பள்ளத்தூர், கோட்டையூரில் பிரசங்கம்

தோழர்களே!

நான் இங்கு உங்கள் முன் ஜில்லாபோர்டு தேர்தல் என்பது பற்றி பேசுவேன் என்பதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னுடைய பேச்சு ஜில்லா போர்டு தேர்தலுக்கு பயன்படுமா என்பது எனக்கே சந்தேகம். நான் இங்கு ஜில்லாபோர்டு தேர்தலைப்பற்றி பேசுவதில் அபேக்ஷகர்களைப் பற்றிப் பேசி யாருக்காவது ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லப்போவதில்லை.

ஜில்லா போர்டு பிரஸ்தாப அபேக்ஷகர்களில் ஒருவரைத்தான் எனக்குத் தெரியும். அதாவது தோழர் சி.வி.சி.டி. வெங்கிடாசலம் செட்டியார் அவர்களைத் தெரியும். மற்றொரு அபேக்ஷகரை எனக்குத் தெரியாது. பார்த்ததும் இல்லை. அவரைப்பற்றிய குணங்களும் எனக்குத் தெரியாது. இந்த நிலையில் நான் அபேக்ஷகர்களின் தகுதியைப்பற்றி எப்படிப்பேச முடியும்? மற்றும் இருவரும் கிட்டத்தட்ட சரிசமானமான பணக்காரர்களாம். ஆகையால் பணக்காரர்கள் ஒழிய வேண்டும் என்று பேசுவதற்கும் இதில் இடமில்லை.

அன்றியும் இருவரும் லேவாதேவியில் பணம் சம்பாதிக்கிறவர்கள் தானாம். ஆதலால் லேவாதேவிக்காரர்கள் ஒழியவேண்டுமென்று பேசுவதற்கும் இதில் இடமில்லை. லஞ்சம் ஒழியவும் இதில் இடமில்லை. வெளிப்படையாகவே லஞ்சங்கள் தாண்டவமாடுகின்றன. ஒரு கட்சிப் பணம் சிறிது ஓட்டர்களுக்கு அதிகமாகப் போகலாம். மற்றொரு கட்சிப்பணம் சிறிது காலிகளுக்கும் பிரசார ஜீவனக்காரர்களுக்கும் காலித்தனமாய் பேசுகிறவர்களுக்கும் அதிகமாய்ப் போகலாம். இரண்டில் எது நல்லது என்றால் காலிகளுக்கும் வசவுக்காரர்களுக்கும் பணம் போவதைவிட ஓட்டர்களுக்குப் போவது நல்லது. ஜில்லா போர்டு பணம் ஓட்டர்களுடையது. மெம்பர்களுக்கு நிற்பவர்களுடைய பணமும் பெரிதும் ஏழை ஓட்டர்களது பணம் தான். ஆகவே ஓட்டர்களை மோசம் செய்து காலிகள் அடித்துக்கொண்டு போவதை தடுத்தாக வேண்டும். பணத்துக்காகத் தடுக்காவிட்டாலும் இம்மாதிரி வாழ்வில் காலித்தனம், வசவு, கூலிப் பிரசாரம், பொய், பழி, பித்தலாட்டம், ஏமாற்றம் ஆகிய பிரசாரங்கள் ஒழிக்கப்படவேண்டும். என்னுடைய முக்கிய ஆசை சுயராஜ்யம் சமதர்மம் என்கின்ற பித்தலாட்டங்கள் ஒழிக்கப்படுவதற்கு முன் அவை நிஜமாக இருந்தாலும்கூட அவை ஏற்படுவதற்கு முன் காலித்தனம் ஒழிக்கப்பட வேண்டும். காலித்தனத்துக்கு இடமுள்ள நாட்டில் சுயராஜ்யமும் நடக்காது சமதர்மமும் நடக்காது. சிலர் சமதர்மம் என்றாலே காலித்தனமும் கூலி வசவும் தான் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது நாட்டுக்கு மனித சமூகத்துக்கு பெருங் கெடுதி. இந்த காலித்தனத்தைப் பார்த்தபின் ராணுவச் சட்ட ஆக்ஷி மக்களுக்கு மேல் என்று எனக்குப் படுகிறது.

