பட்டேல் வருகிறாராம்!

பத்து லக்ஷம் வேண்டுமாம்!!

யார் வீட்டு சொத்து!!! எதற்காக!!!!

தோழர் பட்டேல் தமிழ் நாட்டுக்கு வருவதாகவும் அவருக்கு 10 லட்சம் ரூபாயாவது வசூலித்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதை அவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்கே கொடுத்து விட்டுப் போவார் என்றும் அந்தப் பணங்கள் சட்டசபை தேர்தலுக்கு செலவிடப்படுமென்றும் காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு 10 லட்சமோ அல்லது 5 லட்சம் தானாகட்டும் எதற்கு ஆகவேண்டும்? பணக்காரர்கள் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் கூப்பாடு போடுவது எதற்கு? குமாரராஜா பணக்காரர் என்றும் பொப்பிலி ராஜா ஜமீன்தார் என்றும் ஆத்திரப்படுவது எதற்கு? பணத்தால் காரியம் சாதித்துக் கொள்ளுகிறார்கள் என்றும் ஒழுக்கத்தால் கொள்கையால் ஜெயிப்பதில்லை என்றும் சொல்லுவதால்தானே அப்படிச் சொல்லப்படுகிறது.

அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் 10 லக்ஷ ரூபாய் வாங்கினால் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு லக்ஷத்துக்கு 100 ஆயிரம் ரூபாய். 10 லக்ஷத்துக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் ஆகிறது. சென்னை மாகாண சட்டசபைக்கு 250 மெம்பர்கள் இருப்பார்கள். இவர்களில் 126 மெம்பர்கள் ஜெயித்தால் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கருதப்படும். ஆகவே இந்த 126 பேர்களின் தேர்தலுக்கு பத்து லக்ஷ ரூபாய் பங்கிட்டால் தேர்தல் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் செலவாகும். இவற்றுள் சிலர் போட்டி இல்லாமல் வரலாம். சிலர் தங்கள் சொந்த பணச் செலவில் வரலாம். பாக்கி சுமார் 70 பேர்களுக்காவது பணம் செலவிட வேண்டி வந்தால் ஆள் ஒன்றுக்கு 10000, 20000 செலவழிக்க வேண்டும் என்பதும் இந்த பணத்தைக் கொண்டு பார்ப்பனர்களை கொண்டு வந்து நிரப்பிக்கொள்ளலாம் என்பதும் அல்லாமல் பணம் கேட்பதின் அருத்தம் என்ன? மற்றொருபுறம் ஜஸ்டிஸ் பணக்காரனைப்பற்றி ஆத்திரப்படுவதின் கருத்து என்ன என்று கேட்கிறோம். தேர்தலில் தேர்தல் ஒன்றுக்கு 10, 20 ஆயிரம் ரூபாய் செலவழித்து வெற்றிபெற நினைத்தால் அவ்வெற்றி பணத்துக்கு சொந்தமானதா காங்கிரசுக்கும் கொள்கைக்கும் சொந்தமானதா? என்று கேட்கின்றோம்.

தோழர் ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் பட்டம் விட்டு காங்கிரஸ் பேரால் நிற்பதற்கு பயப்பட்டதற்கு காரணமே பட்டம் விட்டு விட்டு தன் செலவை தானே போட்டுக்கொண்டு மற்றொரு பார்ப்பனர் தேர்தலுக்கு 2500 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள் கேட்டதேயாகும். தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு சொந்தத்தில் நல்ல பெயர் இல்லாததினாலும் நண்பர்கள் இல்லாததாலும் தனக்கே நம்பிக்கை இல்லாததாலும் பட்டம் விட்டு 10000 ரூ. வேண்டுமானாலும் கொடுத்து தன் செலவையும் போட்டுக் கொள்ள துணிந்தார்.

இந்நிலையில் காங்கிரசுக்காரர் லஞ்சம் ஒழிக, பணத் திமிர் ஒழிக, பணத்தினால் காரியம் சாதிக்கலாம் என்கின்ற ஆணவம் ஒழிக என்று கூவுவதில் நாணயமோ ஒழுக்கமோ இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

நம்மக்கள் பார்ப்பனரல்லாத மக்கள் எலக்ஷன் செலவுக்கென்று எதற்காக பட்டேல் பைக்கு பணம்கொடுப்பது என்பது விளங்கவில்லை. பார்ப்பனரல்லாதார்களில் பணக்காரர்கள் தான் நிற்கக்கூடும். நின்றால் அவர்கள் எக்கட்சியானாலும் தங்கள் சொந்த பணம்தான் செலவு செய்து தீர்வார்கள். அவர்களுக்கு பொதுப் பணம் பயன்படப் போவதில்லை. வசூலுக்கோ பார்ப்பனர் பணம் கொடுக்கப்போவதும் இல்லை. ஆகையால் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரிடம் பட்டேலைக் காட்டி பணம் வசூலித்து நிறைய பார்ப்பனர்களை அதுவும் உண்மையாகவே உபாதானப் பார்ப்பனர்களை சட்டசபைக்கு நிறுத்தி இந்தப் பணத்தை செலவுசெய்து வெற்றிபெற்று 30, 40 (பேர்களையாவது) ஸ்தானங்களாவது பார்ப்பனர்களாக வருவதற்கே இந்த பட்டேல் பண வசூல் சூழ்ச்சியாகும். அதையும் தோழர் சத்தியமூர்த்தியார் பச்சையாய் சொல்லிவிட்டார்.

“தேர்தலில் தேசபக்தர்களை நிறுத்தி ஜஸ்டிஸ்காரரோடு போட்டி போட தேர்தல் செலவுக்கு 10 லக்ஷ ரூ. வேண்டும்” என்று சொல்லி விட்டார். பார்ப்பனரல்லாதார் எந்தக் கட்சியாய் இருந்தாலும் சரி. இந்த அறிக்கைக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? மூட்டைக் கட்டிக் கொடுத்து பார்ப்பனர் பின் வாலைப் பிடித்து அன்னக்காவடிகளுக்கும், உஞ்சவிருத்தி உபாதானத்துக்கும் ஜே போடப் போகிறீர்களா? அல்லது உங்கள் மானத்தை காப்பாற்றப் போகிறீர்களா? தோழர்கள் சுப்பராயனையும், ராமலிங்கம் செட்டியாரையும் பின்பற்றாதீர்கள். அவர்களுக்கு சட்டசபையும் மந்திரி பதவியும்தான் தெய்வமும், மதமும், மோட்சமும் ஆகும். அவர்கள் எதையும் செய்வார்கள். சத்தியமூர்த்திக்கு பாத பூஜை செய்து தீர்த்தப் பிரசாதம் பெறுவார்கள். மற்றவர்களுக்கு என்ன முட்டு என்று கேட்கிறோம்.

பணம் கேட்டால் யார் தேடிக்கொடுத்தது? யார் அப்பன் வீட்டு சொத்து? எனத்துக்கு கேட்கிறாய் என்று கேளுங்கள்.

குடி அரசு கட்டுரை 22.11.1936

You may also like...