சீர்திருத்தமும் கட்சிகளும்

புதிய சீர்திருத்தம் என்றால் பதவிகளும், உத்தியோகங்களு மல்லாமல் மற்றப்படி அதனால் ஏழைப் பொது மக்களுக்கு இன்றைய நிலைமையை விட கடுகளவு நன்மைகூட கிடையாது என்பது அறிவுள்ள மக்கள் எல்லாம் அறிந்ததும், நாணயமுள்ள மக்கள் எல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடியதுமாகும்.

புதிய பதவிகளுக்கும், உத்தியோகங்களுக்கும் தகுந்தபடி புதிய புதிய செலவுகளும் உண்டு என்பதையும் அறிஞர்கள் அறியாமலிருக்க மாட்டார்கள். இந்தச் செலவுகள் ஏழைமக்கள் தலையில்தான் விடியப் போகின்றனவே ஒழிய புதிய செலவுக்கு ஈடுகொடுக்க பழைய செலவைக் குறைத்துக் கொள்ள புதிய சீர்திருத்தத்தினால் ஒரு நாளும் முடியப் போவதில்லை.

ஆகவே ஏழைப் பாமர மக்களுக்கு அதாவது விவசாயிகளுக்கும், தொழிலாளி மக்களுக்கும் மேலும் மேலும் தொல்லைகளும், ஏழ்மைத் தன்மைகளும் பெருகுவது தான் சீர்திருத்தம் என்றாலும் அதைப்பற்றி படித்த மக்களும் பிரபுக்களும் சிறிதும் லக்ஷ்யம் செய்யாமல் இன்னும் அதிகச் செலவில் புதிய புதிய “சீர்திருத்தங்களை” வரவேற்ற வண்ணமாயிருந்து வருகிறார்கள். இந்தப்படி வரவேற்பதில் புதிய சீர்திருத்தத்தினால் ஏற்படும் பதவிகளையும், உத்தியோகங்களையும் முழுவதையுமே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்களே) அடையவேண்டும் என்கின்ற ஆசையால் மற்றொருபுறம் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பாடுபடுகிறார்கள்.

பார்ப்பனரல்லாத மக்களோ முன்போல் “சுவாமிகள் சொன்னால் சரி” “அய்யர்வாள் சொன்னால் சரி” என்கின்ற மாதிரியாக இல்லாமல் கிட்டத்தட்ட பார்ப்பனர்களுக்குச் சமமாகவே எல்லாத் துறையிலும் இப்போது சரிபோட்டி போடுகிறார்கள். ஆகவே இனிமேல் பார்ப்பனரல்லாதார் போட்டியை அவ்வளவு லேசான போட்டி என்று சொல்லிவிட முடியாது.

உதாரணமாக இன்றைய நிலையில் சீர்திருத்தப் பதவிகளையும் உத்தியோகங்களையும் பெற பார்ப்பனரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் சிலரும், ஜஸ்டிஸ் கட்சியில் இடமும் நம்பிக்கையும் இல்லாதார் காங்கிரஸ் கட்சியின் பேரால் சிலரும் இரண்டிலும் நம்பிக்கையும், இடமும் இல்லாதவர்கள் வெளவால் கட்சியாக இருந்து கொண்டு சமயம் போல் நடந்து கொள்வதில் சிலருமாக இருந்து வருகிறார்கள் என்பது மாத்திர மல்லாமல் வேறு பேரால் ஏதாவது புதிய கட்சிகளை ஆரம்பிக்கலாமா என்று சிலரும் யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வளவு பேர்களையும் ஏமாற்றிவிட்டு எல்லாப் பதவிகளையும், உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே அடித்துக் கொண்டு போய்விடுவது என்பது இனி சுலபத்தில் நடந்து விடக்கூடிய காரியமல்ல. பார்ப்பனர்களின் தொல்லைகளாலும், வீணான கலாட்டாவினாலும் “காங்கிரஸ்காரர்களும் வெற்றி பெற்றார்கள்” என்று சொல்லும்படியான நிலைமை ஒரு சமயம் ஏற்பட்டாலும் பழையபடி பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் என்பது மாத்திரம் இனி கனவு கூட காணமுடியாது என்றே சொல்லுவோம்.

