தியாகராய நகரில் சு.ம. பொதுக் கூட்டம்
ஜஸ்டிஸ் கட்சியும் சு.ம. இயக்கமும்
அடிப்படையான கொள்கையில் இரண்டும் ஒன்று
எனவே சுயமரியாதைக்காரர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவேண்டும்
சுயநலக்காரர்களுக்கு இனி ஜஸ்டிஸ் கட்சியில் இடமில்லை
தலைவரவர்களே! தோழர்களே!!
எங்கள் அறிக்கையைப்பற்றிப் பார்ப்பனப் பத்திரிகைகள் தங்களுக்கு அனுகூலமாக விஷமப் பிரசாரம் செய்து வருகிறபடியால் அதைப்பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று தலைவர் கட்டளையிட்டதால் எனது காயலாவையும் கவனிக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து அனுமதி பெற்று வந்து நான் பேசவேண்டியதாயிற்று.
எங்கள் அறிக்கையில் ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறியோ அல்லது வேறு கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றோ ஒரு வார்த்தையாவது இருக்கிறதா?
~subhead
அறிக்கையின் கருத்து
~shend
அவ்வறிக்கையின் உத்தேசமெல்லாம் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு முன்னுக்கு வந்தவர்களும், கட்சியின் பிரதான புருஷர்களாய் இருக்கின்றவர்களும் கட்சியினால் 1000, 10000 வீதம் சம்பளமுள்ள பதவி பெற்றவர்களும், பெற்றுக் கொண்டிருக்கிறவர்களும் தங்கள் சுயநலத்தையே பிரதானமாகக் கருதிக்கொண்டு கட்சியை மோசம் செய்துவிட்டார்கள் என்றும், சிலர் கவலையில்லாமல் இருந்து வருகிறார்கள் என்றும் நாங்கள் கருதி அக்கட்சியை மெத்த செல்வாக்கும், மேன்மையும் உள்ளதாக ஆக்கி, அதனால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும்படி செய்யவேண்டும் என்பதேயாகும்.
~subhead
சுயமரியாதையும் ஜஸ்டிஸும்
~shend
சுயமரியாதைக்காரர்கள் என்கின்ற முறையில் எங்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியினிடம் இருக்கும் கவலையும், பற்றுதலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பவர்கள் விஷயத்தில் கவலையுள்ளதும் முற்போக்கேற்படுத்தக்கூடியதுமான கொள்கைகளைக் கொண்டு இருப்பதி னாலும் அதற்கு ஆக அக்கட்சி வேலை செய்து இருப்பதும் செய்து வருவதுமாய் இருப்பதால் தானே ஒழிய மற்றபடி எங்கள் சுயநலத்தை உத்தேசித்தல்ல.
ஜஸ்டிஸ் கட்சியில் எங்களுக்கு (சுயமரியாதைக்காரருக்கு) ஏற்ற கொள்கை இல்லை என்று இருந்தால் நாங்கள் அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியமில்லை. அக்கட்சியால் நாங்கள் சொந்தத்திலோ சுயமரியாதைக்கட்சி மொத்தத்திலோ ஒன்றும் வழித்துக் கொட்டிக்கொள்ளவில்லை.
~subhead
ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம்
~shend
ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம் கொஞ்சமல்ல; இந்த மாகாணத்திலேயே எனக்கு மாத்திரம் தான் சி.ஐ.டி. தொல்லை, கடிதங்கள் உடைத்துப் பார்ப்பது, பத்திரிகையை ஒழிக்க நினைத்து அடிக்கடி ஜாமீன் கேட்பது முதலிய காரியங்கள் நடக்கின்றன. ஆனால் இவைகள் அக்கட்சியைக் குறை கூறக் கூடிய காரணங்களாகாது. அக்கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியவர் களின் கையாலாகாததனமாகும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை.
