன் விளக்கப்பட்டிருந்தன. ‘சமூக நீதி ரதம்’ என்று வாகனத்துக்கு பெயர் சூட்டப்பட் டிருந்தது. ஒரு பக்கத்தில் பெரியார்-அம்பேத்கர்-காமராசர் படங்கள் இடம் பெற்றிருந்தன.

டி           கொளுத்தும் வெய்யிலில் காலை 9 மணிக்கு தொடங்கும் பயணம், இரவு கூட்டத்துக்குப் பிறகு 11 மணியளவில் நிறைவடையும். தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் மட்டும் பயணத்தில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.

டி           பரப்புரை – முதலில் பறை இசையுடன் தொடங் கும்; மேட்டூர் தோழர் முத்துக்குமார் பயணத்தின் நோக்கத்தை விளக்கும் பாடல்களைப் பாடுவார்; தொடர்ந்து பரப்புரையின் நோக்கத்தை விளக்கி கழகத் தோழர் ஒருவர் அல்லது இருவர் பேசுவர்; பயணத்தின் பகுதிகளில் துண்டறிக்கை வழங்குதல்; உண்டியல் வசூல் நடக்கும்.

டி           வேலூரில் ஒரு துணிக்கடை வணிகர், உண்டியலில் முதலில் 20 ரூபாய் போட்டார். பிறகு வேறு பக்கம் சென்றுவிட்ட தோழர்களைத் தேடி வந்து 200 ரூபாய் உண்டியலில் போட்டார். அதற்கான காரணத்தை தோழர்கள் கேட்ட போது, துண்டறிக்கையில் இடம் பெற்றிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது என்றார். “காமராசர் தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளிகளை நிறுவினார்; இப்போது ‘நீட்’ தேர்வை நடத்தும் மத்திய ஆட்சி தமிழ் நாட்டிலிருந்து 1500 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் வந்து நீட் தேர்வை எழுதச் சொல்கிறது” என்ற கருத்து தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

டி           ஜோலார்பேட்டைக்கும் வாணியம்பாடிக்கும் இடையே கரியாம்பட்டி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மதிய உணவு இடைவேளையில் மாணவிகள் திரண்டிருந்தனர். அந்த இடத்தில் தோழர்கள் வாகனத்தை நிறுத்தி பரப் புரை செய்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் துண்டறிக்கை களைப் படித் தனர்.

டி           ‘தமிழ்நாடு பெரியார் பூமி யல்ல’ என்று பா.ஜ.க.வினர் கூறுவது குறித்து ஒரு மாணவர் பயணக் குழு வினரிடம் பேசினார். ‘தமிழ் நாட்டுக்கு வந்த இராமன் ரதம், ஆம்புலன்ஸ் வேகத்தில் பறந்தது.  நீங்கள் வரும் சமூக நீதி ரதம் நின்று நிதானமாக பரப்புரை செய்து பயணிக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாடு யாருடைய மண் என்பதை முடிவு செய்ய முடியும்” என்றார், அந்த மாணவர்.

நாம் காலையில் தேநீர், காபி குடிப்பதுதான் வழக்கம். வடநாட்டு பா.ஜ.க.வோ, நம்மை ‘மாட்டு மூத்திரத்தை’க் குடிக்கச் சொல்கிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு’ என்று மற்றொரு மாணவர் கூறினார்.

டி           வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் பெருமளவில் திரண்டு பயணக் குழுவிற்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கும் எழுச்சியான வரவேற்பை வழங்கினர்.

டி           வேலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீல சந்திரகுமார் பயணக் குழுவினருக்கு இரவு உணவை வழங் கினார். தி.மு.க.வைச் சார்ந்த மருத்துவர் முகமது சயி, தனது மருத்துவமனை கட்டிடத் திலேயே தோழர்களை தங்க வைத்து, சிறப்பாக உதவி, கூட்டத்துக்கான சுவரொட்டிகளையும் அவர் செலவிலேயே அச்சடித்து ஒட்டும் பொறுப்பை யும் ஏற்றுக் கொண்டார்.

டி           பரப்புரைப் பயணம் முழுதும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று, பொதுக் கூட்டங் களில் உரையாற்றினர். காவேரிப்பட்டினம் பொதுக் கூட்ட மேடையில் பிரபுதாஸ் காந்தி (கழக ஒன்றிய செயலாளர்), முத்துலட்சுமி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) ஆகியோரின் மகனுக்கு ‘பகுத்தறிவாளன்’ என்று கொளத்தூர் மணி பெயர் சூட்டினார்.

டி           காவேரிப்பட்டிணத்தில் பயணக்குழுவினருக்கு இரவு உணவை தி.மு.க. இலக்கிய அணி செய லாளர் பி.சி.ஆர். மனோகரன் வழங்கியதோடு, காரிமங்கலத்தில் உள்ள தனது மேல்நிலைப் பள்ளியிலேயே பயணக் குழுவினர் இரவு தங்கு வதற்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்தார்.

டி           பயணத்தின் பாதையில் உள்ள பெரியார்-அம்பேத்கர் சிலைகளுக்கு மாலைகள்  அணிவிக்கப்பட்டன.

