மந்திரி சபை
மந்திரிசபை ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ்காரர்கள் அடிபட்ட சுணங்கன் குரைப்பது போல் தங்களது ஆத்திரத்தை மந்திரிகள் மீது காட்டுகிறார்கள். மந்திரிமார்களை தினமும் கழுதை, நாய் என்று வைத வண்ணமாயிருக்கிறார்கள்; தினமும் கண்டித்து தீர்மானம் போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். இந்த மந்திரிசபை நாளைக்குப் போய்விடும், இன்றைக்குப் போய்விடும் என்று அறிவில்லாமல் பொய்யையும் புளுகையும் வேண்டுமென்றே அளந்தவண்ணமாய் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை ரத்து செய்து கொண்டு வந்து அரசாங்கத்தை அடிபணிந்தாலொழிய இந்த மந்திரி சபை சீக்கிரத்தில் ஒழிந்துவிடும் என்று சட்டம் தெரிந்தவர்கள் யாரும் கருதமாட்டார்கள்.
சட்டத்தில் – சீர்திருத்த சட்டத்தில் விஷயம் தெளிவாக இருக்கிறது. மெஜாரிட்டி கட்சியார் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள நிலைமை இடம் கொடுக்கவில்லையானால் கவர்னர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தன்னிஷ்டப்படி நடத்தலாம் என்பது ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதை கவர்னர் பின்பற்றியாக வேண்டும்.
இப்போது மெஜாரிட்டி கட்சியாருக்கு (காங்கிரஸ்காரருக்கு) மந்திரி பதவி ஏற்க ஆசை இருந்தும் அவர்களது (மெஜாரிட்டி கட்சியாரது) முட்டாள் தனத்தினால் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள முடியாத நிலையைத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள் என்றும் இன்னம் அவர்களுக்கே ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தால் அதற்குள் தங்கள் முட்டாள் தனத்தைத் திருத்திக் கொண்டு வந்து சேரக்கூடும் என்றும் அரசாங்கம் கருதியதால் அரசாங்கத்தார் வேண்டுமென்றே மனப்பூர்வமாய் சம்மதித்து இனியும் 6 மாத வாய்தா கொடுத்திருக்கிறார்கள். இந்த 6 மாத வாய்தாவுக்குள் காங்கிரஸ்காரர்கள் தங்கள் குற்றத்தைத் திருத்திக் கொண்டுவரட்டும் என்று தவணை கொடுத்திருக்கிறார்கள். அந்தப்படி அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை என்று அரசாங்கத்தாருக்குத் தெரிந்தால் கவர்னர் அவர்கள் உடனே சட்டசபையைக் கூட்டி காங்கிரஸ்காரர்களின் நிலையை மறுபடியும் நாடு அறியும்படி செய்வார். அப்போது அதாவது சட்டசபை கூட்டப்பட்டவுடன் மெஜாரிட்டி கட்சியார் வெண்ணை வெட்டி சிப்பாய்கள் மாதிரி ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்தவுடன் மந்திரிகள் மீது நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானம் கொண்டு வருவார்கள். அப்போது, இப்போது அதிகாரத்தில் உள்ள மந்திரிகள் உடனே எழுந்து “எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நாங்கள் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளவில்லை” என்றும், “இன்னம் 4, 5 மாதத்திலாவது உங்களுக்கு புத்தி வராதா என்று கருதி புத்தி வரும்வரை சட்டசபையை கலைக்காமல் இருப்பதற்கு ஆக இந்த பொறுப்பை ஒப்புக்கொண்டோமே தவிர வேறில்லை” என்றும் சொல்லி “இதோ எங்கள் ராஜினாமாவை நீங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பிரேரேபிக்கும் முன்பே வாங்கிக்கொள்ளுங்கள்” என்ற ராஜினாமாவை வீசி எறிந்து விடுவார்கள். அப்போதும் ஒரு தடவை கவர்னர் அவர்கள் மெஜாரிட்டி கட்சியாரை (காங்கிரசுக்காரர்களை) இப்போதாவது உங்களுக்கு புத்தி