~subhead
ஜஸ்டிஸ் கொள்கை
~shend
எதுவரையில் அக்கட்சி ஜாதிபேதங்களை ஒழிப்பதும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்குவதும் ஆகிய இரண்டு கொள்கையையும் முக்கியமாய்க் கொண்டிருக்கிறதோ அதுவரை அக்கட்சியை நாம் ஆதரித்துத்தான் தீர வேண்டும். அவர்கள் நம்மை எவ்வளவு கேவலமாகவோ அலட்சியமாகவோ கருதினாலும் நமக்கு கவலை இல்லை.
~subhead
நாஸ்திகம் பொது உடமை
~shend
அக்கட்சியில் சிலர், ஏன்? சில முக்கியஸ்தர்களே, சுயமரியாதைக் கட்சி நாஸ்திகக் கட்சி என்றும், பொது உடமைக் கட்சி என்றும் சொல்லு கிறார்களாம். அதனாலேயே நம்முடன்கூட சாவகாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்களாம். அதைப்பற்றியும் நமக்கு கவலை இல்லை. அப்படிப்பட்டவர்கள் வீட்டில் நாங்களும் பெண் கட்டவோ கொடுக்கவோ செய்து சம்மந்தம் வைத்துக்கொள்ள ஆசைப்படவில்லை.
அன்றியும் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கமா பொது உடமை இயக்கமா என்பதுபற்றியும் விவகாரம் செய்ய முன்வரவில்லை. அது எப்படியோ போகட்டும் அதன் பலாபலனை நாங்கள் அடைந்து கொள்ளு கிறோம். அதற்கு ஆக ஜஸ்டிஸ் தலைவர்களின் சிபார்சு கோரவில்லை.
~subhead
ஆனால்
~shend
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். அதாவது ஜஸ்டிஸ் கட்சி நாஸ்திகமும், பொதுஉடமையும் கொண்ட கொள்கை உடையது தானா அல்லவா என்பதேயாகும். எப்படி எனில் ஜாதிகளை ஒழிப்பது நாஸ்திகமா அல்லவா?
ஜாதிகள் “கடவுளா”ல் உண்டாக்கப்படாமல் எப்படி உண்டாயிற்று என்று எந்த ஆஸ்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்லட்டும். கீதை, ராமாயணம், மனுதர்ம சாஸ்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவது தான் ஜாதியை ஒழிப்புநெருப்பில் பொசுக்கா விட்டாலும் குப்பைத்தொட்டியிலாவது போடத் துணிந்தவன் தான் ஜாதியை ஒழிக்க முன் வர முடியும். ஆகவே ஜாதியை ஒழிப்பவர்கள் தங்களை அறியாமலே நாஸ்திகர்களாக இருக்கிறார்கள். கடவுள் பக்தி விஷயத்திலும் ஜஸ்டிஸ் தலைவர்கள் யோக்கியதை எனக்கு நன்றாய் தெரியும். ஆதலால் அவர்களை இல்லாவிட்டாலும் அவர்களது கொள்கைகளை நாஸ்திகக் கொள்கை என்று தான் கருதி இருக்கிறேன்.
பொதுஉடமை விஷயத்திலும் ஜஸ்டிஸ்காரர்கள் பொதுஉடமைக் கொள்கைக்காரர்களே. எப்படி எனில் அரசியல் விஷயமான சகல பிரதிநிதித் துவமும் பணம் வரும்படியுள்ள சகல உத்தியோகமும் சகல வகுப்புக்கும் சரிசமமாகப் பங்கிட்டுக்கொடுக்க வேண்டுமென்கிறார்கள்.
பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தால் என்ன? பண வரும்படியுள்ள உத்தியோகங்களை பங்கிட்டுக் கொடுத்தால் என்ன? தனித் தனி மனிதனுக்குக் கொடுக்கும் பிரிவினையின் தன்மையும், தனித் தனி வகுப்புக்கு கொடுக்கும் பிரிவினையின் தன்மையும் கொள்கையில் ஒன்றுதான்.
