தென்னாட்டுக் காங்கரஸ்காரர் பதவி வேட்டைக்காரரே தோழர் நாரிமன் பேச்சு

 

~cmatter

வைஸ்ராய் அறிக்கையைப்பற்றி தோழர் நாரிமன் தனது அபிப்பிராயத்தைக் கூறுகையில் “தென்னாட்டிலிருக்கும் சமாதானப் பிரியர்களான (சென்னை மாகாண) காங்கிரஸ்காரர்களுக்குங் கூட வைஸ்ராயின் பிரசங்கம் சுறுக்கென்று தைக்குமென்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். பிரபல காங்கிரஸ்வாதியாகிய தோழர் நாரிமன் கூறிய இக்கூற்றிலிருந்து தென்னாட்டு காங்கிரஸ்காரர்கள் பதவி மோகக்காரர்களென்பதும் அவர்கள் லôயமெல்லாம் உத்தியோகங்கள் பெறுவதுதானென்பதும் தேசவிடுதலையிலோ பொது மக்கள் க்ஷேமத்திலோ, சுயமரியாதையிலோ ஒரு சிறிதும் கவலையில்லாதவர்களென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? காங்கிரஸ்காரர் பதவி மோகக்காரர்களென்று வேறு யாராவது கூறியிருந்தாலும் அந்தக் கூற்றைப் பற்றி தென்னாட்டு காங்கிரஸ்காரர்களும் பத்திரிகைகளும் வசைபாடலாம். பிரபல காங்கிரஸ்வாதியும் காங்கிரஸ் நடவடிக்கைகளில் கலந்து கொள்பவரும் பிரசித்தி பெற்ற வட நாட்டுத் தலைவர்களில் ஒருவருமாகிய தோழர் நாரிமன் கூறியவைகளை யார்தான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்?

தோழர் நாரிமன் கூறிய இவ்வுண்மை மொழிகளைக் கண்டு பொறாத ஒரு தமிழ் தினசரி பத்திரிகை வட நாட்டாரைக் குறைகூறி தென்னாட்டாரை உயர்த்திக் கூறி சமாதானம் செய்வதோடு தமிழ்நாட்டில் 215 ஸ்தானங்களுக்கு 150 ஸ்தானங்கள் காங்கிரஸ் பெற்றிருக்கிறதென்றும் நாரிமனைப் போல் வீரர்களும் சூரர்களும் நிறைந்த பம்பாய் மாகாணத்தில் 175 ஸ்தானங்களுக்கு 88 ஸ்தானங்கள்தான் காங்கிரஸ் பெற்றிருக்கிறதென்றும் இக்குறையை நிவர்த்திக்க தோழர் நாரிமன் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டாரென்றும் சவால் விடுக்கின்றது. மேலும் “தன் வீட்டைக் காக்க முடியாதவர்கள் பிறர் வீட்டைப் பற்றிக் குறை கூற முன் வருவது வீரமுமல்ல; புத்திசாலித்தனமுமல்ல” என்று நியாயமும் கூறுகிறதே தவிர தென்னாட்டார் பதவி வேட்டைக்காரர்கள் அல்ல என்பதற்கு ஒரு காரணமும் சொல்லவில்லை.

தென்னாட்டார் 159 ஸ்தானங்கள் பெற்றதற்கு காரணம் தென்னாட்டு பாமர மக்களை ஏமாற்றி வஞ்சிக்க என்றே வண்டி வண்டியாய் பொய்யும் புளுகும் அளந்து ஏமாற்றிய காரணமே ஒழிய அரசியல் ஞானமோ தேசபக்தியோ காரணமென்று யாராவது சொல்லமுடியுமா? ஆகவே தென்னாட்டு காங்கிரஸ்காரர்கள் யோக்கியதை உலகமறிந்திருப்பது போலவே தோழர் நாரிமனும் அறிந்திருப்பதில் அதிசயமொன்றுமில்லை. காலித்தனமாக வைவதற்குத் துணிந்து விட்டதாலேயே உண்மை மறைபட்டு விடாது.

காங்கிரசுக்கு நாணையமோ தைரியமோ இருந்தால் வைசிராய் அறிக்கையைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் யாரும் அபிப்பிராயம் கூறக்கூடாது என்று அடக்குமுறை உத்திரவு போட்டிருக்க முடியுமா?

குடி அரசு – துணைத் தலையங்கம் – 27.06.1937

You may also like...