புதிய சீர்திருத்தத்தில் பார்ப்பனர்களுக்கு ஏதாவது ஆதிக்கம் வருவது என்பது சர்க்காரார் ஏதாவது உள்ளுக்குள் அவர்களுக்கு அனுகூலமாயிருந்து உதவி செய்தால் மாத்திரமே தான் அதுவும் சிறிது சாத்தியப்படலாமே ஒழிய மற்றபடி சர்க்கார் நடு நிலைமை வகித்தால் பார்ப்பன ஆதிக்கம் சிறிதுகூட ஏற்பட்டு விடாது என்று தைரியமாய்ச் சொல்லிவிடலாம்.

ஆனால் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் சத்திய மூர்த்தியாரும் அடிக்கடி கவர்னரை பார்த்து “நாங்கள் இனிமேல் நல்ல பிள்ளைகளாய் நடந்து கொள்ளுகிறோம்” என்று வாக்குறுதி கொடுத்து கெஞ்சுவதாலும் சர்க்காருக்கும் காங்கிரசுக்காரர்கள் அரசியலை நடத்திக் கொடுப்பதானால் தங்களுக்கு சிறிதுகூட தொல்லை ஏற்படுவதற்கு இடமில்லாமல் போவதோடு பாமர மக்களிடையிலும் தங்களுக்கு நல்ல பேர் இருக்கும்படி அவர்கள் (பார்ப்பனர்கள்) பிரசாரம் செய்வார்கள் என்கின்ற நம்பிக்கையும் ஏற்படக் கூடுமாதலாலும் சர்க்காரார் பார்ப்பனர் களுக்கு அனுகூலமாக இருந்தாலும் இருக்கலாம்.

யார் எப்படிப் பாடுபட்டாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை அரசியலில் காங்கிரஸ் (பார்ப்பன) ஆதிக்கம் ஏற்படுவது முடியாத காரியமே என்று மறுபடியும் கூறுவோம். காரணம் என்னவென்றால் முதலாவது பார்ப்பனர்களில் இன்று யோக்கியமான தலைவர் கிடையாது. தோழர் ராஜகோபாலாச்சாரியார் சாமர்த்தியமுள்ள தலைவர் என்றாலும் இன்றைய நிலைமையில் மற்ற மக்களுடைய அதாவது காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று சொல்லி விடுவதற்கில்லை.

காங்கிரசில் வந்து சேரும் பார்ப்பனரல்லாதார் எவரும் சத்தியமூர்த்தி என்றால் அவரை எப்படியோ சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆச்சாரியார் என்றால் பயப்படுகிறார்கள். பச்சையாய்ச் சொல்ல வேண்டுமானால் வெறுக்கவும் செய்கிறார்கள். அதோடு மாத்திர மல்லாமல் காங்கிரசில் ஆச்சாரியார் காரணமாகவே பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர் என்கின்ற உணர்ச்சி இப்போது வலுத்து வருகிறது.

இரண்டாவது ஆங்காங்குள்ள பெரிய மிராசுதாரர்கள், செல்வந்தர்கள், பெரிய செல்வாக்குள்ளவர்கள் ஆகியவர்கள் எல்லாம் அரசாங்கத்தார் காங்கிரசை ஆதரிக்கவில்லை என்று தெரிந்தால் உடனே காங்கிரசை விட்டு விலகி விடுவார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் அவர்கள் பார்ப்பன ரல்லாதார் என்கின்ற உணர்ச்சியை மறந்து விடுவார்கள் என்று சுலபத்தில் நம்பிவிட முடியாது. ஆகவே எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கப் போவதில்லை என்பதை ஆச்சாரியாருக்கு இப்போதே ஜோசியம் சொல்லி விடுகிறோம்.