ஆதலால் சுயமரியாதைக்காரர்களிடம் இருப்பதாய்ச் சொல்லும் குணங்கள் ஜஸ்டிஸ்காரரிடமும் இருந்து வருகிறது என்றுதான் கருதுகிறேன்.
சுயமரியாதைக்காரர்களும் சர்க்காரை எதிர்க்கவோ, சட்டம் மீறவோ, பலாத்காரம் செய்யவோ இன்றுவரை அவர்கள் தீர்மானித்திருக்கவில்லை. அதுபோல் தான் ஜஸ்டிஸ்காரர்களும்.
ஆதலால் சு.ம. காரர்கள் ஜஸ்டிஸ்காரருடன் அனுதாபம் காட்டுவதோ ஜஸ்டிஸ்காரர் சு.ம. காரரின் ஒத்துழைப்பைப் பெறுவதோ எவ்விதத்திலும் தப்பில்லை.
~subhead
சு.ம. கொள்கை
~shend
ஆதலால் சு.ம. காரர்களுடைய லட்சியமும் கொள்கையும் எவ்வளவு உன்னதமாய் இருந்தாலும் சரி, இந்தியாவைப் பொறுத்தவரை சிறப்பாகத் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஜாதி பேதத்தை ஒழித்து பார்ப்பனீயத்தை அடியோடு அழிக்காவிடில் உண்மையான சுயமரியாதைக்கு சிறிதுகூட இடமில்லை.
இந்தியாவில் அனேக சீர்திருத்தங்கள் செய்தாய்விட்டது. அநேக தீவிரவாதிகள் பிறந்து பிறந்து இறந்தாய் விட்டது. ஒன்றும் ஏற்படவில்லை.
உலகமெல்லாம் எவ்வளவோ மாறுபாடடைந்து விட்டது. இந்தியா மாத்திரம் இன்னமும் காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறது. இதற்கு ஜாதி தான் காரணம்.
~subhead
ஜாதியும் பொது உடமையும்
~shend
ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும் பொருளியலும் எப்படி பங்கிட்டுக்கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியை கவனிக்காமல் ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடமை பேசுவது அரிவரி படிக்காமல் ஆ.அ. வகுப்பைப்பற்றி பேசுவதாகும். ஆதலால் இன்று முதல் வேலை ஜாதி ஒழிபட வேண்டும்.
~subhead
ஜஸ்டிஸ் பார்ட்டியும் ஜாதியும்
~shend
ஆகவே ஜஸ்டிஸ் பார்ட்டியானது ஜாதி ஒழிப்புக்காக இன்டியன் பின்னல் கோட்டில் செக்ஷன் போட்டிருக்கிறது.
~subhead
ஜஸ்டிஸ் பார்ட்டி
~shend
மற்றும் ஜஸ்டிஸ் பார்ட்டி ஆட்களைப் பொறுத்தவரை எவ்வளவோ பல்டி அடித்தார்கள் என்றாலும் கொள்கையைப் பொறுத்தவரை எவ்வித பல்டியும் அடிக்கவில்லை என்பதைப் பொதுஜனங்கள் மனதில் வைக்க வேண்டும்.
ஆகையால் அது தோற்றுப்போனாலும் கூட நாம் பயப்பட வேண்டிய தில்லை. அப்படித் தோற்றுப்போவதானது அக்கட்சியில் உள்ள அழுக்கு மூட்டைகளையும், சுயநலப் பிண்டங்களையும், நன்றி கெட்ட மக்களையும் ஒழித்து அக்கட்சியைப் பரிசுத்தமாக்க அத்தோல்வி பயன்படும். பொப்பிலி ராஜாவுக்கு மந்திரி பதவி போய்விட்டதாகவே வைத்துக்கொண்டாலும் உடனே ராஜா வேலை வந்து விடும். அதுபோலவே மற்றவர்களும் மந்திரி இல்லாததால் வாழ முடியாதவர்களாகிவிட மாட்டார்கள்.
