ஐவர் அறிக்கை வெறும் புரட்டு
தோழர்கள் ஜவஹர்லால், பட்டேல், ராஜேந்திர பிரசாத், அப்துல் கபூர்கான், ஜம்நாலால் பஜாஜ் ஆகிய ஐவர்கள் காங்கிரசுக்கு அபேட்சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் யோசனை கூறுகிறார்கள். அதாவது
“இதற்கு முன் காங்கிரசுக்கு விரோதமாயிருந்தவர்கள் வரப்போகும் மாகாண அசெம்பளிக்கு அபேட்சகர்களாக சில காங்கிரஸ் கமிட்டி தெரிந் தெடுத்திருக்கிறது”
என்று குறிப்பிட்டு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு இனி அப்படிப்பட்டவர்களை தெரிந்தெடுக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இந்த எச்சரிக்கை மாகாண அசெம்பளிக்கு மாத்திரமாய் இருக்கும் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. ஏனெனில் அந்தப்படி குறிப்பிட்டிருக் கிறார்கள். அப்படியே வைத்துக்கொண்ட போதிலும் டாக்டர் சுப்பராயன் போன்றவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் அசெம்பளிக்கு நிறுத்துவது இந்த அறிக்கைப்படி யோக்கியமாகுமா என்று கேட்க ஆசைப்படுகிறோம்.
ஏனெனில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் காங்கிரசுக்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர் என்பது மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் என்று காங்கிரஸ்காரர்கள் சமீப காலம் வரை கூப்பாடு போட்டு வைது கொண்டிருந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது அவரை காங்கிரசு சார்பாக நிறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்திருந்தால் அதை இந்த தலைவர்களும் ஒப்புக் கொள்வதானால் இந்த அறிக்கை யோக்கியமான அறிக்கை என்று சொல்லுவதா அல்லது பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காக அதாவது பொதுஜனங்கள் முன்னிலையில் தாங்கள் யோக்கியர்கள் என்று காட்டிக் கொள்ளுவதற்கு ஆக செய்யப்பட்ட பித்தலாட்ட அறிக்கை என்று சொல்லுவதா என்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் இதுவரை ஸ்தல ஸ்தாபனங்களுக்கு காங்கிரஸ் சார்பாய் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களில் 100க்கு 90 பேர்கள் இந்த மாதிரி அதாவது காங்கிரசை வைதுகொண்டும் அதற்கு நேர் விரோதமாய் வேலை செய்து கொண்டும் இருந்தவர்களே ஒழிய மற்றபடி காங்கிரசுக்கு உழைத்தவர்களோ காங்கிரஸ் கொள்கையில் இருந்தவர்களோ என்று யாரும் சொல்ல முடியாது.
ஆகவே இதுவரை காங்கிரஸ் ஜெயித்தது என்று சொல்லப்பட்டு வந்த தெல்லாம் பொது ஜனங்களுக்கு கணக்கு காட்டவே ஒழிய மற்றபடி காங்கிரசின் உண்மையான பலத்தை காட்டுவதற்கு அல்ல என்பதே நமது அபிப்பிராயம். இனியும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டுமானால் இந்த மாதிரி காரியத்தால் தான் காட்ட முடியுமே ஒழிய மற்றபடி உண்மையான காங்கிரஸ் கொள்கைக்காரர்கள் என்பவர்களோ, காங்கிரஸ்காரர்கள் என்பவர்களோ 100க்கு 10 வீதம் கூட வெற்றிபெற முடியாது என்று சபதம் கூறுவோம்.
குடி அரசு கட்டுரை 29.11.1936