வந்ததா, ஏதாவது உங்கள் முட்டாள்தனமான தீர்மானங்களை மாற்றிக் கொண்டீர்களா என்று கேட்பார். காங்கிரஸ்காரர்கள் ஏதாவது மாறுதல் செய்து கொண்டிருந்தால் மந்திரி பதவி கிடைக்கும். இல்லாதவரை கவர்னர் தானாகவே ஒரு பட்ஜட்டை தனது சொந்த அதிகாரத்தைக் கொண்டு தயார் செய்து வைத்து மறுபடியும் இம்மாதிரி மந்திரிசபையையே ஏற்படுத்தி மறுபடியும் ஒரு ஆறுமாத காலம் காங்கிரஸ்காரருக்கு புத்திவராதா என்று எதிர்பார்ப்பார். அதற்குப் பிறகும் 6 மாதத்தில் மற்றொரு சட்டசபை கூட்டம் கூட்டுவார். அதிலும் இதே கதியானால் சட்ட சபைகளை கலைத்து தேர்தல் வைப்பார். புது சட்டசபையும் இதே மாதிரி ஆனால் சபையைக் கலைத்து விட்டு சகல நிர்வாகத்தையும் தானே ஏற்றுக்கொண்டதாக விளம்பரம் செய்து விட்டு இதே மந்திரிகளையோ அல்லது வேறு ஆட்களையோ கூட்டியோ குறைத்தோ ஆலோசனைக் கர்த்தாக்களாக நியமித்துக்கொண்டு அவர்களது ஆலோசனைக்கு இணங்க 3 வருஷகாலம் ஆட்சி நடத்துவார். இதுதான் முடியாலாமே ஒழிய காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி மறுத்ததாலேயோ இனியும் நடக்கப் போகும் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களை பாமரஜனங்கள் தெரிந்தெடுத்து விட்டதினாலேயோ பிரிட்டிஷார் ஆட்சி நடத்தாமல் ஓடிப்போவார்கள் என்றோ எங்கும் அராஜகம் பெருகி கையில் வலுத்தவன், தந்திரத்தில் வலுத்தவன் தேசங்களை பங்கு போட்டுக்கொண்டு ஆச்சாரிக்கு ஒரு மாகாணம், சத்தியமூர்த்திக்கு ஒரு மாகாணம், அண்ணாமலைக்கு ஒரு மாகாணம், சுப்பையாவுக்கு ஒரு மாகாணம் என்று பட்டாபிஷேகம் ஆகி விடுமென்றோ யாரும் கருதிவிட வேண்டியதில்லை. வேண்டுமானால் காங்கிரசுக்காரர்கள் ஒன்று செய்யலாம். அதாவது மறுபடி மறுபடி எலக்ஷன் ஏற்படச் செய்வதால் கோடிக்கணக்கான ரூபாய்கள் பாழாக்கப்படலாம்; சர்க்காருக்கும் மக்கள் வரிபணத்தில் இருந்து பணம் பாழாக்கப்படலாம். பணக்காரர்கள் பணமும் பாழாக்கப்படலாம். இதைத்தவிர வேறு ஒன்றும் நடக்க முடியாது.
மற்றப்படி கவர்ன்மெண்டார் இன்றே சட்டசபையைக் கலைக்காததற்கு காரணம் மேலே குறிப்பிட்டதுபோல் பொது ஜனங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் அவசரப்பட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என்றும் பொறுத்து பார்ப்போம் என்றும் கருதியே ஒழிய வேறில்லை. இனி அடுத்த தேர்தலில் கண்டிப்பாய் மஞ்சள் பெட்டி வராது. ஆள் பெயர் சொல்லித்தான் ஓட்டுப்போட வேண்டிவரும். இதுவரை செய்த பித்தலாட்டப் பிரசாரம் இனிப் பலிக்காது. ஆதலால் இந்த சட்டசபை கலைந்தால் இனி நடக்கும் தேர்தலில் இன்றுள்ள ஆட்களில் கிட்டத்தட்ட பகுதிப்பேருக்குக் கூட ஓட்டுகள் கிடைக்க மாட்டாது என்பதை உறுதியாய்க் கூறுவோம்.
ஆகவே காங்கிரஸ்காரர்கள் மந்திரி வேலை பார்க்க “அதிர்ஷ்டம் இருக்கச்” செய்ய வேண்டுமானால் மரியாதையாய் தங்களுடைய உறுதிமொழிப் பித்தலாட்டத்தை விட்டு விட்டு மக்களை ஏமாற்ற “கூடுமானவரை கவர்னர்கள் ஒத்துழைப்பதாக ஜாடை காட்டினால் போதும்” என்று ஒரு தீர்மானம் செய்து கொண்டு மரியாதையாய் மந்திரிபதவியை ஏற்று தங்களின் வண்டவாளத்தை தங்களால் செய்யக்கூடியதை காட்டிவிட்டுப் போகட்டும். இல்லாதவரை இன்றைய நிலைமையை ஒரு மயிர்க்கால் அளவு கூட மாற்ற முடியாது என்பதுடன் எந்த விதத்திலும் காங்கிரசுக்கு சாவுமணி காத்துக்கொண்டிருக்கிறது என்றே உண்மையைக் கூறுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 11.04.1937