டி           வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள தென்னாட்டு அம்பேத்கர், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி ஆய்வு மய்யத்தை பயணக் குழுவினர் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

டி           வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் மட்டும் காவல்துறை, பரப்புரைக்கு அனுமதி மறுத்தது. அனுமதி மறுப்புக்கான ‘நோட்டீசை’ நெமிலியில் உள்ள கழக மாவட்ட அமைப்பாளர் திலீபன் இல்லத்தில் முதல் நாள் இரவு ஒட்டினர். உள்ளூரில் இந்து முன்னணி எதிர்ப்பு காரணமாக சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மே 12ஆம் தேதி திட்டமிட்டபடி காவேரிப்பாக்கத்துக்கு பயணக் குழு வந்தபோது காவல்துறை ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தது. அம்பேத்கர் சிலைக்கு உணர்ச்சி முழக்கங்களுக் கிடையே தோழர் கொளத்தூர் மணி மாலை  அணிவித்தார். தோழர்கள் ஒலி பெருக்கி முன் பேசத் தொடங்கியபோது காவல்துறை அனுமதிக்க மறுத்தது.

‘சிலைக்கு மாலைபோட மட்டும் தான் அனுமதி’ என்றார்கள். தோழர்கள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ‘ராமன்’ ரதம் வந்தபோது உடன் வந்தவர்கள் 20 பேர் தான். எதிர்ப்பு தெரிவித்த 3000 பேரைக் கைது செய்து, 20 பேர் கொண்ட ரத ஊர்வலத்தை அனுமதித்தீர்கள். இங்கே நாங்கள் 150 பேர் திரண்டிருக்கிறோம். மிரட்டும் ஒரு சில வன்முறையாளர்களைக் கைது செய்து கருத்துரிமையைக் காப்பாற்றாமல், எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? தமிழக காவல்துறை செயலிழந்து விட்டதா? என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாவட்டக் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டார். தோழர்கள் “காக்கி சட்டைக்குள் காவிகளா?” என்று முழக்கமிடத் தொடங்கினர். பதட்டமான நிலை உருவாகியது. அதே இடத்தில் தொலைக்காட்சி செய்தியாளர் களிடம் தோழர் கொளத்தூர் மணி காவல்துறை யின் போக்கிற்குக் கண்டனம் தெரிவித்து காவல்துறை அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்வியை பதிவு செய்தார்.

தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை இராசேந்திரன், “காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நடுவண் ஆட்சிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு மனுவில் கூறியுள்ள வாதங்களைத் தான் நாங்கள் பயணத்தில் பேசுகிறோம். காவேரிப்பாக்கம் காவல்துறை அதற்கு  அனுமதி மறுக்கிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு தரவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தைத்தான் நாங்கள் ஆதரித்துப் பேசுகிறோம். காவேரிப் பாக்கம் காவல்துறை அதைப் பேசக் கூடாது என்று கூறுகிறது. சட்ட மன்றத்தையும் அனைத்துக் கட்சிகள் பங்கேற்று ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தையும் காவேரிப் பாக்கத்தில்  பேசுவதற்கு தடை போடுகிறது காவல்துறை” என்று கூறினார். மீண்டும் உயர்நீதிமன்றத்தின் வழியாக அனுமதிப் பெற்று இதே பகுதியில் பரப்புரை நடத்துவதற்கு கழகம் முடிவு செய்துள்ளது.

டி           பயணம் தொடங்கும் ஒவ்வொரு நாளிலும் பயணக் குழுவினர் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்று பயணத்தைத் தொடங்கினர். பயணம் முடிந்து ஒவ்வொரு நாள் இரவிலும் பயணத்தின் நிறை குறைகளைக் கலந்து பேசினர்.

டி           காவேரிப்பாக்கத்திலிருந்து காஞ்சிபுரம் வரை மக்கள் மன்றத் தோழர்கள் தனிவாகனத்தில் வந்து பங்கேற்றனர். காஞ்சி சங்கர மடம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தபோது உற்சாகம் கரை புரண்டது.

டி           பயணத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் முழுமையாகப் பங்கேற்றனர்.

டி           கழகத்தின் செயல் வீரர்கள் நான்கு நாட்கள் கொள்கை உணர்வுள்ள குடும்பமாக ஒருங்கிணைந்து ஆர்வத்தோடு பயணத்தில் பங்கேற்றதோடு கழகம் இளைஞர்களின் பாசறையாக செயல்படுவதையும் இந்தப் பயணம் வழியாக உணர்த்திக் காட்டினர்.

அடுத்தப் பயணத்துக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள், கழகத்தின் தோழர்கள்!

தொகுப்பு: ‘இரா’

 

பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி 09052018 படங்கள் தொகுப்பு

பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி 10052018 படங்கள் தொகுப்பு

பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி 11052018 படங்கள் தொகுப்பு 1

பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி 11052018 படங்கள் தொகுப்பு 2

பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி 12052018 படங்கள் தொகுப்பு 1

பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி உரிமை முழக்க ஊர்திப் பேரணி 12052018 படங்கள் தொகுப்பு 2

பெரியார் முழக்கம் 17052018 இதழ்

You may also like...