பொப்பிலியில் என்ன நடந்தது?

பொப்பிலியில் தோழர் ஜவஹர்லால் வந்தபோது அங்கு பொப்பிலி அரசரின் ஆட்களால் கலவரம் நடந்ததாக பார்ப்பனப் பதர்கள் கட்டுக் கட்டிவிட்டு நாடு எங்கும் பரப்பி விட்டார்கள். அதை மறுத்து வந்த செய்திகளுக்கு சரியான இடம் கொடுக்காமல் அற்பத்தனமாயும் அயோக்கியத்தனமாயும் சில பத்திரிக்கைகாரர்கள் நடந்து கொண்டார்கள் என்றாலும் நாம் சென்ற வாரம் கூறியது போல் அங்கு காங்கிரஸ்காரர்தான் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பின்வந்த சேதியால் விளங்கி விட்டது.

அதாவது பொப்பிலியில் அன்று ஏதோ ஒரு விசேஷநாள் ஆனதால் வழக்கம்போல் உற்சவம் நடைபெற்று விக்கிரக ஊர்வலம் நடந்திருக்கிறது. அதற்கு ஆகவே யானை, கொடி, தப்பட்டை முதலிய ஊர்வலச் சின்னங்கள் விக்கிரகத்துடன் ஊர்வலம் வந்திருக்கின்றன.

அது சமயத்தில் பண்டிதர் கூட்டமும் இருந்ததால் அதுவும் ஊர்வலம் வரும் வழியில் இருந்ததால் பண்டிதரின் பிரசங்கத்துக்காக எவ்வளவோ நேரம் ஊர்வலம் காத்திருந்தும் அதை காங்கிரஸ்காரர்கள் கண்ணியம் செய்யாமல் போக்கிரித்தனமாக நடந்து கொண்டதோடு பத்திரிக்கைகளும் கூலிகளும் தங்களுக்கு அனுகூலமாய் இருக்கிறார்கள் என்கின்ற மமதையால் கண்டபடி பொய்யாகவும் அயோக்கியத்தனமாகவும் கதை கட்டி விட்டார்கள்.

இதிலிருந்தாவது காங்கிரசின் யோக்கியதையையும் அவர்கள் பத்திரிக்கைகளின் யோக்கியதைகளையும் பொது மக்கள் உணர்ந்து கொள்வார்களாக.

குடி அரசு துணைத் தலையங்கம் 29.11.1936

 

You may also like...