வீணாக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலோர் நன்மைக்கும் உணர்ச்சிக்கும் விரோதமாக தேசீயத்தின் பேரால் இப்படி ஒரு போராட்டம் செய்து கொண்டிருப்பதில் பலன் என்ன என்பதை எடுத்து காட்டவே இவற்றை எழுதுகிறோமே ஒழிய மற்றபடி ஜோசியத்தில் பெயர் வாங்க அல்ல என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஆச்சாரியாருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் கொள்கையில் வெளிப்படையாய் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்கிறோம். யோக்கியமாய் பேசினால் இருவரும் புதிய சீர்திருத்தத்தை ஏற்று அரசாங்கத்தை நடத்திக் கொடுக்கின்றவர்களேயாவார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மாத்திரமே குறுக்கே இருக்கிறது. அதை ஆச்சாரியாரல்ல இனியும் வேறு யார் தடுத்தாலும், தடுக்கத் தடுக்க அடிக்கும் பந்து எழும்புவது போல் வளர்ந்து கொண்டும் பலப்பட்டுக் கொண்டும்தான் போகுமே ஒழிய இனி அந்த உணர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை. அன்றியும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர், தீண்டப்படாதவர் என்பவர்கள் ஆகியவர்களுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் இவ்வளவு என்று காங்கிரசே ஒப்புக்கொண்டாய் விட்டது. அந்தப்படியே தொகுதி பிரித்து வெகுகாலமாய் நடந்தும் வருகிறது. பார்ப்பனரல்லாதார்களுக்கு மாத்திரம் தடைப்படுத்துவதால் அது எப்படி நின்று விடும்? அல்லது அப்படித் தடை செய்வது எந்த விதத்தில் நியாயமானதாகிவிடும்?

ஆகவே இனியும் அதைத் தடைப்படுத்திக் கொண்டிருப்பதில் தனித் தொகுதி தேர்தல் முறைக்கு வழி காட்டுவதாகத்தான் முடியுமே ஒழிய அதை அடக்கிவிட முயற்சித்ததாக ஆகப்போவதில்லை.

ஆதலால் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்” என்று அதுவும் “சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை” என்று காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமானால் பெரியதொரு அளவுக்கு நாட்டில் அரசியலில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பும், சமூகத் துறையில் ஒருவருக்கொருவர் துவேஷமும் வளர்வதானது குறைவதோடு உண்மையாக மக்கள் நலத்துக்கு பாடுபடும் தியாக குணமுள்ளவர்கள் அரசியலைக் கைப்பற்றி மக்களுக்கு சிறிதாவது நன்மை செய்ய முடியும். அப்படிக்கில்லாமல் வீண் வம்பில் வாழ்நாளெல்லாம் காலம் கழித்து விட்டு துவேஷத்துக்கும் வெறுப்புக்கும் ஆசி கூறி விட்டு மாள்வதில் யாருக்குத்தான் என்ன பலன் ஏற்படும் என்பது விளங்கவில்லை.

இதை ஏன் இவ்வளவு தூரம் எழுதுகிறோம் என்றால் இவ்வளவும் போதாமல் இனியும் வெறும் செல்வவான்களாகவே வெற்றி பெறும்படியான மாதிரியில் தேர்தல் தொகுதி இனியும் திருத்தப்படப்போகின்றதென்று தெரிய வருவதாலேயே இதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

தோழர்களான டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்திர முதலியார், ஜார்ஜ் ஜோசப், வி.ஓ. சிதம்பரம் பிள்ளை முதலியவர்களை காங்கிரசைவிட்டு விரட்டி அடித்த பார்ப்பனர்கள் இப்போது பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் கெஞ்சிக் கெஞ்சி யெப்படிப்பட்டவர்களை காங்கிரசில் சேர்க்கப் பிரயத்தனப்படுகிறார்கள் என்று பார்த்தால் காங்கிரசின் நிலைமையும் காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) நடந்து கொண்டதின் அறியாமையும் நன்றாய் விளங்கும். ஆகவே காங்கிரசானது தனது தந்திரங்களின் பயனாய் “விலங்கைத் தறித்துவிட்டு குட்டையில் மாட்டிக் கொண்டது” போல் ஆகப்போகிறது என்பது நிச்சயம்.

குடி அரசு தலையங்கம் 23.02.1936

You may also like...