பொது உடமைத் தேசமாகிய ரஷியாவில் காலித்தனம் தலைகாட்ட முடியாது. பச்சை தேசிய நாடாகிய ஹிட்லர் ஆக்ஷியில் காலித்தனம் கிடையாது. எப்பேர்ப்பட்ட நாடானாலும் கட்டுப்பாடும் அமைதியும் ஒழுங்கும் வேண்டும். அதில்லாத நாட்டை அழித்துவிட வேண்டியதுதான்.

ஜர்மனியில் ஹிட்லரைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னால் உடனே சுட்டுவிடுகிறார்கள். ரஷியாவில் அரசாங்கத்தைப்பற்றி ஒருவார்த்தை சொன்னால் உடனே தண்டனை. அந்த சுதந்திர தேசிய பொதுவுடமை தேசங்களில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் அவ்வளவு தாண்டவமாடும் போது இந்த “அடிமை” நாட்டில் கட்டுப்பாடு வேண்டியதில்லை, காலித்தனத்தில் வாழவேண்டும் என்றால் அரை நிமிஷமும் நான் சம்மதிக்க முடியாது.

சில செட்டிப்பிள்ளைகள் காந்திக் குல்லாய் போட்டுக்கொண்டு பணக்காரன் ஒழிய, ராஜா சர் ஒழிய என்று கூப்பாடு போட்டதைப் பார்த்தேன். கூலிகொடுத்து கூப்பாடு போடச் சொல்லுவதையும் பார்த்தேன். இதனால் பணக்காரர்கள் ஒழிந்து போகமாட்டார்கள். மிகவும் பத்திரமாய் விடுவார்கள். கூப்பாடு போடுகிற செட்டிப்பிள்ளைகள் அன்னக்காவடிகள் அல்ல; இன்சால் வெண்டுகள் அல்ல; மண்வெட்டியாலும் கோடாலியாலும் பிழைக்கிறவர்கள் அல்ல. அவரவர்கள் வீடு வாசல் பெண்டு பிள்ளை நகை, வாழ்க்கைத் திமிர் எல்லாம் எனக்குத் தெரியும். ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கின்ற ஒரு வருணாச்சிரமக்காரர்கள் தான். ராஜா சர்க்கு 50 லக்ஷம் இருந்தால் கூப்பாடு போடுகின்ற பலருக்கு பல லக்ஷம் இருக்கின்றன. இன்று ராஜா சர் செட்டியார் மீது ஏவி விடப்பட்ட ஆட்களே நாளைகூட 2 அணா அதிகமாகக் கொடுத்தால் உங்கள் வீட்டின் முன்புறம் நின்றுகொண்டு உங்களை பெண்டு பிள்ளைகளுடன் ஒழிய என்று கூப்பாடுபோடுவார்கள். நீங்கள் சாணி எடுத்துப்போடச் செய்தால் நாளை உங்கள் மீது மலம் எடுத்துப்போடச் செய்யச்செய்ய முடியும். இனி நான்கு தடவை இப்படி நடந்தால் உங்கள் பெண்டு பிள்ளைகளுக்கு பந்தோபஸ்து கிடைக்கமாட்டாது; ஜாக்கிரதை. உங்களால் நாளை உழைத்து சாப்பிடமுடியாது. வேடிக்கையாய் இந்த காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். வயிற்று வளர்ப்புப் பத்திரிகையை பார்த்து ஏமாந்து போகாதீர்கள், வயிற்றுப்பிழைப்பு கூலிகளின் பிரசங்கத்தில் மயங்கி விடாதீர்கள். நான் சொல்வதெல்லாம் நடந்து கொண்டே வந்திருக்கின்றன.

