போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து

06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

விழுப்புரத்தில் அஞ்சலகம் முற்றுகை

உச்சநீதி மன்றம்  தீர்ப்பளித்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அஞ்சல் அலுவலகத்தை  04-04-2018 அன்று நண்பகல் 12 மணியளவில்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட அமைப்பாளர்  சி.சாமிதுரை தலைமையில் முற்றுகை  இடும் போராட்டம் நடத்தப்பட்டது. இராமர், நாகராசன், துளசி, இராசிவ்காந்தி, தமிழரசன், ஆனந்தன், கார்மேகம் மற்றும்  40-க்கும் மேலான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில்  தமிழகம் தொடர்ந்து மத்திய அரசால் பல்வேறு விதமாக வஞ்சிக்கப்படுமாயின்  தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து தமிழகமெங்கும் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று  முழக்கமிட்டனர்.

நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் திவிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,  4.4.2018 அன்று மாலை 5 மணிக்கு பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்தில்  நடைபெற்றது. மு. சரவணன் (மாவட்ட செயலாளர்) தலைமை தாங்கினார். மா.வைரவேல் (மாவட்ட அமைப்பாளர்),  மாரியப்பன் (சி.பி.அய். எம்.எல்.), தண்டபாணி (திவிக ),  சாமிநாதன் (மாவட்ட தலைவர்), ஆதவன் (தமிழ் தேசியக் கட்சி), வஜ்ரவேல் (தமிழ்ப் புலிகள் கட்சி), செல்வராஜ் (சி.பி.அய்.), முத்துப்பாண்டி (திவிக) ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருச் செங்கோடு, குமாரப்பாளையம், பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில்

வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

பவானியில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கழக சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  வலியுறுத்தி பவானியில் 9.4.2018 காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் இரயில் மறியல்

திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து, 2.4.2018 அன்று மதுரையில் இரயில் மறியல் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள்.

பொள்ளாச்சியில் இரயில் மறியல்

05.04.2018 காலை 09.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்பு களின் சார்பில் இரயில் மறியல் போராட்டம் நடை பெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி இரயில் நிலையத்தில் இரயிலை மறித்து போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகம், திமுக, தமிழ்நாடு திராவிடர் கழகம், வெல்ஃபேர் பார்ட்டி, சிஅய்டியு, காங்கிரஸ், தமிழ்ப் புலிகள், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

திருப்பூரில் இரயில் மறியல்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் முகில்ராசு தலைமையில்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்யும் இந்திய நடுவண் பாஜக மோடி ஆட்சியைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டம் 05.04.2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. இரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு கல்லூரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

‘நடுவண் ஆட்சி, தமிழகத்துக்கு துரோகம்’ என்ற தலைப்பில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டில் வந்த கட்டுரையை 600 படிகள் எடுத்து இரு வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சி தோழர்களிடமும் விநியோகிக்கப்பட்டது.

நங்கவள்ளியில் ‘தினமலர்’ நாளேடு எரிப்பு

தமிழை இழிவுபடுத்திச் செய்தி வெளியிட்ட ‘தினமலர்’ நாளேட்டை 05.04.2018 அன்று நங்கவள்ளி கழகத் தோழர்கள் எரித்தனர்.

பெரியார் முழக்கம் 12042018 இதழ்

You may also like...