மன்னர் முடிவெய்தினார்
இந்திய சக்கரவர்த்தி ஜார்ஜ் மன்னர் தமது 71 வது வயதில் முடிவெய்தினார். எட்வர்ட் மன்னர் முடி புனைந்தார்.
“முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு, பிடி சாம்பலாவது” என்பது இயற்கையே யாகும். இதில் எவ்வித அதிசயமோ தனி விஷயமோ என்பது சிறிதும் கிடையாது.
மனிதனாகப் பிறந்தால் மாத்திரம் அல்ல, கல்லாகவோ வைரக் குன்றமாகவோ பிறந்தாலும்கூட கால பேதத்தில் இந்த முடிவையேதான் அடைந்து தீர வேண்டும். தோன்றின அழியும், அழிந்தன தோன்றும் என்பதே உலக இயற்கை. ஆதலால் விசனப்படுவது பயன்தரக் கூடியதன்று.
நமது சக்கரவர்த்தியார் என்னப்பட்ட ஜார்ஜ் அரசர் இந்தியாவின் நல்ல ஆட்சிக்கோ தீமை ஆட்சிக்கோ சம்மந்தப்பட்டவரன்று.
பிரிட்டிஷ் ஆட்சி அரசருக்கு கொடுத்துள்ள ஏதோ இரண்டொரு பாதுகாப்பு அதிகாரம் போக, பாக்கி அதிகாரங்கள் அவ்வளவும் ஜனப்பிரதிநிதி சபை என்று சொல்லப்படும் பார்லிமெண்டு சபையின் ஆட்சிக்கு உட்பட்டதாகும்.
ஆதலால் ஆட்சி சம்பந்தமான குற்றங்குறைகளை அரசருக்குப் பொருத்தி அவரது குணா குணங்களைப்பற்றி நாம் பேச நமக்கு நியாயம் இல்லை.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது இன்று உலகில் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகும். அதில் அரசர் பதவியும், சக்கிரவர்த்தி பதவியும் வகிப்பது என்பது ஒரு பெறுதற்கரிய பேறு என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது. அரசர் தனது சொந்த வாழ்வில் எவ்வித குறைக்கும், குற்றத்துக்கும் இடமில்லாமல் வாழ்ந்தது மனிதத்தன்மைக்கு பெருமை தரத்தக்கதேயாகும். மற்றும் ஜார்ஜ் அரசர் சராசரி இங்கிலாந்து மனித ஆயுளுக்கு ஒன்றுக்கு ஒன்றரையாகவும் வாழ்ந்திருப்பதும், அவ்வாழ்வில் இன்றைய முறையில் பெரிதும் மகிழ்ச்சியுடனும், சுகத்துடனும், போக போக்கியத்துடனும் இருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும்.
அவர் 1865 ம் வருஷம் ஜுன் 3 ந் தேதி பிறந்தார்.
1910ம் வருஷம் மே மாதம் 6ந் தேதி பட்டம் ஏற்றார். 1936ம் வருஷம் ஜனவரி 21 ந் தேதி முடிவெய்தினார். இவர் பிறப்பு, வாழ்வு, சாவு ஆகிய முறையும் பெருமையாகவே அனுபவித்த பெரியார் என்றுதான் சொல்லிப் பாராட்ட வேண்டும்.
குடி அரசு தலையங்கம் 26.01.1936