ராஜா சர் இல்லாதிருந்தால் உங்கள் சமூகம் என்ன கதி அடைந்திருக்கும்? உங்களுக்கு உள்ள பெருமை யாரால்? நீங்கள் என்போல் வெறும் ஆளாய் திரிய தைரியங்கொண்டால் ராஜா சர் ஒழிக என்று கூவுங்கள். ராஜா சர்கள் ஒழிந்தால் உண்மையில் நான் அதிக சந்தோஷப்படுவேன். அவர்களை எப்படி ஒழிப்பது என்பதில் என் கவலையும் முயற்சியும் யோசனையும் இன்னமும் நீங்கவில்லை. ஆனால் நாகப்பசெட்டியார் உயருவதற்கு ராஜா சர் ஒழிக என்றால் இது கூலிக்கூப்பாடு என்பது விளங்கவில்லையா? ராஜா சர்களும், நாகப்பர்களும், குட்டி ராஜா சர்களும், குட்டி நாகப்பர்களும் எல்லாம் ஒழிந்தால்தானே பணக்காரர்கள் ஒழிய முடியும்? இந்த ஒரு பணக்காரர் ஒழிந்தால் மற்றொரு உஞ்சவிர்த்திகாரர் பணக்காரர் ஆகிவருகிறாரே அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? தோழர் சத்தியமூர்த்தியாருக்கு ஏது இவ்வளவு பணம்? தோழர் குப்புசாமிக்கு ஏது இவ்வளவு பணம்? மற்றும் சில “பணக்காரர் ஒழிப்புக்காரர்”களுக்கு ஏது நெய்யும் பிரியாணியும் சாப்பாடும் என்பவைகளை யோசியுங்கள்.

பணக்காரர் ஒழிக, ராஜா சர்கள் ஒழிய என்கின்ற கொள்கை ஒருவேளை சோத்துக்கும் 4 ரூ. கூலிக்கும் விற்கப்பட்டு மற்றொரு பணக்காரன் ஜெயிக்க வேண்டுமென்று கூப்பாடு போடுவதானால் அந்தக் கூப்பாட்டுக்கு இடம் கொடுக்கலாமா என்று யோசித்துப்பாருங்கள். இரண்டு பணக்காரர் பணத்திமிரினாலோ அல்லது பணம் சம்பாதித்து பெருமை அடையவோ சண்டை போட்டுக்கொண்டால் இங்கு காந்திக்கும் கதருக்கும் காங்கிரசுக்கும் சமதர்மத்துக்கும் காலிகளுக்கும் கூலிகளுக்கும் என்ன வேலை என்று கேட்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சி ஒழிய வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றேன்.

காங்கிரசின் பேரால் பணக்காரரை ஏன் நிறுத்த வேண்டும்? அது தெரிந்தும் பணக்காரன் ஒழிய என்று ஏன் கூப்பாடு போடவேண்டும்?

ஜில்லா போர்டு வேலைக்கு யாரும் ஆசைப்படலாம். யாருக்கும் பாத்தியமுண்டு. யாருடைய எந்த கட்சியாருடைய தாய் தகப்பனாரோ, பெண்டு பிள்ளையோ பாடுபட்டுச் சம்பாதித்த பொருள் அல்ல. ஆற்றிலே ஜலம் போகிற மாதிரி எல்லோருக்கும் பங்கு உண்டு. இதில் காங்கிரசுக் காரனுக்கு மாத்திரம் என்ன சொந்தம்? காந்திக்கு மாத்திரம் என்ன சொந்தம்? ஜஸ்டிஸ்காரனுக்கு ஏன் பாத்தியமில்லை? ஜஸ்டிஸ் கட்சிக்காரன் வரிப்பணம் ஜில்லாபோர்டு பண்டில் இல்லையா? ஜஸ்டிஸ் கட்சிக்காரன் சட்டமும் உழைப்பும் ஜில்லாபோர்டு ஸ்தாபன உற்பத்தியில் இல்லையா? ஜில்லா போர்டு சட்டத்தில் காங்கிரஸ்காரன் மாத்திரம் செய்யக்கூடியதாகவோ நாகப்ப செட்டியார் மாத்திரம் செய்யக்கூடியதாகவோ என்ன காரியம் இருக்கிறது?

குறிப்பு: 12.12.1936 இல் பள்ளத்தூரிலும் கோட்டையூரிலும் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.

குடி அரசு சொற்பொழிவு 20.12.1936

You may also like...