ஆனால் காங்கிரஸ் மந்திரிசபை மாத்திரம் வாழ்ந்து விடும் என்று கருதாதீர்கள். அதை வாழவும் விடாமல் செய்ய நமக்குத் தெரியும்.
~subhead
சி.ரா. பிரகாசம்
~shend
ஒரு காலத்தில் தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியாரும், பிரகாசமும் சொன்னதுபோல் அதாவது “ஜஸ்டிஸ் கட்சி அரசாளுவதைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்” என்று சொன்னது போல் நாமும் பார்ப்பனர் கட்சி அரசாளுவதை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்கின்ற தத்துவத்தில் முனைந்து பார்ப்பனக்கட்சி ஆட்சியை அரைநொடியில் அழித்துவிட முடியும். அதற்காகவேதான் பார்ப்பனரல்லாதார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிறோம்.
~subhead
நான் மந்திரியா?
~shend
இல்லாவிட்டால் நான் மந்திரியாக ஆசைப்படுகிறேனா? எனக்கு யோக்கியதை உண்டா? அல்லது மந்திரிகள் தயவு ஏதாவது எனக்குத் தேவையா? எனக்கு ஏதாவது பிள்ளைகுட்டி சுற்றத்தார் என்கின்ற தொல்லை யாவது இருக்கிறதா? அல்லது மந்திரிகள் தயவால் வாழவேண்டிய அவசியமாவது உண்டா? தலைவர் பாண்டியன் அவர்களுக்காவது மந்திரிகள் தயவோ மந்திரிகளை லட்சியம் செய்ய வேண்டிய அவசியமோ ஏதாவது இருக்கிறதா? பாருங்கள்.
~subhead
மற்றும்
~shend
எனக்கு ஏதாவது சொந்தத்தில் பெருமை வேண்டுமென்றால் நான் காங்கிரசில் இருந்தால் எனக்குக் கிடைக்காதா?
இன்று கூட 4 அணா கொடுத்து காங்கிரசில் நான் சேர்ந்துவிட்டால் தோழர் ராஜாஜீ என் குற்றங்களை எல்லாம் மன்னித்து சத்தியமூர்த்திக்குச் சூட்டிய முடியை எடுத்து எனக்குச் சூட்டி விடுவார்.
அப்படியிருக்க நான் ஏன் இந்தப்படி அவஸ்தைப்படுகிறேன். கெட்டபேர் அடைகிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி சாய்ந்தால் பார்ப்பனரல்லாதார் நிலை மோசமாகிவிடும். பார்ப்பனரல்லாதார் மாத்திரம் தங்கள் சுயமரியாதையை யுணர்ந்து நடந்து கொண்டார்களானால் தேர்தலில் யார் ஜெயித்தாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
~subhead
1926 தேர்தல்
~shend
1926ல் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியுற்றது. என்ன முழுகிப் போய்விட்டது? தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொண்டதால் மற்றும் பலமடைந்தார்கள்.
~subhead
காங்கிரஸ் மந்திரி
~shend
காங்கிரஸ் பிடித்து வைத்த மந்திரிகள் ஒரு வருஷத்தில் ஜஸ்டிஸ் மந்திரிகள் மாத்திரமல்ல சுயமரியாதை மந்திரிகளானார்கள். முதல் மந்திரியாய் இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் “நான் சுயமரியாதைக்காரன் தான்” என்று சொல்லவில்லையா?
காங்கிரஸ் மந்திரிகள் யாராயிருந்தாலும் தமிழ் நாட்டிற்குள் தலையை நீட்டிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
~subhead
ஒரு கேள்வி
~shend
இச்சமயத்தில் ஒரு பார்ப்பன வாலிபர் ஒரு கேள்வி கேட்டார். அதாவது காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரபிரசாத் அவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷனில் 15 மெம்பர்கள் வரவேற்பளிக்கவில்லை என்று சொல்லி தடுத்து விட்டார்கள். ஆனால் ரயிலில் லட்சம் பேர்கள் வந்து வரவேற்றார்கள். டிராம், பஸ் எல்லாம் 2 நிமிஷம் நின்றுவிட்டன. ஆதலால் நீங்கள் வரவேற்காவிட்டால் கூட்டம் வராதா? என்று கேட்டார்.
~subhead
இதற்கு ஈ.வெ.ரா. பதில்
~shend
ரயிலுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து மதிப்பதாய் இருந்தால் வருஷா வருஷம் பெரியபாளையத்து மாரியம்மன் திருவிழாவுக்கு பத்து லட்சக் கணக்கான ஜனங்கள் போகிறார்கள், மிதிபட்டுச் சாகிறார்கள். எதற்காக? அங்கு ஆணும் பெண்ணும் அரை நிர்வாணமாய் ஆடும் காட்சியைப் பார்க்கத்தானே? இதனால் அக்கூட்டம் அந்நிர்வாணக் காட்சிக்கு வரவேற்பாக கூடியது என்று பொருளா?
ஒரு டொம்பன் வீதியில் டமாரமடித்தால் உடனே போக்குவரத்து தடைபடும்படி கூட்டம் கூடிவிடுகிறது. நாடகக்காரர்கள் போல் ஒரு மாதமாய் விளம்பரம் செய்து தெருவெல்லாம் நோட்டீஸ் ஒட்டி டாம் டாம் போட்டு யாரைக்கூட்டிவந்தாலும் கூட்டம் கூடித்தான் தீரும். இதனால் யோக்கியதை அதிகம் என்று அறிவாளிகள் கருதிவிட மாட்டார்கள் என்று சொன்னார்.
பிறகு தொடர்ந்து பேசியதாவது: ஜஸ்டிஸ் கட்சி கொள்கை ஒரு நாளும் தோற்றுவிடாது. தோற்கவும் விடமாட்டோம். ஆனால் இனி ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் சில சோணகிரிகளும் ஏமாற்றுகாரர்களும் 5000, 10000 வாங்கிக்கொண்டு குஷாலாக குலாவவும், கூத்தாடவும் இவர்களைக் காப்பாற்ற சில சுயநலக்காரர்களும், போக்கிரிகளும் கைதூக்கிக் கொண்டு கொள்ளை அடிக்கும் படியும் இருக்கும்படியான நிலைமையை இனி வளர விடமாட்டோம். அப்படிப்பட்டவர்களாலேயே இயக்கம் பாழாயிற்று. யோக்கியர்கள் எல்லாம் கட்சியை விட்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் உண்மையும் தியாக புத்தி கொண்டவர்களுமே அக்கட்சியை இனிமேல் நடத்த வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காகத்தான் நாங்கள் அறிக்கை விட்டோமே ஒழிய அக்கட்சியை ஒழிக்கவல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு என்வார்த்தையை முடித்துக் கொள்ளுகிறேன். நான் ஆஸ்பத்திரியில் இருந்து வரும்போது பொதுக் கூட்டத்தில் பேசுவது இல்லை என்று டாக்டர் குருசாமி முதலியாரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு வந்தேன். ஆனால் வந்த பிறகு பேசும்படி ஆகிவிட்டது என்றாலும் அதனாலேயே கடைசிவரை பேச முடியாமல் சுருக்கமாகப் பேச வேண்டியதாயிற்று.
குறிப்பு: சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் 09.02.1936 இல் தியாகராய நகர் பனகல் பார்க் முன்பாக உள்ள திடலில் தோழர் ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன், எம்.எல்.சி. தலைமையில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
– குடி அரசு சொற்ம�ொழிவு 16.02.1936